விருந்தினர் பக்கம்: மணா
“இதுக்குப் போய் போஸ்டர் அடிப்பாங்களா?’’ என்கிற கேள்வியை மூச்சடைக்கவைக்கிற அளவுக்குச் சுவரொட்டிகள் ஒட்டுகிற பழக்கம் தென்தமிழகத்தில் அதிகம்.
குழந்தை பிறந்தது முதல் மொட்டை போட்டுக் காதுக்குத்துவது, பெண் பூப்பெய்திவிட்டால், திருமணத்திற்கு, இறப்புக்கு மட்டுமில்லை. தங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகைகளுக்குச் சுவரொட்டிகள் ஒட்டுவதுகூட இங்கு ஒரு கலாசாரம். அரசியல் ‘பில்ட் அப்’ சுவரொட்டிகள் தனி! சாதித் தலைவர்களின் மீசை முறுக்கி, அரிவாள் சகிதமான சுவரொட்டிகள் இன்னும் காய்ந்த மிளகாய் ரகம்!
மதுரை, திருச்சி, நெல்லை போன்ற பெரு நகரங்களில் ரசிகர் மன்றங்கள் முளைத்தாலும் முளைத்தன, தனி அளப்பறை தான். ஒரு நடிகர் அல்லது நடிகை பிடித்துவிட்டால் போதும், நேரே சென்னைக்குச் சிறுகும்பலாகப் போவார்கள். எப்படியோ நடிகர், நடிகைகளைச் சந்தித்து போட்டோ எடுத்துவிட்டால் போதும். ஜென்ம சாபல்யம் அடைந்த மாதிரியான குஷியோடு ஊருக்குத் திரும்பிச் சும்மா இருக்கமுடியுமா?
உடனே ஒரு ரசிகர் மன்றத்தைத் துவக்கிவிடுவார்கள். சுவரொட்டிகளை ஒட்டி அமர்க்களப்படுத்திவிடுவார்கள். சுவரொட்டிகளில் நடிகர்களுக்கு அதிகபட்ச கௌரவத்தை வழங்கியிருப்பார்கள். ‘கடவுளே’ என்றும், குலசாமி என்றும் விளிப்பது சர்வசாதாரணம். மறைந்த நடிகர் முரளியைத் ‘’தெய்வமே’’ என்றுதான் சுவரொட்டிகளில் அழைப்பதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள் மதுரை ரசிகர்கள்.
நடிகைகளை கிராஃபிக்ஸ் அறிமுகமாகாத காலத்திலேயே அம்மன் ரேஞ்சுக்கு அன்புடன் உயர்த்தியிருப்பார்கள். மதுரை மீனாட்சியம்மன் துவங்கி அழகர் கோயில் அழகர்சாமி வரை பலருடைய உடலில், இம்சை அரசன் படப்பாணியில் தங்கள் அபிமான ஸ்டார்களின் முகங்களை இணைத்துப் பெருமைப்படுத்தியிருப்பார்கள். கிராஃபிக்ஸ் வந்த பிறகு எந்த உடலுடன் எந்த முகத்தை ஒட்டவைப்பது என்பதில் தனிப் போட்டியே நடக்கும் பாருங்கள்.
சுவரொட்டியைப் பார்க்கிறவர்கள் அசந்துபோவார்கள் அல்லது அதிர்ந்து போவார்கள். நிதானமாகச் சுவரொட்டியைப் பார்த்துச் செரிக்கப் பழகுவார்கள். துவக்கத்தில் ‘’எங்க சாமியோட முகத்தில் எப்படிடா உங்க நடிகர் மூஞ்சியை ஒட்டிப் போடலாம்’’ என்று கொந்தளித்தவர்கள்கூட, பிறகு அதுவே சுவரொட்டி நாகரிகமாக மாறிய பிறகு ‘கத்துவதில் பயனில்லை’ என்று ஓய்ந்துபோனார்கள்.
