உலக சுகாதார நாள் (World Health Day) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1948-ஆம் ஆண்டில் நடந்த உலக சுகாதார அமைப்பின் முதல் கூட்டத்தில், 1950-ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நாள் கடைபிடிக்கப் பட வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டு உலக சுகாதார நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த உலக சுகாதார நாள் சிறப்புத் தொடர் வரும் 7 -ம் தேதி வரை, உடல் மற்றும் மன நலம் உட்பட அதன் பல பரிமாணங்களை அலசுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு விஷயத்தை மையமாக வைத்து சுகாதார விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அந்த வகையில் 2017-க்கான கருப்பொருள், ’Depression: Lets Talk’ என்னும் மன அழுத்தம் குறித்து பேசுவது பற்றிய விழிப்புணர்வு.
சமீபத்திய ஆய்வுகளின்படி, உலகம் முழுவதும் 300 மில்லியன் பேர், மனஅழுத்தத்தால் பாதிப்படைந்துள்ளதாகவும், இது 2005ல் இருந்து 2015 வரை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடலில் ஏற்படும் குறைபாடுகள் அல்லது நோய்களுக்காகக் காட்டப்படும் அக்கறையின் அளவில், மன அழுத்தம் உட்பட பல மனநோய்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.
சிக்கலான, சிகிச்சை அளிக்கப்படாத மன அழுத்தம், ஒருவரது தின நடவடிக்கைகள் மற்றும் அடிப்படை கடமைகளைக் கூட செய்யமுடியாத நிலைக்கு ஆட்படுத்துகிறது. மன அழுத்தத்தின் பொதுவான அறிகுறிகளான ஆற்றலின்மை, பசியெடுக்கும் தன்மையில் மாறுதல், அதிகமான அல்லது குறைவானத் தூக்கம், தீவிர கவனச் சிதறல், தன்னம்பிக்கையின்மை, கழிவிறக்கம், குற்றவுணர்ச்சி, தன்னை வருத்திக்கொள்ளும் நடவடிக்கைகள் மற்றும் தற்கொலை எண்ணம் ஆகியவற்றை உணர்ந்தாலோ, நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் தெரிந்தாலோ மனநல மருத்துவர் அல்லது மனநல ஆலோசகர்களைச் சந்தித்து தீர்வு காண முயற்சிப்பது அவசியம்.
உலக சுகாதார மையத்தின் மன நல மருத்துவர்களில் ஒருவரான சக்சேனா, மனநலக் குறைபாட்டைச் சரிசெய்வது குறித்த உரையில், மன அழுத்தம் மற்றும் அதைக் குணப்படுத்தும் வழிகள் குறித்து சிந்திப்பது என்பது தொடக்கம் மட்டுமே என்றும் மன நல சேவைகளின் தரத்தை, அவசியத்தை வலியுறுத்தி, உலகின் கடைக்கோடி மக்களுக்கும் அதை சென்றடைய செய்வதுதான் முதன்மையானது எனவும் குறிப்பிடுகிறார்.
மன அழுத்தம், தனிமனிதனின் ஆளுமையை சிதைப்பதில் தொடங்கி, குடும்ப, சமூக உறவுகளில் மட்டுமின்றி பணியிடங்களிலும் பிரதிபலித்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ஒட்டுமொத்த சமூகமும் நாடும் இதன் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதனால், மன நலம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் அதிகமாக ஏற்படுத்துவது இந்நாளின் தேவையாக இருக்கிறது.