சிறப்புக் களம்

கர்நாடக முதல்வர்களை பாடாய்ப்படுத்தும் அரசு பங்களா: வாஸ்துபடி வீட்டை மாற்றும் குமாரசாமி

webteam

கர்நாடகாவின் 24வது முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டுள்ளார் மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி. ஆனால் இந்தக் கனவு மிக லேசாக நடந்துவிடவில்லை. அவர் போகாத கோயில் இல்லை. வேண்டாத தெய்வங்கள் இல்லை. அந்த அளவுக்கு அவர் ஆண்டவனை மனப்பூர்வமாக நம்பி நடைப்பயணம் செய்து முடித்துள்ளார். 

சமீபத்தில் கர்நாடகத்தில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 222 தொகுதிக்கு தேர்தல் நடைப்பெற்றது. பாஜகவுக்கு 104 இடங்களிலும், காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து 104 பேர் ஆதரவுடன் எடியூரப்பாவும், காங்கிரஸ் உள்ளிட்ட 117 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக குமாரசாமியும்‌ ஆட்சியமைக்க வஜுபாய் வாலாவிடம் உரிமை கோரினர்.

பாஜவை சேர்ந்த முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததையடுத்து, எடியூரப்பா கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார். பெரும்பான்மை நிரூபிக்க ஆளுநர் அவருக்கு 15 நாள் அவகாசம் கொடுத்த நிலையில், அடுத்த நாளே பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த நாள் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா செய்தார். இதையடுத்து காங்கிரஸ் ஆதரவுடன் 117 எம்எல்ஏக்களை கொண்ட குமாரசாமியை பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். மே 21ஆம் தேதி ஆட்சியமைப்பதாக இருந்தது. 

இருப்பினும் அன்றைய தினம் ராஜூவ் காந்தி நினைவு நாள் என்பதால், பதவியேற்பு இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. 

அதன்படி இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கர்நாடக ஆளூநர் வஜூபாய் வாலா பதவிப் பிரமாணம் செய்து வைக்க, குமாரசாமி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். இதன் மூலம் கர்நாடகாவின் 24வது முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றுள்ளார். அவருடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பரமேஸ்வரா துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஆந்திர முதலமைச்ச்சர் சந்திரபாபு நாயுடு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், மாயாவதி, தேவகவுடா, மல்லிகார்ஜூனா கார்கே, சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். ஏறக்குறைய இந்த அரியணை ஏற்பு விழாவில், பாஜகவிற்கு எதிராக ஒரு கூட்டணியை தென்னிந்திய அரசியல் கட்சிகள் சேர்ந்து கட்டி எழுப்பியுள்ளனர். 

இத்தனை பெரிய போராட்டத்திற்கு பின்புலமாக இருந்த குமாரசாமி மன அமைதியோடு இருந்திருக்க முடியுமா என்ன? அவரது மன பதட்டங்களை அவர் தேடித்தேடி போய் கொட்டிய இடங்கள் கோயில்கள். பல சந்நிதிகள். அங்கேதான் அவர் ஆறுதல் தேடிக்கொண்டிருந்தார். கடந்த மூன்று நாட்களாகவே அவர் ராகுகால பூஜையில் மூழ்கி இருந்தார் என்கிறது கன்னட ஊடங்கங்கள். அதற்காக அவர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது நெருங்கிய ஜோதிடர்கள் கொடுத்த அறிவுரையின் படி அவர் தனது ஒவ்வொரு அடியையும் மிகுந்த கவனத்தோடு நகர்த்த வேண்டும். ஆகவேதான் அவ்வளவு பொறுமை காக்கிறார் குமாரசாமி. 

அவர் பதவியேற்பதற்கு முன்பாக லக்ஷ்மிநரசிம்ஹ சுவாமி கோயில் மற்றும் அவரது சொந்த ஊரான ஹோலேநரசிபுராவில் உள்ள சிவன் கோயில், அடுத்து ஸ்ரீ க்‌ஷேட்ரா தர்மஸ்தலா மற்றும் ஸ்ரீநேரி ஷாரதா கோயில் என அவர் பூஜை செய்த கோயில்கள் ஏராளம். இவை எல்லாம் ராகுகால முன் எச்சரிக்கைகாக.

அதே போல அவர் தனது அரசு வீட்டைக்கூட மிக ஜாக்ரதையாக தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல் கசிந்து வருகிறது. ஈசான மூலை கணக்குப் படி அவர் கிழக்கு முகம் பார்த்த வாசல் வைத்த வீட்டை தேர்வு செய்துள்ளார். மேலும் அவர் தேர்வு செய்து வைத்துள்ள வீட்டில் நவீன வசதிகள் அடங்கிய ஐந்து படுக்கை அறைகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. சுறுங்க சொன்னால் அது ஒரு டுப்ளஸ் பங்களா. இந்த வீட்டில் தற்சமயம் கர்நாடக உயர் அதிகாரி கே ரத்ன பிரபா வசித்து வருகிறார். குமாரசாமி தேர்வு செய்திருக்கும் இந்த வீடு விரைவில் ரத்ன பிரபாவின் கையை விட்டு போக உள்ளது. 

