இந்த வீடு கோவையில் உள்ளது. இந்த வீட்டைப்பற்றி சொல்கிறார் வீட்டின் உரிமையாளர் நம்மிடையே பகிர்ந்துகொண்டவை...
“எங்க ஊர்ல பழைய காலத்து தொட்டிகட்டு வீடு இருக்கு. அதேபோல இருக்க வேண்டுமென்று ரொம்ப விரும்பிதான் என் கணவரும் எங்க பையனும் இந்த வீட்டை கட்டியிருக்காங்க. இந்த வீட்ல கோர்ட்டியார்ட்டும் (Courtyard), டைனிங் ஹாலும்தான் எங்களுக்கு ரொம்ப பிடித்த இடம். கான்கிரீட் வீடு ரொம்ப வெப்பமா இருக்கும். ஆனா, எங்களோட இந்த வீடு நல்லா குளிர்ச்சியா இருக்கும். இந்த வீட்டோட கிரஹப்பிரவேசத்துக்கு வந்த சொத்தக்காரங்க எல்லோரும், ‘வீடு ரொம்ப நல்லா இருக்கு. இதே மாதிரி நாங்களும் கட்ட விரும்புறோம்’னு போட்டோ எடுத்துட்டு போயிருக்காங்க”
சரி, அப்படி இந்த வீட்டில் என்னதான் ஸ்பெஷல்? பார்ப்போம்...
சிமெண்ட் பயன்பாட்டை குறைத்து கட்டப்பட்டுள்ள வீடு!
தென்னந்தோப்புக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டுக்கு லோ-பேரிங் பவுண்டேஷன் (Low Bearing Foundation) போடப்பட்டுள்ளது. ஆனால், இந்த பவுண்டேஷனுக்கு சிமெண்ட் கலவை பயன்படுத்தாமல், செங்கலை உடைத்து அதை பொடியாக்கி அதனுடன் சுண்ணாம்பு சேர்த்து சுருக்கி மோட்டா கலவையை பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த வீட்டில் சிமெண்ட் பயன்பாடு எந்த அளவுக்கு குறைக்கப்பட முடியுமோ அந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. வீட்டின் தரைத்திற்கு ரெட், எல்லோ, பிளாக் ஆக்ஸைடு (Red, Yellow, Black Oxide) பயன்படுத்தப்பட்டுள்ளது.
காரைக்குடி கட்டடக்கலை தூண்கள்!
பொதுவாக வீடுகளில் அமைக்கப்படும் காம்பவுண்டு சுவர் வித்தியாசமாக இருக்கும். அதேபோல இந்த வீட்டிலும் வித்தியாசமான சோப்ரிவால் டிசைனில் காம்பவுண்டு சுவர் (Shobri Wall Design Compound Wall) அமைக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்புறமுள்ள திண்ணை அமைப்பில் உட்காருவதற்கு கிரானைட் போடப்பட்டுள்ளது. அதனுடன் 4 தூண்கள் உள்ளன. இந்த திண்ணை அமைப்பில் சிட்அவுட் உடன் சேர்த்து மொத்தம் 6 தூண்கள் உள்ளன. இந்த தூண்கள் அனைத்தும் காரைக்குடி கட்டடக் கலையின் தூண்கள்தான். சிட்அவுட் தரைத்தளத்துக்கு எல்லோ ஆக்ஸைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேக்கு மரத்தால் செய்யப்பட்ட முன்கதவு!
இந்த வீட்டின் முன்கதவு, தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. ஆனால், இது காரைக்குடி கட்டடக் கலையை சேர்ந்தது. வீட்டுச் சுவரின் மேற்பூச்சுக்கு இரண்டு முறையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதில், முதலாவதாக மண், மணல், சிமெண்ட், அரிசி உமி மற்றும் தண்ணீர் கலந்த கலவையை பூசியிருக்கிறார்கள். அதற்கு மேல் பூசவும் இதே கலவைதான் பயன்படுத்தியுள்ளனர்; ஆனால், அரிசி உமிக்கு பதிலாக சுண்ணாம்பு சேர்க்கப்பட்டிருக்கும். இந்த இரண்டாவது கலவையில் என்ன கலர் மண்ணை சேர்க்கிறார்களோ, அதுதான் சுவரின் கலரை கொடுக்கும்.
டெரக்கோட்டா ஜாலி ஒர்க் (Terracotta Jali work)!
ஒரு வீட்டுடைய Heart, கோர்ட்டியார்ட் தான். அதற்கு காரணம், ஒரு வீட்டுக்கான வெளிச்சமும், நல்ல காற்றும் அதிகமாக நமக்கு கொடுக்கும் இடம் கோர்ட்டியார்ட். இந்த வீட்டின் கோர்ட்டியார்ட் தரைத்தளம் குவாரியில் கிடைக்கும் கழிவு கற்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த தரைத்தளம் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. இதற்கு மேலே ஜிஐ பைப் வைத்து ஃபிரேம் செய்து அதற்க மேல் டெரக்கோட்டா ஜாலி போடப்பட்டுள்ளது. இந்த முற்றத்துக்கான படிக்கட்டுகளுக்கு ஒயிட் கிரானைட் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தேக்கு மரத்திற்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டுள்ள டாடாஃபூ மரம்!
படிக்கும் அறையில் இருக்கும் கதவு மகாகனி மரத்தால் செய்யப்பட்டுள்ளது. அதனுடைய ஃபிரேம் டாடாஃபூ மரத்தால் செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த மரம் விலை குறைவானது. ஆனால், தேக்கு மரம் போல உறுதியானது. ஆகவே தேக்கு மரத்திற்கு மாற்றாக இந்த மரத்தை பயன்படுத்தி இருக்கிறார்கள். கோர்ட்டியார்ட் அருகில் உள்ள வராண்டா சீலிங் அமைக்க, வேங்கை மரத்தால் ஃபிரேம் செய்து அதற்கு மேலே மண்ணால் செய்யப்பட்ட சீலிங் பிளாக் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
காற்றோட்ட வசதியுடன் கூடிய பெட்ரூம்!
அடுத்ததாக இந்த வீட்டின் மாஸ்டர் பெட்ரூம். இந்த பெட்ரூமில் 3 ஜன்னல்கள் உள்ளன. காற்று நன்றாக உள்ளே வந்து வெளியே செல்ல வசதியாக இந்த 3 ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல இன்னொரு பெட்ரூமில் 2 ஜன்னல்கள். இதில், ஒரு பக்க ஜன்னல் அருகே ஃபே விண்டோ (Fay Window) அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பிளாக் கேலக்ஸி கிரானைட் (Black Galaxy Granite) போடப்பட்டுள்ளது.
செமி மாடுலர் கிச்சன்!
இந்த வீட்டின் சமையலறையை, செமி மாடுலர் (semi modular) சமையலறை என்றே சொல்லலாம். இங்கு சிம்னி (chimney) இருக்கிறது. ஆனால், மாடுலர் கிச்சனில் இருப்பது போன்ற சிம்னி இல்லை. அதனால் இதை செமி மாடுலர் கிச்சன் என்றே அழைக்கலாம். இந்த சமையல் அறையின் தரைத்தளத்துக்கு மேட் பினிஸ் வெர்ட்டிபைட் டைல்ஸ் (Matte Finish Vitrified Tiles) போடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் மேற்கூரைக்கு டபுள் டைல் ரூபிங் (Double Tiles Roofing) போடப்பட்டுள்ளது. அதன் ஃபிரேம் அமைக்க தென்னை மரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3 ஆயிரம் சதுரடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீட்டின் மொத்த செலவு 65 லட்சம்தானாம்!