சிறப்புக் களம்

பாராலிம்பிக் பேட்மிண்ட்டனில் தங்கம் - பிரோமோத் பகத்தின் தன்னம்பிக்கை சாதனைக் கதை

பாராலிம்பிக் பேட்மிண்ட்டனில் தங்கம் - பிரோமோத் பகத்தின் தன்னம்பிக்கை சாதனைக் கதை

Veeramani

டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் பிரமோத் பகத் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்தவர் 33 வயதான பிரமோத் பகத். இறுதிப் போட்டியில் பிரிட்டன் வீரர் டேனியலை 21-14, 21-17 என்ற புள்ளிகள் கணக்கில் பிரமோத் வீழ்த்தினார்.

பிரமோத் பகத்தின் தன்னம்பிக்கை பயணம்:

ஒடிசா மாநிலத்திலுள்ள பர்ஹா மாவட்டத்தின் அட்டபிரா பகுதியை சேர்ந்த கைலாஷ் பகத் மற்றும் குஷும் தேவியின் மகன்தான் பிரமோத் பகத். இவர் 1988 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி பிறந்தார்.  இவரின் தந்தை கைலாஷ் பகத் அரிசி ஆலைத்தொழிலாளி. பிரமோத் 5 வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்டதால், அவரது காலில் குறைபாடு ஏற்பட்டது. சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ள பிரமோத், ஆரம்பத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாடினார். பின்னர்தான் இவருக்கு பேட்மிண்ட்டன் விளையாட்டு அறிமுகமானது.

தனது 14 வயதில் பள்ளியில் உள்ள சீனியர்கள் பேட்மிண்ட்டன் விளையாடுவதைப் பார்த்து அதை நோக்கி ஈர்க்கப்பட்ட பிரமோத்தின் வாழ்வில் பின்னர் பேட்மிண்ட்டனே முழுதுமாக நிறைந்தது. பிரமோத்தின் முதல் பயிற்சியாளர் மற்றும் வழிகாட்டியான எஸ்பி தாஸ்தான் அவருக்கு பாரா-பேட்மிண்டனின் அடிப்படைகளை கற்றுக் கொடுத்து, அவரை ஒரு தொழில்முறை பாரா விளையாட்டு வீரராக மாற உதவினார்.

தனது பலவீனத்தை பலமாக மாற்றிக்கொண்டு, விடாமுயற்சி மூலமாக நாட்டின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக மாறிய இவர்தான், இப்போது உலகின் நம்பர் 1 பாரா-ஷட்லர். இவர் இதுவரை மூன்று முறை உலக சாம்பியன் பதக்கத்தை வென்றுள்ளார். ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்களில் சிறப்பாக விளையாடக்கூடிய அபூர்வமான ஷட்லர்களில் ஒருவர் இவர்.  பிரமோத் பகத் இப்போது SL3 பிரிவில் உலக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

பாஸ்ஸா பாரா-பேட்மிண்டன் - 2019 இல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம், துருக்கிய பாரா-பேட்மிண்டன் இன்டர்நேஷனல்- 2019 இல் தங்கம் மற்றும் ஷார்ஜாவில்  IWAS உலக விளையாட்டுப் போட்டியில் அவர் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றார். இதுபற்றி ஒரு நேர்காணலில் பேசிய பிரமோத் பகத்  “னது வெற்றிக்கு குடும்பத்தினரே காரணம், அவர்கள் எப்போதும் எனது கனவுகளை வெற்றிபெறவைக்க ஆதரவளித்தனர். எனது விளையாட்டு வாழ்க்கையில் எனது குடும்பமே எனது மிகப்பெரிய பலமாக இருந்தது. அவர்களின் ஆதரவு இல்லாமல் நான் இதுவரை சென்றிருக்க மாட்டேன். நான் மனச்சோர்வடைந்தால், அவர்கள் என்னை உற்சாகப்படுத்தி என் மன உறுதியை மேம்படுத்துகிறார்கள்" என்று கூறினார்.