2.0-PS-Vikram-varisu Movie Poster
சிறப்புக் களம்

ரூ.300 கோடியை கடந்து வசூல் வேட்டையாடிய 9 தமிழ் படங்கள் - ‘பொன்னியின் செல்வன் 2’ எந்த இடம்?

‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த கிளப்பில் இணைந்துள்ள படங்கள் குறித்து காணலாம்.

சங்கீதா

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

ஒரு படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைப்பதைப் போன்று, வசூல் ரீதியாகவும் அந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் வெற்றிபெற வேண்டும். அதுவே, அந்தப் படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கு உற்சாகத்தை அளித்து அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்ல உதவும். அந்தவகையில், தமிழ் சினிமாவில் இதுவரை 300 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்துள்ள படங்கள் குறித்து காணலாம்.

2.0

1. ‘2.0’ (2018)

கடந்த 2018-ம் ஆண்டு ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘2.0’ (தமிழ் + இந்தி + தெலுங்கு + சீனா) படமே இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்தப் படங்களில் முன்னிலை வகித்து கோலோச்சி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இந்தப் படம், 800 கோடி ரூபாய் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார்.

2. பொன்னியின் செல்வன்-1 (2022)

லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தை தயாரித்திருந்தது. அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று புனைவு நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம், சுமார் 500 கோடி வரை வசூலித்து, 2022-ம் ஆண்டு அதிகம் வசூலித்தப் படங்களில் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. இதனால் ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. ‘பொன்னியின் செல்வன்-1’ படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லஷ்மி, சோபிதா, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் 1-விக்ரம்

3. விக்ரம் (2022)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக தயாரித்து, கமல்ஹாசன் நடித்த திரைப்படம் ‘விக்ரம்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி, காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். சுமார் 447.65 கோடி ரூபாய் வரை வசூலித்திருந்தது ‘விக்ரம்’.

4. எந்திரன் (2010)

ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் 320 கோடி ரூபாய் வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

எந்திரன்-வாரிசு

5. வாரிசு (2023)

தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சங்கீதா கிரிஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியானது ‘வாரிசு’. இந்தப் படம் 310 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்தது.

6. பொன்னியின் செல்வன்-2 (2023)

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருந்த ‘பொன்னியின் செல்வன்-2’ படம், 11 நாட்களிலேயே 308.2 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. முதல் பாகத்திற்கு இருந்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு இல்லை. எனினும், திரையரங்கில் ஓரளவு வரவேற்பைப் பெற்று வருவதாலும், முன்னணி நடிகர்களின் புதியப் படங்கள் எதுவும் தற்போது வெளியாகாததாலும், இன்னும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

7.கபாலி (2016)

பா.ரஞ்சித் இயக்கத்தில், தாணு தயாரிப்பில், ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கிஷோர் ஆகியோர் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கபாலி’. இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித்-ரஜினி கூட்டணி ‘காலா’ படத்தில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

8. மாஸ்டர் (2021)

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், நாசர் ஆகியோர் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி வெளியான திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்திருந்தது. கொரோனா காலக்கட்டத்தில் வெகு நாட்கள் கழித்து, 50 சதவிகித பார்வையாளர்களுடன் திரையரங்கில் வெளியான இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ்-விஜய்-அனிருத்-லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ இரண்டாவது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளது.

மாஸ்டர்-பிகில்

9. பிகில் (2019)

அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், கதிர், டேனியல் பாலாஜி, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. உலக அளவில் 298.7 முதல் 305 கோடி ரூபாய் வரை இந்தப் படம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் அட்லீ, ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.