ஒவ்வொரு வருஷமும், அக்டோபர் மாதம் 13ம் தேதி சர்வதேச `நோ ப்ரா டே’ என்று கடைபிடிக்கப்படுகிறது.
பெண்களின் உள்ளாடையை மையப்படுத்திய இந்த தினம் கடைப்பிடிக்கப்படுவதற்கான மிக முக்கிய காரணம், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காகத்தான். மார்பகப் புற்றுநோய்க்கும், ப்ராவுக்கும் என்ன தொடர்பு? இதை விளக்குவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
வரலாறு:
மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் அக்.13ம் தேதி `நோ ப்ரா டே’- அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவதுண்டு.
இந்த நாள் 2011-ம் ஆண்டுதான் முதன்முதலில் உருவாக்கப்பட்டது. அப்போது ஜூன் 9-ம் தேதிதான் `நோ ப்ரா டே’ என்று அனுசரிக்கப்பட்டது. பின் அடுத்த 3 ஆண்டுகளில், அதாவது 2014-ல், மார்பக புற்றுநோய் மாதமாக கருதப்படும் அக்டோபர் மாதத்தில் வரும் 13-ம் தேதிக்கு இந்த நாள் மாற்றப்பட்டுவிட்டது.
2013-ல், Marysol Santiago and Nadia Noor என்ற இருவரின் முயற்சியால், இந்த தினம் முதன்முதலில் கொண்டுவரப்பட்டது. இவர்களில் Marysol Santiago என்பவரின் சகோதரி, மார்பகப் புற்றுநோயால் மரணித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர், `மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மட்டுமே போதாது’ என்று கூறி Noor என்ற மார்பகப் புற்றுநோயுடன் போராடி வந்த பெண்ணின் துணையுடன், இந்த தினம் தொடர்பான ஆலோசனையை கொண்டு வந்தனர்.
`ப்ரா’வுக்கும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்கும் என்ன தொடர்பு?
உலகளவில் 8-ல் ஒரு பெண், தன் வாழ்நாளில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார், அதனுடன் போராடுகிறார், சில நேரங்களில் மரணிக்கவும் செய்கிறார். ஒரு பெண்ணின் உடலமைப்பில் மார்புப்பகுதியென்பது மிக முக்கியமானது. அப்படியான ஒரு பகுதியை, மார்பக புற்றுநோய்க்கு உள்ளாக்கும் ஒரு பெண் இழக்கிறார். இதனால் அவருக்கு நீண்ட நாள் மன அழுத்தம், சுயம் சார்ந்த சந்தேகங்கள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த மன அழுத்தத்திலிருந்து வெளியேற, மார்பகத்தை இழந்த சில பெண்கள் செயற்கை மார்பகங்களை அமைத்துக்கொள்ளும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. ஆனால் இப்படியான செயற்கை மார்பகங்களுக்கு, ப்ரா அணிவது சிரமமான காரியம். அளவு மாறுபாடு காரணமாக, இந்த நடைமுறை சிக்கல் உள்ளது. ஆகவே அவர்கள் ப்ரா அணிவதை பெரும்பாலும் தவிர்த்துவிடுவர்.
ப்ரா அணியாமல் இருப்பது, அவர்களுக்கு எந்தவித தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தக்கூடாதென்ற நோக்கத்திலும், அவர்களின் இந்த கடுமையான வழியில் `நாங்களும் உங்களோடு இருப்போம்’ என்று உறுதிசெய்யவும், உடனிருக்கும் பெண்கள் தாங்களும் ப்ரா அணியாமல் இருப்பதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கம்.
எப்படி இந்த தினத்தை கொண்டாடுவது?
விருப்பமுள்ள பெண்கள், இன்று ஒரு நாள் ப்ரா அணியாமல் இருக்கலாம்
அனைத்து பெண்கள் இந்த தினத்திலோ, அல்லது விரைந்தோ மார்பகப் பரிசோதனைக்காக மகளிர் நல மருத்துவரை சந்திக்கவும். உடன், வாரம் ஒருமுறை ஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகங்களை சுய பரிசோதனை செய்து, எந்தவொரு சின்ன உபாதையையும் அறிகுறியையும் உதாசீனப்படுத்தாமல் இருக்கவும்.
மார்பகப் பரிசோதனைக்கான மருத்துவ வழிமுறைகள்:
வருடத்திற்கு ஒருமுறை மம்மோகிராஃபி எனப்படும் எக்ஸ்ரே-வை பயன்படுத்தி செய்யப்படும் மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ளலாம்.
அல்ட்ரா சவுண்ட் மற்றும் மார்பக புற்றுநோய் வருவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பவர்களுக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை செய்யப்படுகிறது.
இவையன்றி, ஒவ்வொரு பெண்ணும் தன் மார்பகத்தை சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தின் ஏதேனுமொரு பகுதியில் சிறு கட்டி இருந்தால்கூட மருத்துவரை உடனடியாக அனுக வேண்டும். சிலர் தொடர்ந்து வலியை உணர்ந்தாலும், உடனடியாக மருத்துவ ஆலோசனை அவசியம்.