இந்தப் பங்களா பெங்களூருவிலுள்ள பாலப்ரூயேவில் உள்ளது. இது ஒரு அரசு கெஸ்ட் ஹவுஸ். இதன் அறைகள் முழுக்க அழகான வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. மேலும் மரக்கட்டைகளால் செய்யப்பட்ட மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆகவே வெக்கை இல்லாத சூழல் வீட்டில் எந்தக் காலத்திலும் நிலவும். ஏறக்குறைய சொல்லப் போனால் ஒரு வனப்பகுதியிலுள்ள கெஸ்ட் ஹவுஸில் இருக்கின்ற குளுகுளுப்பும், இதமும் கிடைக்கும். ஆகவே தான் இந்த பங்களாவை பயன்படுத்த விரும்பி இருக்கிறார் குமாரசாமி. 

இந்த வீட்டின் மொத்தப்பரப்பளவு 20 ஆயிரம் ஸ்கொயர் ஃபீட். மிக பிரமாண்டமான மைதானம், பூங்கா இந்த வீட்டை சுற்றி உள்ளது. அத்துடன் பசுமை குறையாத புல்வெளியும் உள்ளது. அப்புறம் சாப்பாட்டு மேஜை, வரவேற்பறை, ஹால், வீட்டுக்கு தேவையான சாமான்களை போட்டு வைக்கும் தனி வீடு, வேளை ஆட்கள் தங்க தனி குவார்டரஸ் என பலதும் உள்ளன. 

இந்த பங்களாவின் அருகில்தான் 'ஜின்ஸெட்' குடியிருப்பு உள்ளது. இந்தப் பங்களாவைதான் 1994 முதல் 1996 வரை கர்நாடகாவின் முதல்வராக பதவி வகித்த தேவே கவுடா பயன்படுத்தி வந்தார். முதல்வர்களுக்காக இருந்த ‘அனுக்ரஹா’ ஏறக்குறைய எல்லா முதல்வர்களுக்கான அதிகாரப்பூர்வமான வீடாக இருந்தது. ஆனால் இந்த வீடு அவ்வளவு ராசியில்லாத வீடாக கருதப்படுகிறது. இந்த வீட்டில் தேவே கவுடா வசித்தக் காலத்தில்தான் காவேரி பெரும் பிரச்னைகளாக உருவெடுத்து அவர் ஆட்சியை இழந்தார் எனவும் கூறப்பட்டது. ஆகவேதான் அந்த வீட்டிற்கு குமாரசாமி போக தயக்கம் காட்டி இருக்கிறார் என்கிறார்கள் அவரது நெருங்கிய நண்பர்கள். 

வடக்கு முகம் பார்த்த வீடு ‘அனுக்ரஹா’. அந்த வீட்டை சுற்றி மிகப் பெரிய கார்டன் உள்ளது. பசுமையான புல்வெளி உள்ளது. ஆழகிய சூழல் அவரை அழைத்தாலும் ராகு காலம் அவரை கால் வைக்கவிடாமல் தடுத்துள்ளதாக கூறி வருகின்றன கன்னட ஊடகங்கள்.

தேவே கவுடா ஆட்சியை இழந்த பின் எஸ்.எம் கிருஷ்ணா, என் தரம் சிங், டி வி சதானந்த கவுடா என பல முதல்வர்களும் இங்குதான் தங்கியிருந்தனர். வாஸ்து பற்றிய பயம் அவங்களுக்கும் இருந்ததால் அவர்களது காலத்தில் இந்த பங்களாவை கொஞ்சம் வாஸ்து படி மாற்றி அமைத்தனர். ஆனாலும் அவர்களை பதவியில் இருக்கவிடவில்லை வாஸ்து. எல்லோர் ஆட்சியையும் இழக்கச் செய்தது. 

2006ம் ஆண்டு குமாரசாமி முதல்வராக பதியேற்ற போது அவர் தேடி வந்தது இந்த பங்களாவைதான். ஆனால் அவருக்கும் வாஸ்து பற்றிய பயம் இருந்தது. ஆகவே அவரது சகோதரரை விட்டு அந்த பங்களாவில் சில வாஸ்து முறைப்படி மாற்றங்களை செய்தார். இடித்துக் கட்டி அவருக்காக வேலைகளை செய்து கொடுத்தார் சகோதரர். ஆனால் அந்த வாஸ்து குமாரசாமியையும் விடவில்லை. பழி வாங்கும் படலமாக பாஜக உடனான ஒப்பந்தத்தை முறையாக கடைப்பிடிக்காத காரணத்தால் 2007 டிசம்பரில் பதவியை இழந்தார் குமாரசாமி. 

ஜதகப்படி கிழக்கு வாசல் பார்த்த வீட்டில்தான் குமாரசாமி தங்க வேண்டுமாம். அதற்காவே இந்த புதிய வீட்டிற்குப் போகிறார் குமாரசாமி. அவருக்கு கிழக்கு முகம் பார்த்த வீட்டில் தங்கினால்தான் சகல விஷயத்தையும் கட்டி ஆளும் அதிகாரம் வலுப் பெற்று விளங்குமாம். அப்படி சொல்லியிருக்கிறார்கள் ஜோதிடர்கள். ஆகவே தனது பல கட்ட கோயில் தரிசனங்களுக்கு பிறகு இந்த முடிவினை எடுத்துள்ளார் குமாரசாமி. வீடு மாறினார். அரசியல் சூழல் மாறுமா? என்பதை இப்போதைக்கு நாம் கூற முடியாது.