தமிழகத்தில் தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் தொலைதூர பேருந்துகள் செல்லும் நெடுஞ்சாலையோரங்களில் பல உணவகங்கள் செயல்படுகின்றன. குடிநீர் முதல் கழிப்பிடம் வரை பல வித பயன்பாடுகளுக்கு மக்கள் இந்த உணவகங்களை நாட வேண்டிய அவசியம் இருக்கின்றது.
பெரும்பாலும் இத்தகைய உணவகங்களில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலை நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் நிர்ணயிக்கப்படும் விலையைக் காட்டிலும் அதிகமாக இருப்பதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். நீண்ட தொலைவுப் பயணங்களில் ஒருவேளை உணவாவது இத்தகைய உணவகங்களில் சாப்பிட வேண்டிய கட்டாய நிலையும் உள்ளது. அத்தகைய சூழலில் குடும்பத்தோடு பயணிக்கும் ஒரு பயணி டிக்கெட் விலைக்குச் சமமாகவோ, அதைவிட அதிகமாகவே உணவிற்கு செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. இவைதவிர, குடிநீர், கழிப்பறை கட்டணம் என கூடுதல் செலவுகளும் உண்டு.
சொந்த வண்டியில் பயணிப்பவர்களுக்கேனும் சிறந்த உணவகம் தேடி செல்லும் வாய்ப்பு அமைகிறது, ஆனால் பேருந்து பயணிகளுக்கு அப்படி இல்லை. சில இடங்களில், பேருந்து ஓட்டுனர்கள், ஒப்பந்த அடிப்படையில் முறையான வசதிகள் இல்லாத, சுகாதாரமற்ற உணவகங்களில் வண்டியை நிறுத்துவதும் நடக்கிறது. பயணிகளுக்காக, அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் தொடங்கப்பட்ட நெடுஞ்சாலை உணவகங்களில் பல மூடப்பட்டு விட்டன. மீதமுள்ள உணவகங்கள் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. பல நேரங்களில் இத்தகைய உணவகங்களில் பேருந்துகள் கட்டாயமாக நிறுத்தப்படுகின்றன. தனிப்பட்ட முறையில் பேருந்து நடத்துனர், ஓட்டுனருக்கு இலவசமாக உணவு வழங்கி, கமிஷன் கொடுத்து குறிப்பிட்ட உணவகங்களில் வண்டியை நிறுத்த வைப்பதும் நடக்கிறது. இங்கெல்லாம் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விலையை விட கூடுதல் விலையிலேயே பொருட்கள் விற்கப்படுகின்றன. இதெற்கெல்லாம் தீர்வாக, அரசு தலையிட்டு நியாயமான முறையில், தரமான உணவுப் பொருள்களை இத்தகைய உணவகங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பயணிகளின் வேண்டுகோளாக இருக்கிறது
நெடுஞ்சாலையில் உணவகங்கள் அமைக்க எந்தெந்த துறைகளிடம் அனுமதி பெற வேண்டும், அங்கு விற்கப்படும் உணவுகளின் விலை என்ன?
பொதுவாக சாலை ஓரம் இருக்கும் சாதாரண கடைகளில் சாப்பிடும் உணவின் விலைக்கும், நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகங்களின் விலைக்கும் பெரிய அளவில் வித்தியாசம் உண்டு.
நெடுஞ்சாலை உணவகங்களின் விலைப் பட்டியல்
சாதாரண உணவகம்: காபி ரூ.15
நெடுஞ்சாலை உணவகம்: காபி ரூ.30 - ரூ.50
சாதாரண உணவகம்: தேநீர் ரூ.10
நெடுஞ்சாலை உணவகம்: ரூ.30 - ரூ.40
சாதாரண உணவகம்: இட்லி ரூ.15
நெடுஞ்சாலை உணவகம்: ரூ.30 - ரூ.40
சாதாரண உணவகம்: பொங்கல் ரூ.30
நெடுஞ்சாலை உணவகம்: ரூ.60 - ரூ.80
சாதாரண உணவகம்: வடை ரூ.10
நெடுஞ்சாலை உணவகம்: ரூ.60 - ரூ.80
சாதாரண உணவகம்: சாப்பாடு ரூ.70
நெடுஞ்சாலை உணவகம்: ரூ.90 - ரூ.150
நெடுஞ்சாலை உணவகங்கள் - தேவைப்படும் அனுமதிகள்
கட்டடத்திற்கான அனுமதி
காவல் துறையின் தடையில்லா சான்றிதழ்
வணிக அனுமதிச் சான்று
உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி சான்றிதழ்
இந்திய உணவு பாதுகாப்பு, தர ஆணையத்தின் சான்றிதழ்
சுமார் 24 துறைகளிடம் அனுமதி பெற வேண்டும்.
இது தொடர்பாக மதுரை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த குமார் பேசுகையில், ''நெடுஞ்சாலைகளில் இயங்கும் கடைகள் எதிர்கொள்ளும் சவால்கள் நிறைய உள்ளன. முதலீடு அதிகமாக இருக்கிறது. அங்கு தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவது மிகப்பெரிய சிரமம். தொழிலாளர்களே கிடைப்பதில்லை. நகரம் என்றால் வந்துவிடுவார்கள். நெடுஞ்சாலைக்கடைகளுக்கு தொழிலாளர்கள் எப்படி வருவார்கள்?. அப்படியே வந்தாலும் அவர்களின் போக்குவரத்து செலவுக்கும் பணம் தரவேண்டும். அருகிலிருக்கும் கிராமங்களிலிருந்து தான் தொழிலாளர்களை அழைத்து வர வேண்டியிருக்கிறது. பெண்களும் இருப்பதால் அவர்களை இரவில் பாதுகாப்பாக வீட்டுக்கு கொண்டு சென்று விட வேண்டிய கடமையும் எங்களுக்கு உண்டு. வியாபாரம் நடக்கும் என்று எந்தவித உத்தரவாதமும் இல்லை. மிச்சமாகிவிட்டால் அந்த உணவை கீழே தான் கொட்ட வேண்டும். சிலநாட்கள் பேருந்து வேன் என கூட்டம் குமியும். சில நாட்கள் ஈ ஆடும். நெடுஞ்சாலைகளில் எதையும் கணிக்க முடியாது'' என்றார்.