'கிளப்ஹவுஸ்' செயலியின் அதிகரித்து வரும் செல்வாக்கிற்கு மத்தியில், இதன் பெயரை தமிழாக்கம் செய்வது தொடர்பான விவாதமும் வெடித்தது. 'கிளப்ஹவுஸ்' செயலியை அழகாக 'சொல்லகம்' என மொழி பெயர்த்திருந்தனர். வாட்ஸ் அப்பை 'புலனம்' என்றும், ட்விட்டரை 'கீச்சு' என்றும், ஃபேஸ்புக்கை 'முகநூல்' என்றும் தமிழாக்கம் செய்யும் வரிசையில் கிளப்ஹவுஸ் என்பது சொல்லகம் ஆனது.
'சொல்லகம்' என்பது அருமையான சொல்லாக்கம்தான் என்றாலும், தொழில்நுட்ப வார்த்தைகளை மொழியாக்கம் செய்வது அவசியமானது, ஆனால், பெயர்ச் சொற்களையும், பிராண்ட்களையும் தமிழில் மாற்றுவது தேவையா எனும் வகையில் விவாதம் நடைபெறுகிறது. பிராண்ட் பெயரையும் தமிழில் கொண்டு வருவதே சரியானது எனும் வாதமும் தீவிரமாக வைக்கப்படுகிறது.
பிராண்ட் பெயரையும் தமிழாக்கம் செய்வதை விமர்சிக்க வேண்டுமா என்பது தெரியவில்லை. ஆனால், கிளப்ஹவுசை 'சொல்லகம்' என சொல்வதை நிச்சயம் விமர்சிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், இந்த அழகான, அருமையான தமிழ் வார்த்தை உணர்த்தும் பொருளில் 'கிளப்ஹவுஸ்' செயலி அமையவில்லை.
அகம் என்பதற்கு நாம் அறிந்த பொருளில் கிளப்ஹவுஸ் அமையவில்லை. உறுப்பினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் கிளப்களை குறிக்கும் வகையிலேயே அது அமைந்துள்ளது. எனவே, கிளப்ஹவுஸ் அனைவருக்குமானது அல்ல... அதில் சமத்துவம் இல்லை!
கிளப்ஹவுஸில் உள்ள பிரத்யேக தன்மையை உணர்த்த வேண்டும் எனில், தமிழில் அதை வேறு பெயரிலேயே அழைக்க வேண்டும். நிச்சயம் 'சொல்லகம்' அல்ல.
இந்த வாதத்தில் பிழை இருப்பதாக தோன்றலாம். கிளப்ஹவுஸ் எந்த பாகுபாடும் இல்லாமல், அனைத்து வகை உறுப்பினர்களையும் அனுமதிக்கும் செயலியாகத்தானே இருக்கிறது என கேட்கலாம். மேலோட்டமாக பார்க்கும்போது இது சரியாக தோன்றினாலும், யதார்த்தம் வேறு விதமாக இருப்பது கொஞ்சம் யோசித்தால் புரியும்.
கிளப்ஹவுஸ் செயலியின் அடிப்படை தன்மை என்ன? இது ஆடியோ மூலம் உரையாடலுக்கு வழிவகுக்கும் செயலி. யார் வேண்டுமானாலும், இதில் அறைகளை உருவாக்கி கொண்டு, மற்றவர்களை அழைத்து அவர்களுடன் உரையாடலாம். உறுப்பினர்கள் மற்ற அறைகளுக்கும் செல்லலாம், விவாதிக்கலாம். இந்த உரையாடல்களை முறைப்படுத்தவும் வழிகள் இருக்கின்றன.
எனவே, ஒலி வடிவில் கருத்து பரிமாற்றம் செய்ய விரும்புகிறவர்களுக்கு இந்த செயலி ஏற்றது. அந்த வகையில், இது முடிவில்லாத விவாத அறைகளை கொண்ட எல்லையில்லா அரங்கமாக அமைந்திருக்கிறது.
எல்லாம் சரி, ஆனால், கேட்கும் திறன் இல்லாதவர்கள் அல்லது செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளின் நிலை என்ன? இவர்கள் 'கிளப்ஹவுஸ்' உரையாடலில் பங்கேற்க என்ன வழி?
கேட்கும் திறன் இல்லாதவர்கள் 'கிளப்ஹவுஸ்' செயலியில் பங்கேற்க முடியாதது, அதன் மிகப்பெரிய குறை அல்லவா?
இந்த இடத்தில் இணைய அணுகல் சமத்துவம் பற்றி கொஞ்சம் பேசியாக வேண்டும். இணையம் அனைவருக்குமான பொதுவெளி. எந்தவித பாகுபாடும் இல்லாமல் அனைவரும் அணுகும் வகையில் இணையம் இருக்க வேண்டும். இணையத்தில் உருவாக்கப்படும் சேவைகளும் இவ்விதமே இருக்க வேண்டும்.
ஆனால், இணைய சேவைகளின் உருவாக்கம் பெரும்பாலானோரை மனதில் கொண்டு செய்யப்படுவதாக இருக்கிறது. அதாவது, ஐம்புலன்களில் எவ்வித பிரச்னையும் இல்லாதவர்கள் இயல்பாக பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஆனால், பார்வைக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளும், இதர குறைபாடு கொண்டவர்களுக்கும் இது பிரச்னையாகிறது.
