சிறப்புக் களம்

குரங்கணி மலை தீ விபத்திற்கு இதுதான் காரணமாம்..?

Rasus

குரங்கணி மலையில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 40 பேர் சிக்கினர். இரண்டு குழுக்களாக மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் 12 பேர் திருப்பூரில் இருந்து சென்றவர்கள் என்றும், 24 பேர் சென்னையில் இருந்து சென்றவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. தீயில் சிக்கிய 15 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 10பேருக்கு கடுமையான தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இரவு நேரம் என்பதால் மீட்புப் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன.

இந்நிலையில் குரங்கணி மலையில் கடந்த வார காலமாகவே தீ எரிவதாகவும், ஆனால் அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுவரை தீ அணைக்கப்படவில்லை எனவும் குரங்கணி பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “ மலைப்பகுதியில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. ஆனால் இந்த முறை கடந்த ஒருவாரமாகவே தீ எரிந்து வருகிறது.  நாங்களும் ஃபேஸ்புக் உள்ளிட்டவைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். ஆனால் அதிகாரிகள் தீயை அணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.

தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “ இப்பகுதியில் அடிக்கடி மழை பெய்வது இல்லை. இதனால் அதிகப்படியான வெப்பத்தால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இதுஒரு புறம் இருந்தாலும் ஒருசிலர்கள் மலைக்கு கீழே பீடி, சிகரெட் போன்றவற்றை பற்றவைத்து அதனை அணைக்காமல் அப்படியே போட்டுவிட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் தீ மெது மெதுவாக பற்றி எரிந்து மலையின் உச்சிக்கே சென்றுவிடுகிறது. இதுமட்டுமல்லாமல், மலைப்பகுதியில் தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக அங்கு வாழும் உயிரினங்களுக்கு சரிவர உணவு கிடைப்பதில்லை. எனவே அவை உணவை தேடி கீழே வருகின்றன. கீழே வரும் விலங்குகள் தோட்டப் பயிர்களை மேய்ந்துவிடுமோ என்ற பயத்தில் சிலர் வேண்டுமென்று தீ வைக்கின்றனர். அந்தத் தீயும் மேலே வரை பலநேரங்களில் சென்றுவிடுகிறது” எனத் தெரிவித்தனர்.