ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதால் ஆங்கிலத்தில், தமிழ்ப் படங்களுக்கு டைட்டில் வைக்கும் பழக்கம் தமிழ் சினிமாவில் தலைதூக்க
ஆரம்பித்துள்ளது.
தமிழ் சினிமாவைப் பொருத்தவரையில் ஜிஎஸ்டிக்கு முன், ஜிஎஸ்டிக்குப் பின் என இரண்டு கட்டங்களாக பிரித்துக் கொள்ளலாம். .குறிப்பாக
ஜிஎஸ்டிக்குப் பின்பு தமிழ்த் திரையுலகில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்பு எல்லாம் படத்தை எடுத்துவிட்டு, அதற்குப் பொருத்தமான தமிழ் டைட்டில் கிடைக்காமல் பல மாதம் வரை காத்திருந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஏராளம்.
புதிய தமிழ் டைட்டில்களை யோசிக்க முடியாமல் போன காரணத்தினாலேயே, பல இயக்குனர்கள் ஏற்கனவே வெளிவந்த படத்தின் பழைய
படங்களின் டைட்டில்களை புழகத்திற்குக் கொண்டு வர ஆரம்பித்தனர். அந்த வரிசையில் வெளிவந்த படங்கள்தான் படிக்காதவன், பொல்லாதவன்,மாப்பிள்ளை, போக்கிரி ராஜா, மனிதன், அதே கண்கள், சத்ரியன், சர்வர் சுந்தரம் போன்ற ஏராளமான படங்கள். அதே போல் தமிழில் படத் தலைப்பு வைத்தால்தான் தமிழக அரசின் வரிவிலக்கு கிடைக்கும் என்பதற்காகவே கடைசி நேரத்தில் டைட்டில் மாற்றப்பட்ட படங்களும் ஏராளம். சில படங்கள் யு சான்றிதழ் பெற்றாலும் வரி விலக்கு அளிக்கப்படாமல் இருந்தது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படங்களுக்கு அரசியல் காரணங்களால் வரிச்சலுகை வழங்கப்படாமலே இருந்தது. அதன் பின் அவர் நீதிமன்ற உதவியை நாடினார்.
தற்போது இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட துவங்கியுள்ளனர். கடந்த ஜூலை மாதல் முதல் அமலுக்கு வந்த, ஜிஎஸ்டி வரியால் தமிழக அரசு
இதுவரை அளித்து வந்த வரிவிலக்கு தொடர வாய்ப்பில்லாமல் போனது. இதனால், தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கதைக்குப்
பொருத்தமான ஆங்கிலம் மற்றும் தமிழ் என இரண்டும் கலந்தும் டைட்டில்களை படங்களுக்கு வைக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வரிசையில் 2018
ஆண்டில் ஆங்கில டைட்டிலில் வெளிவரவிருக்கும் தமிழ் படங்களின் பெயர்கள் இதோ.
ஸ்கெட்ச்:
சீயான் விக்ரம் நடிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில் வரும் வெள்ளியன்று திரைக்கு வரவிருக்கும் திரைப்படம்தான் ஸ்கெட்ச். வடசென்னை
பின்னணியில் உருவாகி இருக்கும் இந்தப் படத்திற்கு ஸ்கெட்ச் என்ற டைட்டிலை படத்தின் இயக்குனர் ஜிஎஸ்டி வருகைக்கு முன்னரே தேர்வு செய்து வைத்துள்ளார். ஆனால், இறுதி நேரத்தில் கண்டிப்பாக வரிவிலக்கு குறித்த பிரச்னை வரும் என்று நினைத்திருந்தவருக்கு இன்பச் செய்தியாய் வந்து சேர்ந்ததுதான் ஜிஎஸ்டி வரி.தமிழக அரசின் வரிச்சலுகை கிடைக்கப் போவதில்லை என்பதால் ஆங்கிலத் தலைப்புடனேயே இந்தப் படம் வெளியாக உள்ளது.
பார்டி:
வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் 'பார்ட்டி' படத்தின் டீஸ்ரே பல பிரச்னைகளை குறித்து பேசியது. அதை அவ்வளவு எளிதாக யாராலும்
மறந்திருக்க முடியாது. இந்த நிலையில், ஜிஎஸ்டி வரி அந்தப் படத்தின் டைட்டிலுக்கு சாதகமாகவே வந்து அமைந்தது கூடுதல் சிறப்பு. வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ’மாஸ்’ திரைப்படமும் தமிழக அரசின் வரி விலக்கு பிரச்னையால் ‘மாஸ் என்கிற மாசிலாமணி’யாக மாற்றப்பட்டது. ஆனால்‘பார்ட்டி’ கட்டாயம் மாறப்போவதில்லை என தெரிய வருகிறது.
சூப்பர் டீலக்ஸ்
தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் நடித்துள்ள சமந்தா கதாபாத்திரத்தின் அறிமுக டீசர் சில தினங்களுக்கு
முன்பு வெளிவாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இவரது ஆரண்ய காண்டம் வெளியாகி சுமார் 6 வருடங்களுக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்தப் படத்திற்கு முதலில் ’அநீதி கதைகள்’ என்று பெயரிடப்பட்டிருந்தது. ஜிஎஸ்டி அறிவிப்புக்கு பின்னர், இயக்குனர் இந்தப் படத்தின் டைட்டிலை ’சூப்பர் டீலக்ஸ்’ என்று மாற்றி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சம்ந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்பதால், தமிழ்ப் பற்றுடன் பெயர் வைக்கப்பட்ட காலம் மாறி தமிழ் சினிமாவில் தற்போது பொருத்தமான கதைக்கு ஆங்கில டைட்டில் மோகம் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இப்படியே போனால் சினிமா தலைப்புகளில் மெல்லத் தமிழினிச் சாகும் என்பது உறுதி.