சிறப்புக் களம்

பூமி தினக் கதை சொல்லும் கூகுள் டூடுல்

webteam

சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை பாதுகாக்கும் விதமாக, ஆண்டுதோறும் ஏப்ரல் 22-ம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.

சூழல் மாசுபாடு, பொய்த்துப் போகும் மழை, புவி வெப்பமடைதல் போன்றவை மனித வாழ்வாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளன.

கடந்த 2 ஆண்டுகளாக வடகிழக்கு, தென்மேற்கு பருவமழை முற்றிலும் ஏமாற்றியதால் குடிப்பதற்கும், வீட்டின் அன்றாடப் பயன்பாட்டுக்கும் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழிலும் அழிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்பு தினங்களை, அதன் கருப்பொருளை உணர்ந்து அதற்கேற்ப டூடுல் வெளியிட்டு அனுசரிக்கும் கூகுள், பூமி தினமான இன்று, முக்கியமான செய்திகளை தனது டூடுலின் மூலமாக உணர்த்தியுள்ளது.

மாசுபட்டு, பாதிப்படைந்த பூமியை பற்றி ஓநாய் ஒன்று தூக்கத்தில் கனவு காண்கிறது. பூமித்தாயை காக்க முடிவெடுத்த ஓநாய், தனது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்கிறது. கூடவே, சூழலைப் பாதுகாக்கும் தனது முயற்சியில் இணையுமாறு, மோமோ என்னும் பூனை, கூகுள் வானிலையின் பிரியமான தவளையும் கேட்டுக்கொள்கிறது. குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துவது, காற்றாலை, சூரியசக்தி மின்சாரங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றை வலியுறுத்துகிறது கூகுள் டூடுல்..