சிறப்புக் களம்

அதிமுக 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதா ?

அதிமுக 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றதா ?

webteam

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் மற்றும் வலதுசாரி கொள்கை கொண்ட குருமூர்த்தி தனது ட்விட்டரில் நேற்று சில ட்வீட்களை பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்களில் அதிமுக மற்றும் பாஜக தோல்விகளை ஒப்பிட்டு பகிர்ந்திருந்தார். குறிப்பாக “ அதிமுக 2 தொகுதிகளில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், 5 இடங்களில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் , இன்னும் 5 இடங்களில் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றுள்ளது. ஆனால் பாஜக 2 இடங்களில் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், ஒரு இடத்தில் 3 லட்சத்துக்கு அதிகமாகவும், மற்றொரு இடத்தில் 3லட்சத்துக்கு குறைவாகவும் தோற்றது. மோடிக்கு எதிரான அலை வீசுகிறது என்றால் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக தோற்றிருக்க வேண்டும். அப்படியெனில் இது யாருக்கு எதிரான அலை ? என கேள்வி எழுப்பினார். 

இது உண்மையா என தேர்தல் ஆணைய விவரங்களை ஆய்வு செய்த போது குருமூர்த்தி சொன்னது பொய் என தெரிய வருகிறது. அதிமுக ஒரு இடத்தில் கூட 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கவில்லை. தம்பிதுரை மற்றும் சிவபதி ஆகியோர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளனர். பாமக தான் போட்டியிட்ட இடங்களில் 2 தொகுதிகளில் அதாவது திண்டுக்கல் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிகள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. தேமுதிக வடசென்னை தொகுதியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது. 

கடந்த முறை 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பொன்.இராதா , இம்முறை 2.59 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். சிவகங்கையில் அதிமுக 2.29 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் கடந்த முறை வென்றது. ஆனால் ஹெச்.ராஜா 3.32 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். இராமநாதபுரம் தொகுதில் கடந்த முறை அதிமுக 1.19 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தும் கூட, பாஜக 1.27 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 

இது யாருக்கு எதிரான அலை ?