சிறப்புக் களம்

பாஜகவின் வெற்றி நாயகன் ஒரு முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

பாஜகவின் வெற்றி நாயகன் ஒரு முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ..!

rajakannan

மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் பாரதிய ஜனதா கட்சி மிக வலுவான வெற்றியை பதிவு செய்துள்ளது. திரிபுரா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவில் பாஜக கூட்டணி நெருக்கடி கொடுத்துள்ளது. யாருக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சி சிறிய கட்சிகளின் உதவியுடன் ஆட்சியை அமைக்கும் முயற்சியில் உள்ளது. 

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பாஜகவுக்கு இது மிகப்பெரிய வெற்றி என்பதில் ஐயமில்லை. இப்படி ஒரு வெற்றி பாஜகவுக்கு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது எது என்ற கேள்வி எழுந்துள்ளது. திரிபுராவில் கிடைத்த வெற்றி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திரிபுராவில் பிரச்சார குழுவில் ஹிமாந்த பிஸ்வா சர்மா, சுனில் தியோதர், ராம் மாதவ் மற்றும் பிப்லப் குமார் டிப் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில், மிகவும் முக்கிய ஒரு சக்தியாக இருந்தவர் பிஸ்வா சர்மா. 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவின் மிகப்பெரிய சொத்தாக சர்மா திகழ்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பாக 2016-ம் ஆண்டு அசாம் சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றியை சாத்தியப்படுத்தியதில் சர்மாவின் அரசியல் வியூகம் அதிக அளவில் பேசப்பட்டது. 

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஹிமாந்த பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அசாம் மாநிலம் குவாஹத்தி நகரைச் சேர்ந்த சர்மா ஜலுக்பரி தொகுதியில் 2011 முதல் 2015 ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். காங்கிரஸ் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர். 2015 ஆம் அவரால் டெட் தேர்வு மூலம் 50 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக் புகார்கள் எழுந்தது. முதலமைச்சர் தருண் கோகாய்க்கும் அவருக்கு இடையே முரண்பாடு ஏற்பட்டது. அப்போது, ராகுல் காந்தியையே சர்மா வெளிப்படையாக விமர்சித்தார். 2015ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்தார் சர்மா. 2016 ஆம் ஆண்டு பாஜக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். 

பின்னர், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வடகிழக்கு ஜனநாயக கூட்டணி அமைப்பதற்கு சர்மா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதற்கு பரிசாக அசாம் மாநில வெற்றியை பாஜகவிற்கு அளித்தார். இது பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய திருப்பு முனை என்று கூறப்படுகிறது. சர்மா அசாம் மாநிலத்தையும் தாண்டி வடகிழக்கு மாநிலங்களில் செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறார். அதனால், அடிமட்டம் வரை ஊடுருவி அவர் பணியாற்றி உள்ளதாக கூறுகிறார்கள். அசாம் வெற்றியை அடுத்து மூன்று மாநில தேர்தலுக்கான முக்கிய பொறுப்பாளியாக சர்மா நியமிக்கப்பட்டார். 

மூன்று மாநிலங்களிலும் பிரதமர் மோடி, அமித்ஷா ஒரு பக்கம் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டாலும், அடிமட்ட கட்சி பணிகளை மேற்கொண்டவர் சர்மா தான். திரிபுரா வெற்றியை பாஜவின் மேல்மட்ட பொறுப்பாளர்களே வியந்து பார்த்திருப்பார்கள். 25 ஆண்டுகால வலுவான கட்சி தோற்கடிப்பட்டதோடு, காங்கிரஸ் கட்சியை படுதோல்வி அடைந்துள்ளது.