சாலைகளில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளும், அவற்றின் புகைப்படங்களும் சம்பந்தப்பட்ட ஸ்டார்களுக்குப் பொறுப்பாக அனுப்பிவைக்கப்படும். ஸ்டார்களின் படங்கள் வெளிவருகிறது என்றாலோ, அவர்களுடைய பிறந்தநாள் அன்றோ சுவர்கள் முழுக்கச் சுவரொட்டிமயமாகிவிடும். ரசிகர்களின் பணபலத்தைப் பொறுத்துச் சுவரொட்டிகளின் அளவு கூடுதல், குறைச்சலாக இருக்கும். அதில் சம்பந்தப்பட்ட ஸ்டார்களுடன் பூரித்த சிரிப்புடன் எடுத்துக்கொண்ட படங்களுடன் அந்த ஏரியாவில் உள்ள அனைத்து ரசிகர்களின் முகங்களும் ஆஜர் ஆகியிருக்கும்.
தியாகராஜ பாகவதருக்கே ரசிகர் மன்றங்களை அந்தக் காலத்தில் வைத்திருக்கிறார்கள். சும்மா சொல்லக்கூடாது. ஹாலிவுட் நடிகர்களும் இதற்குத் தப்பவில்லை. சீன் கானரிக்கும், புரூஸ்லீ, ஜாக்கிசான் என்று சர்வதேசத்தரத்திலும் ரசிகர் மன்றங்கள் விரிந்திருக்கின்றன.
எம்.ஜி.ஆர், சிவாஜிக்குக் கணக்கில்லாத மன்றங்கள். ஒவ்வொரு படம் வரும்போது சுவரொட்டிகளை ஏராளமாக ஒட்டியிருக்கிறார்கள். அதேநேரம் சுவரொட்டியைப் பசையுடன் ஒட்டுவதைப்போலவே, மாடுகளின் உபயத்தில் சுவரொட்டிகளில் சாணியை அடிப்பதும் முக்கியமான இன்னொரு வேலையைப்போல இங்கு நடந்திருக்கிறது. நடிகர் சங்கம் சார்பில் எம்..ஜி.ஆரும், சிவாஜியும் இணைந்து இந்தச் சாணியடிக்கும் பழக்கத்தைக் கைவிடச் சொல்லி அறிக்கை விடுத்த பிறகே சாணியடிக்கும் பழக்கம் குறைந்திருக்கிறது.
கமல், ரஜினி வந்த பிறகு சுவரொட்டிகளில் போட்டியே ஆரம்பமானது. தங்கள் ஸ்டாரின் படம் வெற்றியடைய அவருடைய ரசிகர்கள் வாழ்த்திச் சுவரொட்டிகளை அடிக்கும்போது, அந்தப் படம் ‘’ஊத்திக்கச் சொல்லிப் போட்டிச் சுவரொட்டிகள் அடித்து அல்லது சுவரெழுத்துக்கள் எழுதப்பட்டுப் பரபரப்பாகும். இதை ஒட்டி மோதல்களும் நடந்து உள்ளூர்ச் செய்தித்தாள்களில் கட்டம் கட்டிய செய்திகளாகி இருக்கின்றன.
எண்பதுகளுக்குப் பிறகு தங்களுடைய அபிமான நடிகர்களை ‘’வருங்கால முதல்வரே’’ என்று அழைத்து வந்ததெல்லாம் கூடச் சுவரொட்டி அடித்துவந்தவர்களுக்கு அலுத்துப்போய், ‘பிரதமரே’’ என்று தேசிய அளவில் பக்காவாக அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதில் ’உலக நாயகன், ஆஸ்கர் நாயகன் என்பதெல்லாம் அடுத்தகட்ட வளர்ச்சி.
மணா
இசையமைப்பாளர்களுக்கும் ரசிகர் மன்றங்கள். அவர்கள் சும்மா இருப்பார்களா? இசையமைப்பாளரின் பெயரைச் சேர்த்துப் பார்த்துத் திருப்தி அடையாமல், அதோடு நக்ஸலைட் பாய்ஸ் என்று காரசாரத்தைச் சேர்த்து சுவரொட்டி அடித்தாலும் அடித்தார்கள். காவல்துறை மிகச்சரியாக வந்து மோப்பம் பிடித்துவந்து ‘பாய்ஸ்’ கவனிக்கப்பட்டுத் தெளிவடைந்து வெளியே வந்தார்கள்.
ரசிகர்கள் ஏன் இந்த அளவுக்குத் தங்களுக்குப் பிடித்தமான நடிகர்களுடன் ஒட்டுதலாக இருக்கிறார்கள் என்கிற கேள்வி இதை வாசிக்கிறபோது உங்களுக்கு எழலாம்.
சிறு உதாரணங்கள் மட்டும் இங்கே.
