சிறப்புக் களம்

வெற்றியை தீர்மானிக்கும் வடக்கு குஜராத்: வியூகம் வகுக்கும் ஹர்திக் படேல்

வெற்றியை தீர்மானிக்கும் வடக்கு குஜராத்: வியூகம் வகுக்கும் ஹர்திக் படேல்

rajakannan

வெற்றியை தீர்மானிக்கும் வடக்கு குஜராத்தின் முக்கிய 6 மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள ஹர்திக் படேலின் பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி அமைப்பு திட்டமிட்டுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், அடுத்த வாக்குப்பதிவு டிசம்பர் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்ட தேர்தல் வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் உள்ள தொகுதிகளில் நடைபெறவுள்ளது. பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வடக்கு குஜராத் மாநிலத்திலுள்ள பனாஸ்கந்தா, பதன், சபர்கந்தா, மெஹ்சனா, காந்திநகர், ஆரவல்லி ஆகிய 6 மாவட்டங்கள் தேர்தலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்த 6 மாவட்டங்களில் எந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றுகிறதோ அதனை பொறுத்தே வெற்றி அமையும் என்று கூறப்படுகிறது. இந்த மாவட்டங்களில் தனது முழு சக்தியையும் திரட்டி பிரச்சாரங்களை மேற்கொள்ள ஹர்திக் படேல் மற்றும் பட்டிதார் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

முதற்கட்ட தேர்தலின்போது பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக ஹர்திக் படேலின் கூட்டங்களுக்கு இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டனர். அவர் செல்லும் இடமெல்லாம் அதிக அளவில் ஆதரவு அலை இருந்தது. பாஜகவின் கோட்டையான சூரத் நகரிலேயே மாபெரும் கூட்டத்தை கூட்டி ஹர்திக் படேல் அசத்தினார்.

செல்லும் இடங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறாரோ இல்லையோ பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். எந்த கட்சிக்கு வேண்டுமென்றாலும் வாக்களியுங்கள்; ஆனால் பாஜகவுக்கு மட்டும் வாக்களிக்க வேண்டாம் என்று ஒரு மேடையில் ஹர்திக் பேசினார். ஹர்திக் படேலுக்கு கூடும் கூட்டம் பாஜகவைப் போல் காங்கிரஸ் கட்சியையும் மிரள வைத்துள்ளது என்றுதான் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வடக்கு மற்றும் மத்திய குஜராத்தில் அடுத்தகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தைப் போல் தற்போதும் தீவிரமாக பிரச்சாரம் செய்ய ஹர்திக் படேல் மற்றும் அவரது அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். இதனால், பட்டிதார் அமைப்பை சேர்ந்த ஆதரவாளர்கள் தற்போது வடக்கு நோக்கி திரண்டு செல்கிறார்கள். ஹர்திக் படேலின் கூட்டங்கள் மட்டுமல்லாமல் முக்கியமான 6 மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் தோறும் சென்று அவரது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

பட்டிதார் அமைப்பின் வடக்கு குஜராத் ஒருங்கிணைப்பாளர் நரேந்திர படேல் கூறுகையில், “ஹர்திக் படேல் சவுராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்தியிருந்தார். அங்கு கூடியது மாபெரும் கூட்டங்கள் என்று நீங்கள் கருதினால் பொருந்திருந்து பாருங்கள்..! வடக்கு குஜராத்தில் எப்படி மக்கள் கூடுகிறார்கள் என்று. எங்களுக்கு கூட்டங்களில் கலந்து கொள்பவர்கள் வெறும் படேல் சமுதாயத்தினர் மட்டுமல்ல. எல்லா சமுதாயத்தினரும் எங்களுக்கு ஆதரவு அளிக்கின்றனர். இது பாஜகவுக்கு எதிரான அலை” என்றார்.

மேலும் நரேந்திர படேல் கூறுகையில், “6 மாவட்டங்களிலும் எங்களிடம் 50 ஆயிரம் ஆதரவாளர்கள் உள்ளனர். சவுராஷ்டிரா நகரில் இருந்து மெஹ்சனா மாவட்டத்திற்கு 5 ஆயிரம் ஆதரவாளர்கள் சென்றுள்ளார்கள். மேலும் 5 ஆயிரம் பேர் செல்ல உள்ளார்கள். தேர்தலில் வடக்கு குஜராத்தான் முக்கியமான திருப்புமுனையை உருவாக்கும் என்பது எங்களுக்கு தெரியும். கடைசி இரண்டு நாட்கள் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளோம்” என்றார்.

