சிறப்புக் களம்

கடல் உணவுகளில் அதிகரிக்கும் உலோகங்கள்... மீன் பிரியர்களின் நிலை என்ன?

Sinekadhara

தினசரி நாம் எத்தனைப் பொருட்களை வாங்குகிறோம்? அவற்றில் எத்தனை பொருட்களை நாம் முழுவதும் பயன்படுத்துகிறோம்? எதையெல்லாம் பயன்படுத்தாமல் அல்லது பயன்படுத்திய கழிவுகளை தூக்கி எறிகிறோம் என்று சிந்தித்துண்டா?

தினம் நாம் எறியும் கழிவுகள் எங்கு சேருகிறது? யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் சிந்திக்க கூட நமக்கு நேரம் இருப்பதில்லை என்பதுதான் உண்மை. குறிப்பாக பெருநகரங்களின் நிலை சற்றுக் கவலைக்கிடமாகவே இருக்கிறது என்பதை பொன்னேரி, ஒரத்தநாடு மற்றும் மெட்ராஸ் கால்நடை மருத்துவ கல்லூரிகள் மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மீன்வள கல்லூரிகள் சேர்ந்து நடத்திய சமீபத்திய ஆய்வு நமக்கு உணர்த்துகிறது.

ஆம், நாம் அதிகமாக விரும்பி சாப்பிடுகிற கடல் உணவுகளில் உலோகங்களின் அளவு அதிகமாக இருப்பது ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. சென்னையில் ஏரிகள் மற்றும் நீர்நிலைகளில் அதிகமாக தூக்கி எறியப்படுகிற கழிவுகள் அனைத்தும் நாம் எடுத்துக்கொள்ளும் கடல் உணவுகள் மூலம் நமது தட்டுக்கே வந்துவிடுகிறது என்கிறது அந்த ஆய்வு.

சென்னையில் பிரதான மீன்பிடிப்பு பகுதிகளாக எண்ணூர், ராயபுரம்(காசிமேடு) மற்றும் பட்டினபாக்கத்தில் பிடிக்கப்பட்ட கடல் உணவுகளின் மாதிரிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில் க்ரோமியம், நிக்கல், மாங்கனீசு, ஜிங்க், லித்தியம் மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்கள் தவிர காப்பர், லெட் மற்றும் இரும்பும் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதில் பல உலோகங்கள் நமது உடலுக்கு தேவையானதுதான் என்றாலும், இவை அதிகமாக செறிந்துள்ள கடல் உணவுகளை அடிக்கடி உட்கொள்ளும்போது அது கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயம் போன்ற உறுப்புகளை பாதிப்பதுடன், கேன்சர் நோய் உருவாகவும் காரணமாக அமைகிறது.

இந்த மூன்று இடங்களிலுமே மீனவர்கள் தினமும் ஃப்ரஷ்ஷாக பிடித்த கடல் உணவுகளை விற்கின்றனர். மூன்று இடங்களிலும் எடுக்கப்பட்ட கடல் உணவுகளின் மாதிரிகளில் பட்டினபாக்கத்தில் பிடிக்கப்பட்ட கடல் உயிரினகளில் ஒரு கிலோவுக்கு 10.56 மில்லிகிராம் உலோகமும், ராயபுரம்(காசிமேடு) மாதிரிகளில் ஒரு கிலோவுக்கு 10.63 மில்லிகிராம் உலோகமும், எண்ணூர் மாதிரிகளில் ஒரு கிலோவுக்கு 10.7 மில்லிகிராம் உலோகமும் இருப்பது கண்டறியப்பட்டது.

அதில் அதிகப்படியாக ஒரு கிலோ நண்டில் 11.7 மில்லிகிராமும், ஒரு கிலோ இறாலில் 9.9 மில்லிகிராமும், ஒரு கிலோ மீன்கள் மற்றும் ஸ்க்விட்களில் 10.4 மில்லிகிராம் உலோகமும் இருப்பதாக அந்த ஆய்வுக்கு தலைமைவகித்த எச்.சுரேஷ்கண்ணன் தெரிவித்திருக்கிறார்.

நண்டுகளுக்கு உணவாக அளிக்கப்படும் சிறுமீன்கள் மற்றும் இறந்த சிறு உயிரினங்களில் அதிக உலோகங்கள் செறிந்திருப்பதும் கடல் உணவுகளில் உலோகம் அதிகரித்திருப்பதற்கு காரணம் என்கிறது தேசிய கடல்சார்ந்த ஆராய்ச்சி நிறுவனம். மேலும் மீன்கள் தங்கள் உடலிலிருந்து தானாகவே உலோகம் போன்ற கழிவுகளை வெளியேற்றிவிடும் தன்மை கொண்டது. ஆனால் நண்டுகளில் இந்த தன்மை மிகவும் குறைவு என்கிறது அந்நிறுவனம்.

மேலும் நண்டுகளில் உலோகங்களை செரிக்கவைக்கிற, கழிவுகளை வெளியேற்றுகிற ஹெபாடோபான்க்ரியாஸ் என்ற கணையம் போன்ற உறுப்பின் செயல்திறன் மிகவும் குறைவு என்கிறது அந்நிறுவனம்.

இந்த ஆராய்ச்சிக்காக ஒவ்வொரு இடங்களில் இருந்தும் மீன், நண்டு, ஸ்க்விட் போன்ற வகைகளில் தலா 15 மாதிரிகள் பயன்படுத்தப்பட்டது. இவை அனைத்திலுமே நிக்கல் அதிக அளவில் இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு அதிகப்படியான உலோகத் தொழிற்சாலைகளின் கழிவுகளை கடலில் கலக்கவிடுவதே காரணம் என்று கூறுகின்றனர்.

இந்த உணவுகளை மனிதர்கள் அடிக்கடி விரும்பி சாப்பிடும்போது அது உணவுப்பாதையையும், மற்ற உறுப்புகளையும் கண்டிப்பாக பழுதடையச் செய்யும் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள்.

க்ரோமியம், மாங்கனீஸ், நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்கள் மனித உடலின் ஆரோக்கியத்தில் முக்கியப்பங்கு வகிப்பதுடன், அதுவே அதிகமாகும்போது பாதிப்புகளையும், பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்த நிலை தொடர்ந்தால் கடல் உணவுகள் உடலுக்கு நல்லது என்று நினைத்து தினமும் உட்கொள்ளும் மக்களின் உடல்நிலை என்னவாகுமோ?

Courtesy - Times of India