சிறப்புக் களம்

ஆப்சென்டில் அதிமுக நடிகைகள்...!

ஆப்சென்டில் அதிமுக நடிகைகள்...!

webteam

ஆப்சென்டில் அதிமுக நடிகைகள்...!

எல்லா நடிகைகளுக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை, அரசியல் அதிர்ஷ்டம். அப்படியே கிடைத்தாலும் மக்கள் செல்வாக்கு? அது ஜெயலலிதா போன்ற சிலருக்கு மட்டுமே வாய்க்கும். சரி, இந்த கட்டுரை அதை பற்றியதல்ல. ஒவ்வொரு கட்சியும் தங்கள் ‘கொள்கை’களை மக்களிடம் கொண்டு சேர்க்க, நடிகர், நடிகைகளைத்தான் பயன்படுத்துகிறது. அவர்களின் பிரபலம், அதை எளிதாக்கும் என்ற நம்பிக்கை. அப்படி அதிமுகவில் சேர்ந்த நடிகைகள் இப்போது கப்சிப் ஆகியிருக்கிறார்கள்.

நடிகை சி.ஆர்.சரஸ்வதி:


சுவரில்லாத சித்திரங்கள், எங்க சின்ன ராசா, தங்கமனசுக்காரன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார் சி.ஆர்.சரஸ்வதி. டி.வி. சீரியல்களிலும் நடித்துள்ள சரஸ்வதி, அதிமுகவின் செய்தி தொடர்பாளர்களில் ஒருவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சரஸ்வதிக்கு தோல்விதான் கிடைத்தது. இருந்தாலும் அசராமல் கட்சி பணியாற்றிய சரஸ்வதியின் புகழ், ‘அம்மா’வின் மறைவுக்குப் பிறகு பரபரவென பற்றிக்கொண்டது. போயஸ்கார்டன் இல்லத்தில் எல்லா மீடியாவுக்கும் சசிகலா ஆதரவு பேட்டியை அமர்க்களமாக அளித்து வந்தவர் இவர்தான். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடிகை கவுதமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத, அதற்கு சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்த கண்டனம் இப்போதும் காணக்கிடைக்கிறது யூடியூப்களில். இப்படியெல்லாம் கட்சிப் பணியாற்றிய சரஸ்வதி, இப்போது எந்த டீமை ஆதரிப்பது என்பதில் குழம்பி, ஆஃப் ஆகியிருக்கிறார் என்கிறார்கள் அதிமுகவில்.

விந்தியா:


‘சங்கமம்’ படத்தில் அறிமுகமான விந்தியா, தொடர்ந்து திருநெல்வேலி, என் புருஷன் குழந்தை மாதிரி உட்பட ஏகப்பட்ட படங்களில் நடித்தார். நடிகை பானுப்பிரியாவின் சகோதரர் கோபியை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற விந்தியா, அதிமுகவில் சேர்ந்தார். கடந்த 2011 மற்றும் 2016 தேர்தலில் அதிமுகவுக்காக, திறந்த ஜீப்பில் நின்றபடி தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார். அப்படியெல்லாம் கட்சிக்காக உழைத்த விந்தியா, ‘அம்மா’ இறப்புக்குப் பிறகு அமைதியாக இருக்கிறார். திடீரென்று ஒருநாள் அம்மா சமாதிக்குச் சென்ற விந்தியா, ‘என் தோட்டத்தில் விளைந்த மாம்பழங்களை அம்மா சமாதியில் வைத்து வணங்க வந்தேன்’ என்றார். இவரும் அணிக் குழப்பத்தாலேயே அமைதியாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

சிம்ரன்:


விந்தியாவுடன் கூட்டணி போட்டுப் பிரச்சாரம் செய்த இன்னொரு நடிகை, சிம்ரன். தனது செல்லத் தமிழால், கட்சிக்காக ஓட்டுக்கேட்டு வந்த சிம்ரனும் ‘அம்மா’வின் மறைவுக்குப் பிறகு அமைதியாகிவிட்டார்.

நமீதா:


விஜயகாந்தின் ‘எங்கள் அண்ணா’ மூலம் தமிழுக்கு அறிமுகமான நமீதாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தமிழகத்திலும் தெலுங்கிலும். ‘மக்கள் சேவைக்காக அரசியலுக்கு வர விரும்புகிறேன். பல கட்சிகளிடம் இருந்தும் அழைப்பு வந்துள்ளது’ என்று கூறிக்கொண்டே இருந்த இந்தக் கவர்ச்சி புயல், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அம்மா முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகியது. ‘ஹாய் மச்சான்ஸ்’ என்கிற அவரது கொஞ்சும் தமிழுக்காகவே கூடியது கூட்டம். இவரும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சைலன்ட் ஆகிவிட்டார். விரைவில் தேசிய கட்சியொன்றில் சேருவார் என்கிறார்கள்.

ஆர்த்தி:


காமெடியில் ரசிகர்களை சிரிக்க வைத்த ஆர்த்தி, ஜெயலலிதா முன்னிலையில் தன்னை அதிமுக இணைத்துக்கொண்டார் கடந்த 2014 ஆம் ஆண்டில். தொடர்ந்து கட்சிக்காக பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்று வந்த ஆர்த்தி, இப்போது கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். அம்மா இல்லாத கட்சியில் சேர மனமில்லை என்றிருக்கிறார் ஒரு பேட்டியில். இவரது கணவரும் காமெடி நடிகருமான கணேஷ் (எ) கணேஷ்கர், பாஜகவில் இருக்கிறார்.

-பாணபத்திர ஓணாண்டி