தாக்கூர் உள்ளிட்ட ஓபிசி சமுதாயத்தினர் அதிகம் இருக்கும் வடக்கு குஜராத்தில் தங்களுக்கு முழு ஆதரவு உள்ளதாக பாஜக நம்புகிறது என்று காங்கிரஸ் கட்சியில் இணைந்த சமூக ஆர்வலர் அல்போன்ஸ் கூறுகிறார். மேலும் அவர் கூறுகையில், “படேல் இளைஞர் சமுதாயத்தினர் ஆதரவு பெரிய அளவில் உள்ளது என்பதை எங்களால் உணர முடிகிறது. ஆனால் படேல் சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் இன்னும் பாஜக ஆதரவு நிலையிலே உள்ளனர். குஜராத்தில் பெரிய அளவில் உள்ள ஓபிசி சமுதாயத்தினர்தான் என்பதை எல்லோரும் மறந்துவிட்டார்கள். பட்டிதார் இல்லை. ஓபிசி சமுதாயத்தினர் பாஜகவின் பக்கம் உள்ளனர்” என்றார்.

பட்டிதார் அமைப்பின் தலைவர் ஒருவர் கூறுகையில், “மெஹ்சனா மாவட்டத்தில் கடுமையான போட்டி இருக்கும். அதனால் முழு சக்தியை நாங்கள் பயன்படுத்துவோம். மெஹ்சனா நகரம் மற்றும் கேரலு தொகுதிகளில் பாஜக வலுவாக உள்ளது. மோடியின் சொந்த தொகுதியிலேயே பாஜகவை தோற்கடிக்க முயற்சிப்போம்” என்றார்.

மெஹ்சனா மாவட்டத்தில் 4 லட்சம் பட்டிதார் சமுதாய வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல், மிகப்பெரிய ஓபிசி ஜாதியான தாக்கூர் சமுதாயத்தினர் 3.31 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

இந்த தொகுதி குறித்து நரேந்திர படேல் கூறுகையில், “1984-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக முதல் முதலாக போட்டியிட்டபோது நாடு முழுவதும் இரண்டு இடங்களில்தான் வெற்றிபெற்றது. அதில் ஒன்று மெஹ்சனா தொகுதி. தனது அரசியல் வரலாறை தொடங்கிய மெஹ்சனா மாவட்டத்திலேயே அவர்களுக்கு முடிவு கட்டுவோம்” என்றார்.

இதனிடையே, மெஹ்சனா மாவட்ட எல்லையில் ஹர்திக் படேல் நேற்று மாபெரும் கூட்டம் நடத்தி இருந்தார். இதில் ஆயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். மெஹ்சனா மாவட்டத்தில் கடந்த 2015-ம் ஆண்டு படேல் சமுதாயத்தினர் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்ததை அடுத்து, கடந்த இரண்டு வருடங்களாக அம்மாவட்டத்திற்குள் நுழைய ஹர்திக் படேலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட எல்லையில் ஹர்திக் கூட்டம் நடத்தியுள்ளார்.

கூட்டம் தொடர்பாக ஹர்திக் படேல் தனது ட்விட்டரில், “கடந்த இரண்டு வருடங்களாக மெஹ்சனா மாவட்டத்தில் நுழைய எனக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் மெஹ்சனா அருகே பெரிய அளவில் கூட்டத்தை நடத்த முடிவு செய்தேன். சவுராஷ்டிரா மற்றும் சூரத் மக்கள் தங்களது கடமைகளை செய்துவிட்டனர். தற்போது வடக்கு மற்றும் மத்திய குஜராத் மக்கள் தங்களது கடமையை செய்ய வேண்டியுள்ளது” என்று குறிப்பிடிருந்தார்.

வடக்கு குஜராத்தில் பல்வேறு தொகுதிகள் நட்சத்திர தொகுதிகளாக உள்ளன. பிரதமர் மோடி, அமித் ஷா, நிதின் படேல், ஆனந்திபென் படேல் போன்ற பாஜகவில் பல முன்னணி தலைவர்கள் வடக்கு குஜராத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே. எனவே இங்கு பாஜக வெற்றி பெறுவது கவுரவப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் ஹர்திக் படேலின் வியூகங்கள் எந்த அளவுக்கு பாஜக என்ற மாபெரும் சக்தியை வீழ்த்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.