உதாரணமாக, பார்வைத்திறன் மாற்றுத்திறனாளிகளால் இணையதளங்களில் உள்ள புகைப்படங்களை சரியாக பார்க்க முடியாது. அதே போல, பொடி எழுத்துக்களில் உள்ள செய்திகளை படிப்பதும் சிக்கலாக இருக்கும். குறைபாடுகள் கொண்டவர்கள் இணையத்தை அணுகுவதில் இன்னும் பல சிக்கல்களை இருக்கின்றன. இவற்றை எல்லாம் நாம் உணர்வதும் இல்லை, கவலைப்படுவதும் இல்லை.
ஆனால், இணையம் அனைவரும் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து வல்லுநர்களாலும், செயற்பாட்டாளர்களாலும் தொடர்ந்து வலியுறத்தப்பட்டு வருகிறது. இணைய வடிவமைப்பிலும், சேவை உருவாக்கத்திலும், அனைத்து பிரிவினரையும் மனதில் கொள்ள வேண்டும் என்பது உண்மையான இணைய சமத்துவமாக கருதப்படுகிறது.
இணைய சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இணையதளங்கள் பலவித குறைபாடு கொண்டவர்களும் அணுகும் வகையில் அமைந்திருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். இதற்கென, அணுகல்தன்மை நெறிமுறைகளே தனியே இருக்கின்றன.
ஒரு நல்ல இணையதளம் என்றால், அது அனைவரும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, புகைப்படங்கள் இருந்தால் அதை விளக்கும் குறிப்புகளும் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். துல்லியமாக பார்க்க முடியாதவர்களுக்கு இது உதவியாக இருக்கும். அதேநேரத்தில் பார்வை இல்லாதவர்களும் படத்தை உணரும் வகையில், அதன் ஒலிக்குறிப்பு அளிக்கப்பட்டிருக்க வேண்டும். எழுத்து வடிவத்தையும் ஒலியாக கேட்கும் வசதி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இப்படி பலவிதமாக, இணைய அணுகல் வசதி வலியுறுத்தப்படுகிறது. இப்போது, 'கிளப்ஹவுஸ்' சேவையை சீர்தூக்கிப் பாருங்கள். இந்த ஒலி வடிவ உரையாடல் சேவையில், செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க முடியாது என்பது மிகப் பெரிய விடுபடல் இல்லையா?
கிளப்ஹவுசில் நடைபெறும் விவாதங்களை செவித்திறன் குறைந்தோர் பின்தொடர என்ன வழி? இணையத்தில் இப்போது இயல்பாக இருக்கும், கேப்ஷன் வசதி அல்லது வரி வடிவ வசதி இந்த அறைகளிலும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லவா?
'ஜூம்' போன்ற வீடியோ சந்திப்புகளில் உரையாடும்போது, உரையாடலை வரி வடிவமாக பெறும் வசதி இருக்கிறதே. மேலும், வரி வடிவிலும் கருத்து பரிமாற்றம் செய்யலாமே.
'கிளப்ஹவுஸ்' ஒலி வடிவிலான சேவை என்றாலும், செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகளில் பயன்படுத்தும் வகையில் அது அமைந்திருப்பதுதானே முறை.
இந்த விடுபடலைத்தான் 'கிளப்ஹவுஸ்' மீதான முக்கிய விமர்சனமாக முன்வைக்கின்றனர். ஆரம்ப கட்டத்தில், இந்த விடுபடல் இருப்பதை புரிந்துகொள்ளலாம் என்றாலும், இந்தப் பிரச்னை சுட்டிக்காட்டப்பட்ட பிறகும் 'கிளப்ஹவுஸ்' இதை சீராக்க முயலவில்லை என்பது அதன் மீதான குற்றச்சாட்டாக அமைகிறது.
அதிலும் குறிப்பாக செவித்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள் இது தொடர்பாக முறையிட்டும், 'கிளப்ஹவுஸ்' இந்த குறையை சரிசெய்ய முன்வரவில்லை. அதுமட்டும் அல்ல, பார்வைக் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளில் ஒருவர் 'கிளப்ஹவுஸ்' உரையாடலை வேறு ஒரு செயலி மூலம், வரிவடிவில் பெற முயன்றபோது அவர் செயலியில் இருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார்.
'கிளப்ஹவுஸ்' பிரபலமானதை அடுத்து உருவாக்கப்பட்ட இதேபோன்ற போட்டி சேவைகளிலும் இந்தப் பிரச்னை இருக்கிறது என்கின்றனர். ட்விட்டர் ஸ்பேசஸ் பரவாயில்லை, அது வரிவடிவ வசதியை அளிக்கிறது என்கின்றனர்.
ஆனால், 'கிளப்ஹவுஸ்' உலக அளவில் வரவேற்பை பெற்ற நிலையிலும், அந்த சேவை அறிமுகமாகி ஓராண்டுக்கு மேலாகியும் அது இன்னமும் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறதே தவிர, தனது சேவைக்கு சமத்துவத் தன்மை இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டவில்லை என்கின்றனர்.
ஆக, குறிப்பிட்ட பிரிவினரை விலக்கும் பிரத்யேகத் தன்மை கொண்டிருக்கும் கிளப்ஹவுசை எப்படி அழகுத் தமிழில் 'சொல்லகம்' என சொல்வது? அது மேட்டுக்குடியினருக்கான கிளப் போன்றதொரு உரையாடல் மடம்தானே!
- சைபர்சிம்மன்
தொடர்புடைய கட்டுரை: பிரைவசி சிக்கல்கள், அத்துமீறல்கள்... ஆனாலும், 'கிளப்ஹவுஸ்' சேவையில் அலைமோதுவது ஏன்?