மதுரைக்கு அருகில் உள்ள சிறுநகரத்தைச் சேர்ந்த ரசிகர், அவருக்குப் பிடித்த நடிகருக்கு ஏதாவது வித்தியாசமான கிஃப்ட்டை அனுப்ப முடிவுசெய்தார். தன்னுடைய கட்டை விரலை வெட்டி அதை பார்ஸில் அந்த நடிகருக்கு அனுப்பிவைத்தார். பார்ஸ்லைப் பிரித்துப் பார்த்தவர்கள் நடிகரிடம் அந்த கிஃப்டைக் காண்பிக்க மிரண்டுபோனார் அந்த நடிகர்.
ஒருவேளை ஏதாவது சடலத்தின் கட்டை விரலாக இருக்குமோ? நேரடியாக ஆளை அனுப்பிவைத்துப் பார்த்தால், வெட்டப்பட்ட கையில் கட்டுடன் பாசம் காட்டினார் அந்த நடிகர். உடனே செய்தித்தாள்களில் ‘தியாகி’யாகிவிட்டார் அந்த ரசிகர். ஏன் புராணகாலத்து ஏகலைவனைப்போல அந்த ரசிகர் கட்டை விரலைப் பரிசாக அனுப்பினார்?
இரண்டாவது இன்னொரு சம்பவம். பிரபல நடிகரின் படம் வருவதில் சிக்கல். ஆவேசமாகிவிட்டார் கேள்விப்பட்ட ரசிகர். பேருந்து நிலையத்திற்கு அருகில் ஒரு கனத்த பையுடன் வந்தார் அந்த ரசிகர். பையிலிருந்தவை சீனிப் பட்டாசுச்சரம். அதைத் தன்னுடைய உடம்பு முழுக்கச் சுற்றி பற்றவைத்துக்கொண்டார். பட்டாசுகள் வெடித்தன. கத்தியபடி நின்ற இளைஞர் உடம்பில் தண்ணீரை ஊற்றி அணைப்பதற்குள் உடம்பு முழுக்கத் தீப்புண் காயங்கள்.
அந்தக் கிராமத்து ரசிகரை பத்திரிகை ஒன்றிற்காகச் சந்திக்கச் சென்றபோது, உடம்பில் காயங்கள் நிறைந்திருந்த நிலையிலும், அவருடைய முகத்தில் என்னவொரு பெருமிதம்? எந்த உணர்வு இருபது வயதேயான அந்த இளைஞரை அபாயகரமான இந்த முடிவுக்குத் தூண்டியிருக்கிறது?
மனநல மருத்துவர்கள் இதுபற்றி என்ன சொல்கிறார்கள்?
‘’பொருளாதார நெருக்கடியில் கீழிறங்கித் தங்களுக்கென்று தனித்த அடையாளம் இல்லாத இளைஞர்களுக்குத் திரைப்படம் மனதளவில் பெரும் விடுபடும் உணர்வை அளிக்கிறது. அதில் நடிக்கும் நடிகர்கள் அல்லது நடிகைகள் மனதுக்கு நெருக்கமாகிறார்கள். ரசிகர் மன்றம் வைப்பது அவர்களை இன்னொரு அடையாளத்திற்கு அழைத்துச் செல்கிறது. அவர்களைச் சந்திக்கிற கணங்களைக் கொண்டாடுகிறார்கள். அந்த ஈடுபாட்டை வெளிப்படுத்த எதையும் செய்யத் தயாராகிவிடுகிறார்கள் .அதனாலேயே இம்மாதிரியான விபரீதங்கள் நடக்கின்றன’’ என்கிற மனநல மருத்துவர்கள் சமூகவியல் பார்வையிலும் இதை அணுகச் சொல்கிறார்கள்.
அதே மதுரை. சில மாதங்களுக்கு முன்பு அங்கு போயிருந்தபோதும் சுவரில் சுவரொட்டிகள். அதில் வெவ்வேறு நடிகர்கள். வெவ்வேறு அடைமொழிகள். வெவ்வேறு கிராஃபிக்ஸ் புகைப்படங்கள். அதேவிதமான ரசனையும், பழக்கமும் நீடிக்கின்றன. ரசிகர்கள் மட்டும் மாறியிருக்கிறார்கள்.
கட்டுரையாளர்: பத்திரிகையாளர், தாய் இணைய இதழின் ஆசிரியர்.