Ponmudi Facebook
சிறப்புக் களம்

ஊட்டி, கொடைக்கானல் போர் அடித்துவிட்டதா? இதோ புதிய சொர்க்கம்! கேரளாவில் ஒரு காஷ்மீர்! - ’பொன்முடி’

வாழ்க்கையில் பார்த்தே ஆக வேண்டும் என நீங்கள் ஒரு பட்டியல் தயார் செய்தால் அதில் பொன்முடியை முதலிடத்தில் சேருங்கள்.

Justindurai S

எப்போதும் ஊட்டி, கொடைகானல் சென்று போர் அடித்துவிட்டதா? புதிதாக ஏதாவது மலை வாசஸ்தலத்திற்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் உடனே செல்ல வேண்டியது மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் பொன்முடி என்ற அழகான ஊருக்குதான். பசுமையான மலைத்தொடர்களையும் இயற்கையின் அழகை அனுபவிக்க நினைப்பவர்களுக்கும் மிகச்சிறந்த இடமாக விளங்குகிறது. குறிப்பாக மலையேற்றத்திற்கு மிகச்சிறந்த இடமாக இது சுற்றுலாவாசிகளால் கருதப்படுகிறது. இத்தனை அழகையும் வைத்திருப்பதால்தான் பொன்முடியை கேரளாவின் காஷ்மீர் என அழைக்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் இதமான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.

சரி, பொன்முடிக்கு டூர் செல்ல முடிவெடுத்தாச்சு. எப்படி செல்வது என யோசிக்கிறீர்களா? திருவனந்தபுரத்திலிருந்து 53 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த மலை வாசஸ்தலத்திற்கு செல்ல போக்குவரத்து வசதிகளைப் பற்றி கவலைப்படத் தேவையேயில்லை.

பொன்முடி வரலாறு

அழகான மலைச்சி கரங்கள், அருவிகள், தேயிலை தோட்டங்கள், தெளிந்த நீரோடைகள், மிளகு, கிராம்பு, ஏலக்காய் தோட்டங்கள் என காணும் இடங்கள் எல்லாம் அதிசயங்களை ஒளித்து வைத்திருப்பதால் ‘தங்கச் சிகரம்’ என பெயரைப் பெற்றுள்ளது பொன்முடி. கடல் மட்டத்திலிருந்து 915 அடி உயரத்தில் இருக்கும் இந்நகரம், பல அழகிய மலை பூக்களுக்கும் கவர்ச்சிகரமான வண்ணத்துப் பூச்சிகளுக்கும் வாழ்விடமாக இருக்கிறது.

விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாக கருதப்படும் ரிஷி பரசுராமர் இந்த அழகிய நகரத்தை உருவாக்கினார் என நம்பப்படுகிறது. இன்று சுற்றுலாவாசிகள் குவியும் நகரமாக காணப்பட்டாலும், வரலாற்று பக்கங்களை புரட்டிப் பார்த்தால் பிரச்சனைக்குரிய பகுதியாகவே பொன்முடி இருந்து வந்திருக்கிறது. இந்நகரத்தை வர்மாக்கள், வேனாட்கள் ஆகியோர் ஆட்சி புரிந்துள்ளனர். இதன் காரணமாக முகாலயர்களும் சோழர்களும் தொடர்ச்சியாக படையெடுப்பு நடத்தியிருக்கிறார்கள். இப்படி பல பிரச்னைகளை தொடர்ந்து சந்தித்து வந்திருந்தாலும் இந்த அழகிய நகரம் ஒருபோதும் தனது பொலிவை இழந்ததில்லை.

சூழலியல்

பொன்முடியைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிலப்பரப்புகள் ஒருவரின் ஆர்வத்தை நிச்சயம் தூண்டாடக்கூடியது. வனப்பகுதிகள், தேயிலைத் தோட்டங்கள், பச்சை பசேலென சிகரங்கள், ஆளை விழுங்கும் பள்ளத்தாக்குகள் என சொல்லிக் கொண்டே போகலாம். குறிப்பாக 283 வகையான பறவையினங்களுக்கு வாழ்விடமாக பொன்முடி திகழ்கிறது. இதில் பெரும்பாலானவை அழிவின் விளிம்பில் இருக்க கூடியவை.

நீலகிரி வானம்பாடி குருவி, பட்டை வால் புல் குருவி, மலபார் சாம்பல் இருவாச்சி, வர்ணக் காடை போன்ற விசித்திர பறவைகளை நீங்கள் இங்கு கண்டு ரசிக்கலாம். கேரளாவில் காணப்படும் ஒட்டுமொத்த பறவையினங்களில் 59 சதவிகிதம் நீங்கள் பொன்முடியில் பார்க்கலாம். மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் 332 வகையான வண்ணத்துப் பூச்சிகளில், 195 வகைகள் பொன்முடியை தங்கள் வாழ்விடமாக கொண்டுள்ளது. மேலும், அருகிவரும் உயிரினங்களான திருவிதாங்கூர் ஆமை, மலபார் மரத்தேரை, மலபார் தாவும் தவளை போன்றவற்றிருக்கும் இது வாழ்விடமாக திகழ்கிறது.

