சிறப்புக் களம்

இயற்கை கவிபாடும் ’கவி’: கேரளாவில் ஒரு சொர்க்க கிராமம்..!

JustinDurai

கவி. பெயருக்கேற்ப, இயற்கை எழுதிய கவிதை போன்று அழகுற காட்சியளிக்கிறது இந்த கேரளத்து மலைக் கிராமம். சுருங்கச்சொன்னால், ஒரு சொர்க்கம். கேரளா என்றதுமே மூணார், கொச்சி, ஆலப்புழா என வழக்கமான இடங்களை தவிர்த்து புதுமையான இடம் தேடுவோருக்கு குளுமையான தேர்வு, கவி. கேரளத்தில் இன்னும் அதிகம் வெளியுலகுக்கு தெரியாத சொர்க்கபுரி.

இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் எனும் பகுதியில் இருந்து கவிக்கு சாலை பிரிகிறது. வண்டிப்பெரியார் – கவி இடைப்பட்ட 28 கி.மீ தூர ஹில்ஸ் ரோட்டில், நின்றுநின்று நிதானமாக இயற்கைக் காட்சிகளை கண்களால் பருகிக்கொண்டே செல்லலாம். மேகங்கள் கொஞ்சி மகிழும் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர், தொட்டுக் கொஞ்சி விளையாடும் தேயிலைக் காடுகள், உடலை இதமாக்கும் ஈரக்காற்று... உற்சாகத்தில் ‘வா...வ்’ வார்த்தைகள் உதிர்ந்துக்கொண்டே இருக்கின்றன. வழியெங்கும் சலசலக்கும் நீரோடைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், அழகு சொட்டும் ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளும் சுண்டி கடக்கின்றன. 

காணும் இடமெல்லாம் பசுமை, போகும் இடமெல்லாம் குளுமை, தேடும் இடமெல்லாம் புதுமை. நாலாபுறமும் இயற்கையின் வர்ணஜாலம் கண்குளிர வைக்கின்றன. மற்ற கேரளப் பகுதிகளில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் விஞ்சும்படியான இயற்கை தரிசனம், கவியின் நிதர்சனம். 

பெரியார் தேசியப் பூங்கா மற்றும் வன உயிர் சரணாலயப் பகுதிக்குள் அமைந்துள்ளதால், கவி செல்ல சில விதிமுறைகள் உண்டு. கவி செல்லும் வழியில் வல்லக்கடவு வனத்துறை அலுவலகத்தில் நுழைவுச் சீட்டு பெறவேண்டும். மது, பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. பிஸ்கட் கவரைக் கூட பிய்த்து எடுத்துவிட்டுதான் உள்ளே அனுமதிக்கிறார்கள். 

எகோ டூரிசம்!

கேரள வனத்துறையால் ‘எகோ டூரிசம்’ எனப்படும் சூழலியல் சுற்றுலா திட்டமும் கவியில் செயல்படுத்தப்படுகிறது. அதன்படி ஜீப் சவாரி, படகு சவாரி பண்ணலாம்; இரவில் வனத்தில் முகாமிடலாம். ஜீப் சவாரி செய்ய ஒரு நபருக்கான கட்டணம் பெரியவருக்கு ரூ.1,500, சிறியவருக்கு ரூ.625. காலை மற்றும் மதிய உணவு, மாலை தேநீர் இதனுள் அடக்கம். காலை 8 மணி முதல், மாலை 4:30 மணி வரை திறந்தவெளி ஜீப்பில் கவியின் பசுமையான காடுகளில் வலம் வரலாம். 

யானைகள், காட்டு மாடுகள், நீலகிரி வரையாடுகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள், பறவையினங்களை கண்டு அதிசயிக்கலாம். கவியின் ரம்மியமான அடர்ந்த வனவெளி, எழில் கொஞ்சும் மலைத்தொடர் காண்பதற்கு அற்புதமாக இருக்கும். படகு சவாரியும் உண்டு. மலையேற்றமும் பண்ணலாம். இறந்துபோன வன உயிர்களின் எலும்புக்கூடுகள் பாதுகாக்கப்படும் அருங்காட்சியகம் ஒன்றையும் பார்வையிடலாம். பிரசித்திபெற்ற சபரிமலையை கவி மலையில் இருந்து காண முடியும். கொச்சுபம்பா என்கிற வன ஏரியில் படகு சவாரி மட்டும் செய்ய இரண்டு நபர்களுக்கு கட்டணம் ரூ.300. 

கவியின் மற்றுமொரு தனிச்சிறப்பான அம்சம், காடுகளில் முகாமிடுவது. க்ரீன் மேன்ஷன், சுவிஸ் காட்டேஜ் டென்ட், ஜங்கிள் கேம்பிங் என கட்டணத்திற்கு தகுந்தாற்போல் இரவு தங்க வைக்கப்படுகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் இரவுப் பொழுதை கழிக்கும் அனுபவம் மறக்க முடியாத ஒன்றாக இருக்கும். 

கவி சூழலியல் சுற்றுலாவின் சிறப்பம்சம் என்னவென்றால் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டிகளாகவும், சமையல்காரர்களாகவும் உள்ளூர் மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்மூலம் உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைத்து வருகிறது. கவி அருகே நன்னூமுல்லி, குல்லூர், கொச்சு பம்பா, புல்லுமேடு, பச்சகானம், குட்டிகணம், பீர்மேடு, வண்டிப்பெரியார் ஆகிய அழகான மலைக் கிராமங்கள் அடுத்தடுத்து உள்ளன. அவற்றையும் பார்த்து ரசித்துவிட்டுச் செல்லலாம். 

இயற்கைப் பிரியர்களுக்கும், சாகச விரும்பிகளுக்கும் விருந்து படைக்க காத்திருக்கிறது கவி. 

எப்படி போகலாம்?

தென்காசி மார்க்கமாக சென்றால் பத்தனம்திட்டா வழியாக வண்டிப்பெரியார் சென்றும், தேனி மார்க்கமாக சென்றால் குமுளி வழியாக வண்டிப்பெரியார் சென்றும் கவி சென்றடையலாம். கவிக்கு சுற்றுலா செல்லும் முன்பாக ஜீப் சவாரி, படகு சவாரி, தங்குவதற்கான காட்டேஜ் ஆகியவற்றை இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்வது நல்லது.