சிறப்புக் களம்

பசுவைக் கொன்றால் தூக்கு: சத்தீஸ்கர் முதல்வர் எச்சரிக்கை

பசுவைக் கொன்றால் தூக்கு: சத்தீஸ்கர் முதல்வர் எச்சரிக்கை

webteam

சத்தீஷ்கர் மாநிலத்தில் பசு வதை செய்யப்பட்டால் தூக்குத்தண்டனை கிடைக்கும் என்று சத்தீஷ்கர் மாநில முதலமைச்சர் ராமன் சிங் கூறினார்.

குஜராத் மாநிலத்தில் பசுப் பாதுகாப்பு மசோதா கடந்த வெள்ளியன்று கொண்டுவரப்பட்டது. அதில், நாட்டில் முதன்முறையாக, பசுவதைக்கு ஆயுள்தண்டனை மற்றும் ஜாமினில் வெளிவரமுடியாத குற்றமாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சத்தீஷ்கர் முதலமைச்சர் ராமன் சிங்கிடம் பசுவதை குறித்து கேட்டபோது, “கடந்த 15 ஆண்டுகளாக சத்தீஸ்கரில் பசு வதை செய்யப்படவில்லை. அப்படி செய்யப்படுகிறதா என்ன? பசுக்களைக்கொல்பவர்கள் தூக்கிலிடப்படுவார்கள்” என்றார்.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உச்சநீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதல்களின் படி, சட்டவிரோத மாட்டிறைச்சிக் கூடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஹரியானாவில், பசுவதைக்கு மூன்று ஆண்டுகள் முதல் 10 வருடங்கள் சிறைதண்டனை வழங்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பாஜக.வின் இத்தகைய பசுவதைக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பேச்சுக்கள், தங்களது இந்துத்துவ சிந்தனைகளை நாடு முழுக்க பரப்புவதற்காகச் செய்யும் செயல்பாடு என எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.