நீங்கள் ஏன் பொன்முடிக்கு கட்டாயம் செல்ல வேண்டும் தெரியுமா?

திருவனந்தபுரத்தில் இருக்கும் உள்ளூர்வாசிகளுக்கு தங்கள் வார இறுதி நாட்களை கொண்டாடுவதற்குச் சிறந்த இடமாக பொன்முடி திகழ்கிறது. இரைச்சலான நகர வாழ்க்கையில் இருந்து தப்பித்து தங்கள் குடும்பத்தினர் நண்பர்களோடு விடுமுறைகளை சந்தோஷமாக கழிக்க பலர் இங்கு வந்து குவிகிறார்கள். நீங்கள் ஒரு இயற்கை விரும்பியோ அல்லது காட்டுயிர் ஆர்வலராகவோ இருந்தால் இங்கிருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசிப்பீர்கள். அரிய வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை புகைப்படம் எடுப்பதற்காகவே பலர் எங்கிருந்தெல்லாமோ வருகிறார்கள். இங்கு உங்கள் கண்களுக்கு விருந்து படைக்கும் காட்டு மல்லி மற்றும் மலைப் பூக்களை வேறு எங்கும் காண முடியாது.

வருடம் முழுவதும் இதமான காலநிலை இருக்கிறது. சுற்றுலாவாசிகளுக்காகவே தங்கும் விடுதிகள், குடில்கள் நிறைய உள்ளன. இங்கிருக்கும் விடுதிகளில் தங்கும் போது நமது வீட்டில் தங்கியிருப்பது போன்ற உணர்வையே கொடுக்கும். உள்ளூர்வாசிகளின் விருந்தோம்பல் உங்களின் மனதை குளிர்விக்கும். உங்கள் விடுமுறையை கொஞ்சம் வித்தியாசமாக அனுபவிக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால், மரக்குடில்களில் தங்கலாம். மரம் மேல் பரண் அமைத்து அதில் சிறிய குடில்களை அமைத்திருப்பார்கள். மரத்தில் அமர்ந்தபடியே இயற்கையின் அழகை கண்டு ரசிக்கலாம். இந்தச் சிறிய நகரம் சுற்றுலாவாசிகளின் மையமாக உருமாறியுள்ளது. வாழ்க்கையில் பார்த்தே ஆக வேண்டும் என நீங்கள் ஒரு பட்டியல் தயார் செய்தால் அதில் பொன்முடியை முதல் இடத்தில் சேருங்கள்.

ஒரு பறவையின் கோணத்தில் நீங்கள் காண்பீர்கள்

நீங்கள் தினசரி வாழ்க்கையில் கண்டிராத பல அதிசயங்களை ஒளித்து வைத்துள்ளது பொன்முடி. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உங்கள் வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத அனுபவத்தை பெற வேண்டுமென்றால் இப்போதே பொன்முடிக்குச் சென்று மலையேற தொடங்குங்கள். மேற்கு தொடர்ச்சி மலை மீது ஏற பல வழிகள் உள்ளது. அதில் வரையாடு முட்டு பாதை மிகவும் பிரபலமானது. இப்பாதை மலையேறுவதற்கு சற்று கடினமாக இருந்தாலும் உச்சிக்குச் சென்றதும் சுற்றுப்புறத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் ஒரு பறவையின் கோணத்தில் நீங்கள் காண்பீர்கள்.

கருப்பசாமியின் கோவிலை தரிசிக்கலாம்

பொன்முடியில் பல மலையேற்ற பாதைகளை கேரள வனத்துறை சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறது. கல்லார் ஆற்றில் தொடங்கும் இந்தப் பாதை 15கிமீ தூரத்திற்கு பச்சை பசேலென பசுமையான மலைகளின் ஊடே நம்மை கூட்டிச் செல்கிறது. போகும் வழியில் அய்யப்ப சாமியின் நண்பனாக கருதப்படும் கருப்பசாமியின் கோவிலை தரிசிக்கலாம். இறுதியாக பொன்முடி மலை உச்சியில் இருக்கும் கேரள அரசின் விடுதிக்குச் சென்றடைவோம்.

