சிறப்புக் களம்

’பேய்களின் சமையல் அறை’ - கண்மணி அன்போடு காதலன்... குணா குகை பற்றிய சிறப்பு தொகுப்பு

’பேய்களின் சமையல் அறை’ - கண்மணி அன்போடு காதலன்... குணா குகை பற்றிய சிறப்பு தொகுப்பு

kaleelrahman

கொடைக்கானல் 12 மைல் சுற்றுச்சாலையில் அமைந்துள்ள ’பேய்களின் சமையல் அறை’ என்றழைக்கப்படும் குணா குகையின் சிறப்பை இங்கு பார்க்கலாம்

கொரோனா நோய் பரவல் காரணமாக சுற்றுலா தலங்களுக்கு சென்றுவர தமிழக அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகையின்றி கொடைக்கானல் வெறிச்சொடி காணப்பட்டது. இதையடுத்து கொரோனாவின் தாக்கம் குறைந்த நிலையில், கொடைக்கானலுக்கு சென்றுவர சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மோயர் சதுக்கம், பில்லர் ராக் போன்ற சுற்றுலா தலங்களுக்கு பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் குறைந்த அளவிலான சுற்றுலா பயணிகளே வந்து சென்றனர்.

சுற்றுலா பயணிகளின் வருகையின்றி சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி தொழில் செய்து வந்த தங்கும் விடுதிகள், கார் ஓட்டிகள், குதிரை ஓட்டிகள், வழிகாட்டிகள் என பலரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நோய் பரவல் கட்டுக்குள் வந்த நிலையில் மேலும் பல தளர்வுகளை அரசு அறிவித்தது. இதனால் இன்றுமுதல் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொடைக்கானலில் கடந்த 4 மாதங்களாக மூடப்பட்டிருந்த வனத்துறை சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில், மோயர் சதுக்கம், பைன் மரக்காடுகள், குணா குகை மற்றும் தூண் பாறை உள்ளிட்ட 12 மைல் சுற்றுச்சாலை சுற்றுலா சென்றுவர இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 12 மைல் சுற்றுச்சாலை சுற்றுலாதலமான குணா குகையின் சிறப்பை இங்கு விரிவாக பார்க்கலாம்...

'பேய்களின் சமையல் அறை' என அழைக்கப்படும் இந்தப் பகுதி ஆழமான குகை என்பதால் இதற்கு இந்த பெயர் வந்தது. மிகவும் பிரபலம் ஆகாமல் இருந்து வந்த இந்த குகை, கடந்த 29 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. ஆம், 1992ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான குணா என்ற படத்தில் இடம்பெற்ற 'கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே' என்ற பாடல் இந்த குகையில்தான் படமாக்கப்பட்டது.

ரம்யமான இரவு சூழலில் படமாக்கப்பட்ட இந்த பாடல் காட்சி ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தது. இந்தப்படம் வெளியானதற்கு இந்த படத்தின் நினைவாக இந்த இடத்தை குணா குகை என மக்கள் அழைத்தனர். இதற்கு பின்பு இந்த குகை சுற்றுலா பயணிகளிடையே மிகவும் பிரபலமடைந்தது. இதை பார்ப்பதற்காகவே சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர்.

கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் பயணிகள் முதலில் பார்க்கும் இடமாக இந்த குகையை பார்த்து மகிழ்ந்தனர். சுற்றிப் பார்க்க குணா குகைக்கு உள்ளே செல்லும் இளைஞர்கள் ஆர்வம் மிகுதியில் ஆபத்தை உணராமல் குகை பள்ளத்தில் தவறி விழுந்து பலர் உயிரிழந்துள்ளனர். வனத்துறையினரின் மேலான ஆலோசனையை ஏற்க மறுத்து குகைக்குள் சென்ற பலர் உயிரிழந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்ததால் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு குணா குகை மூடப்பட்டது.

சுற்றுலா பயணிகளின் வேண்டுகோளை ஏற்ற வனத்துறை மரப்பாலம் அமைத்து அதன் மூலம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக குகையின் முகப்பு வரை சென்றுவர ஏற்பாடுகள் செய்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகன் மிகவும் பாதுகாப்புடன் குணா குகையை கண்டு ரசித்து வந்தனர். ஆனால், நாளடைவில் இந்த மரப்பாலமும் சிதிலமடைந்து விட்டதால் குணா குகைக்கு அருகே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குகையை துரத்தில் இருந்த பார்த்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ளது போல், அதிசயமான ஆழமான அழகான இந்த குகையை உள்ளே சென்று பார்க்கும் வண்ணம் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் குகையை பார்த்து ரசிப்பதோடு அதன் பிரமிப்பையும் ஆச்சரியத்தோடு பார்த்து ரசிக்கலாம் என சுற்றுலா பயணிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.