சிறப்புக் களம்

வணக்கம் நான் அட்மின் பேசுகிறேன் !

வணக்கம் நான் அட்மின் பேசுகிறேன் !

webteam

பெரியாரின் சிலை அகற்றப்பட வேண்டும் என்று நான் எழுதவில்லை, என்னுடைய அட்மின் தான் எழுதினார் என்று ஹெச்.ராஜா என் போன்ற அட்மின் மீது பழியைத்தூக்கி போட்டிருக்கிறார்.ஒரு அட்மினாக என்னால் என்னவெல்லாம் செய்ய முடியும்? என்னவெல்லாம் செய்ய முடியாது? என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரிவதில்லை. எனக்குத் தோணுவதை எல்லாம் எழுதறதுக்கு இது என்ன என்னோட ப்ரொபைல் பேஜா? குருநாதரின் ஐடி அல்லவா? தைரியமா இருந்தா இப்ப வீசு? என்று வடிவேலு பாணியில் மாட்டிவிட்டு ஓடிவிட முடியுமா என்ன? 

நீங்கள் நினைப்பது போல நான் இஷ்டத்துக்கு எழுதி போஸ்ட் செய்துவிட்டு ஓடிவிட முடியாது. அப்படி செய்ய முடியும் என்றால், டீமானிடைசேஷன் அறிவித்த அன்றே “நரேந்திரமோடி ஒழிக” என்று போஸ்ட் செய்திருக்க மாட்டானா? அந்த அட்மின் ?
கடந்த சில ஆண்டுகளாக நான் இந்தத் துறையில் இருக்கிறேன். பலரிடம் பணியாற்றியிருக்கிறேன். ஒவ்வொன்னும் ஒவ்வொரு டைப்பு, உதாரணமாக ஒருவர். “தம்பி நான் சொல்ல சொல்ல டைப் பண்ணி அதை அப்டியே ஃபேஸ்புக்ல போஸ்ட் பண்ணனும் சரியா?” என்று பக்கத்திலேயே உட்கார்ந்து ஒவ்வொரு வார்த்தையாக பார்ப்பார். தம்பி இந்த இடத்துல “த்” வரும் பா என்ற அளவிற்கு நுணுக்கமாக கவனிப்பார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

சில பெரிய தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்கே போனாலும் பின்னாடியே போய் போட்டோ எடுத்து அதுல எது நல்லா இருக்கோ அதை மட்டும் அழகா போட்டோஷாப் செய்து அவரிடம் காட்டி ஓகே என்று சொன்னால் தான் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்ற முடியும். சில சமயம், தம்பி அவன் என்னைய கலாய்ச்சிட்டான் நாமளும் பதிலுக்கு அவனை கலாய்ச்சு மீம் ரெடி பண்ணனும். உனக்குத் தெரியுமா? என்று கேட்பார்கள். நானும் மீம் ரெடி செய்து கொடுப்பேன். என்னுடையே வேலை என்பது ரொம்ப சிம்பிள். கம்யூனிஸ்ட் கட்சியின் அட்மினாக வேலை செய்தால் கம்யூனிஸ்ட் போலவே யோசிப்பேன். கார்ப்பரேட் கம்பெனியின் அட்மினாக இருந்தால் கார்பரேட் போல யோசிப்பேன். யோசனை என்னுடையது. ஆனால் அதை வெளியிட வேண்டுமா வேண்டாமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 

சரி என்னை ஏன் வேலைக்கு வைத்துக்கொள்கிறார்கள்? ரொம்ப சிம்பிள். இவர்களுக்கு டைப் அடிக்க தெரியாது. போட்டோஷாப் செய்யத் தெரியாது. யாராவது இன்பாக்ஸுக்கு வந்து மெசேஜ் அனுப்பினால் அவர்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்கும் அளவிற்கு நேரம் கிடையாது. எனவே எனக்கு சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். நான் இவர்களுக்காக எப்பொழுதும் ஆன்லைனிலேயே இருக்க வேண்டும். சரி வேலை முடிஞ்சி வீட்டுக்கு போய் நிம்மதியா தூங்கலாம் என்றால் அதுவும் முடியாது. ராத்திரி 11 மணிக்கு கால் வரும். “தம்பி ஒரு முக்கியமான தலைவர் இறந்து போயிட்டாரு. அவருக்கு உடனே இரங்கல் எழுதணும். நீங்க எழுதி அனுப்பிட்டீங்கன்னா நான் அதை ஓகே பண்ணிருவேன்” என்பார். 

அல்லது அவர் சொல்ல சொல்ல அந்த நாலு வரியை நான் எழுத வேண்டும். போஸ்ட் செய்ததும் அவர் வீட்டிலிருந்தபடியே பார்த்து போன் செய்து சில மாற்றங்கள் இருந்தால் சொல்வார். சில பேர் என்னை நம்பி யூசர் நேம் பாஸ்வர்ட் கூட தரமாட்டார்கள். அந்த அளவுக்கு ஜாக்கிரதையாக இருப்பார்கள். ஆனால் பிரச்னை என்று வரும்போது மட்டும் என்னைக் கைகாட்டிவிட்டு ஓடிவிடுவார்கள். என்னுடைய கவலையெல்லாம், நாளை எச்.ராஜாவின் பேஜில் எது வந்தாலும் “இவனா இருக்குமோ?” என்று என்னை யோசிப்பார்களே என்பது தான். 

 - ஸ்வரா வைத்தீ
(இணையத்தள வர்த்தக ஆலோசகர் )