பொன்முடியை சுற்றிலும் நம் மனதை கவரும் வகையிலான பல இடங்கள் உள்ளது. நீங்கள் பொன்முடிக்குச் சென்றீர்கள் என்றால், மலையேறும் பாதை, எக்கோ பாய்ண்ட், பெப்பரா வன உயிரின சரணாலயம், மீன்முட்டி அருவி ஆகியவற்றை மிஸ் செய்து விடாதீர்கள். இங்குள்ள பனிப்புகை மூடிய பள்ளத்தாக்குகள் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இப்படி பொன்முடியைச் சுற்றிலும் பல அருமையான இடங்கள் உள்ளன.

பெப்பரா வனவிலங்கு சரணாலயம்

பொன்முடி நகரின் எல்லையில் அமைந்திருக்கும் பெப்பரா வனவிலங்கு சரணாலயம் பல வகையான பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் புகலிடமாகும். 53 கிலோமீட்டருக்கு பரந்து விருந்துள்ள இந்த சரணாலயத்தில் சிங்கவால் குரங்குகள், ஆசிய யானைகள், மிளா, மலபார் சாம்பல் இருவாச்சி, சிறுத்தைகள் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். வருடம் முழுவதும் இந்த சரணாலயத்திற்கு மக்கள் செல்லலாம். 27 வகையான மீன்கள், 13 வகையான நீர்நில வாழ்வன, 46 வகையான ஊர்வன, 233 வகையான பறவைகள் மற்றும் 43 வகையான பாலூட்டிகள் இந்த சரணாலயத்தில் உள்ளன.

மீன்முட்டி அருவி

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது மீன்முட்டி அருவி. 300 மீட்டர்  உயரத்தில் இருந்து விழும் இந்த அருவி மூன்று அடுக்குகளைக் கொண்டது. மழைக்காலத்தில் இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் அந்த சமயத்தில் செல்வது ஆபத்தானது. மற்றபடி இது அமைதி ததும்பும் அழகான இடம். அமைதியாக இயற்கையை ரசிக்க விரும்புபவர்கள் தாராளமாக இங்கு வரலாம். இந்த அருவியைச் சுற்றி பசுமையான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளது இன்னும் அழகைக் கூட்டுகிறது.

அகஸ்தியர் கூடம்

மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் உயரமான சிகரங்களில் ஒன்றாக இதைக் கூறலாம். 1,868 மீட்டர் உயரமான இங்கிருந்து கானகத்தின் மயக்கும் அழகை நீங்கள் இங்கு தரிசிக்கலாம். இங்குச் செல்ல வேண்டுமென்றால் வனத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும். இதன் அருகிலேயே உயிர்க்கோளக் காப்பகம் உள்ளது.

அரன்முளா படகு போட்டி

திருவணந்தபுரத்திலிருந்து 128கி.மீ. தொலைவில் இருக்கும் அரன்முளா பம்பை நதிக்கரையில் அமைந்துள்ளது. பொன்முடி செல்லும் வழியில் இந்த ஊருக்கு நீங்கள் செல்லலாம். இங்கு 1,700 ஆண்டு பழமையான மிகவும் பிரசித்திப்பெற்ற கிருஷ்னர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒணம் பண்டிகையின் போது கோவிலில் நடைபெறும் படகு போட்டி மிகவும் பிரபலமானது.

அர்ஜூனரின் பிறந்தநாள் அன்று இப்போட்டி நடைபெறுகிறது. மிகப்பெரிய பாம்பு படகுகள் ஜோடியாக நகரும் போது அங்கிருக்கும் மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கும். தலைப்பாகையுடன் கூடிய பாரம்பரிய உடை அணிந்திருக்கும் படகோட்டி பாரம்பரிய பாடலை பாடியபடி படகை செலுத்துவார். திருவிழா உற்சாகம் உங்களையும் தொற்றிக் கொள்ளும். ஓணம் பண்டிகையின் போது விடுமுறையை கழிக்க உங்கள் குடும்பத்தினரோடு பொன்முடி சென்றால் இந்த படகு போட்டியை தவற விடாதீர்கள்.

சாகச விளையாட்டுகளின் மையம்

நீங்கள் ஒரு சாகச விளையாட்டுப் பிரியரா? அப்படியென்றால் பொன்முடி உங்களை நிச்சயம் ஏமாற்றாது. மலையேற்ற வாசிகளுக்கு இது மிகச்சிறந்த இடமாகும். அருகில் ஓடும் கல்லார் ஆறு படகு சவாரிக்கும் சறுக்கு விளையாட்டுக்கும் பெயர் போனது. பொன்முடி மலைகள் பாராகிளைடிங் செய்வதற்கு ஏற்ற இடமாகும். மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மற்ற சிகரங்களை ஒப்பிடும் போது இது மிகவும் பாதுகாப்பானது.