சிறப்புக் களம்

மகிழ்வித்து மகிழ்: இலவசமாக ஒரு துணிக்கடை

மகிழ்வித்து மகிழ்: இலவசமாக ஒரு துணிக்கடை

webteam

அடிப்படை தேவைகளில் ஒன்றானது உடை. அப்படிபட்ட நல்ல உடையை ஏழை எளியோருக்கு இலவசமாக கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது  "துளி" என்ற தன்னார்வ துணிக்கடை. அதுவும் சென்னையின் மையப்பகுதியான அடையாறில் இயங்கி வருகிறது. சர்தார் வல்லபாய் படேல் சாலையில் இயங்கும் இந்தத் துணிக்கடைக்கு மேலும் விவரம் அறிய நாம், நேரடியாக சென்றோம். 

நாம் வழக்கமாக வாங்கும் துணிக்கடை ஷோரூம்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல், நிறைந்த மாடல்கள், வகை வகையான டிசைன்களோடு துணிகள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  அங்கு துணிகள் மற்றும் பொம்மைகளை வியப்பு கலந்த மகிழ்ச்சியோடு பார்த்து கொண்டிருந்த குழந்தையிடம், “பாப்பா நீங்க யார் கூட வந்து இருக்கீங்க? என்னலாம் வாங்குனீங்க?” அப்டின்னு கேட்டோம் "இதான் எங்க அம்மா, அவுங்கதான் அழைச்சிட்டு வந்தாங்க. ஸ்கூலுக்கு போட்டுக்க ட்ரெஸ்லாம் வாங்கி இருக்கேன்.”என்றார் தேவி அக்ஷ்யா.

அருகே பொம்மைகள் அடுக்கி கொண்டிருந்த குழந்தையிடம், “நீங்க என்னலாம் வாங்கி இருக்கீங்க?”அப்டின்னு கேட்டோம் “நானா?  ரிமோட் கார், சின்ன பொம்மை, பெரிய கரடி, மோட்டார் வண்டி" என்று அடிக்கினான் கிஷோர். போதுமா என்று கேட்டதற்கு,சிரிப்பை பதிலாக உதிர்த்தான். 

அந்தச் சிரிப்பில் புரிந்தது துணிக் கடைக்கு செல்வது, பிடித்த ஆடையை ட்ரயல் ரூமில் போட்டு அழகு பார்ப்பது, பின்பு வாங்குவது ஆகியவை நமக்கு வெறும் சாதரண விஷயங்கள். ஆனா பலருக்கு அது கனவாகவே இருந்து வருகிறது. அந்தக் கனவை நினைவாக்கும் முயற்சியில் சென்னை அடையார் பகுதியில் இயங்க தொடங்கியுள்ளது "துளி". வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்கள் சிறந்த துணிகளை முற்றிலும் இலவசமாக இங்கே வாங்கி கொள்ளலாம். நம் வீட்டில் நாம் உபயோகிக்காத துணிகளை நம்மிடமிருந்து பெற்று, அதை தரம் பிரித்து நன்றாக உபயோகிக்கக் கூடியதாக மாற்றி ஷோ ரூமில் காட்சிக்கு வைக்கின்றனர். ஒரு சின்ன சுருக்கம், ஒரு பொட்டுக் கறைகூட அதில் தென்படவில்லை.

அங்கு குழந்தையை அழைத்து கொண்டு வந்திருந்த தந்தை ரவியிடம் பேசினோம். “விக்கிற விலைவாசில மூணு வேலை சாப்பிடுறதே கஷ்டமா இருக்கு சார்.. என் பொண்ணுக்கு பிசிடிச்ச விஷயம்லாம் இங்கு இலவசமா வாங்கி கொடுக்க முடிஞ்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார். 

இந்தக் கடை தொடங்கி இரண்டு மாதம் கூட முடிவடையாத நிலையில், இதுவரை இங்கு துணிகளை வாங்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதிகளவில் கிடைக்கும் இந்த வரவேற்பு அமைப்பை தொடங்கிய நிறுவனர்களுக்கே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்சிப்படுத்தப்படும் துணிகளுக்கு குறைந்தபட்ச விலையை துளி நிறுவனர்கள் நிர்ணயிக்கின்றனர். 3 பேர் அடங்கிய குடும்பத்திற்கு 1500 ரூபாய் என, தலா ஒருத்தருக்கு 500 ரூபாய் வரை கூப்பன் வழங்கப்படுகிறது. வரும் வாடிக்கையாளர் வறுமைகோட்டுக்கு கீழ், இது போன்ற துணிகளை வாங்க இயலாதவர் என்பதை உறுதி செய்த பிறகு இந்த கூப்பன் வழங்கப்படுகிறது. அந்த கூப்பனை கொண்டு குழந்தைக்கான டாய்ஸ் முதல் விலையுயர்ந்த பட்டுப் புடவை வரை இலவசமாக இங்கு பெற முடியும். அதிகளவில் தாய்மார்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு வருவதாகவும் நிறுவனர்கள் தெரிவித்தனர்.

இந்தக் கடையை நிர்வகிப்பவர்கள் அனைவருமே சம்பளமோ, லாபமோ எதுவும் இல்லாமல், இதை சேவையாகவே செய்கின்றனர். அவர்களிடம் பேசிய போது "வருபவர்களிடம் ஆதார் எண் கேட்டு பெற்று, அவர்கள் துணிகளை கடைக்கு சென்று வாங்க முடியாதவர்கள் என்று உறுதி செய்த பிறகே கூப்பன் வழங்குகிறோம். பெரும்பாலும் தன்னார்வ அமைப்புகள் மூலம் சொல்லி அனுப்பி இங்கு வருபவர்களே அதிகம்" என்றார் லதா ஜாக்சன்.

வரும் வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்கள், அவர்களது விவரங்கள் அனைத்துமே கணினி மூலம் பதிவு செய்யப்படுகிறது. மேலும் பெண்களின் அத்தியாவசிய தேவையான சானிட்டரி நாஃப்கின்களும் இங்கு மூன்று மாதத்திற்கு தேவையான அளவு வழங்கப்படுகிறது. சரி, வரும் துணிகளை எப்படி எங்கிருந்து பெற்று எப்படி தயார் செய்கிறீர்கள் என்ற போது "துணியை மூன்று வகையாக பிரித்து, அதில் நல்ல நிலையில் இருக்கும் துணிகளை மட்டும் கடையில் வைக்கிறோம். அடுத்து நல்ல நிலையில் இல்லாத துணிகள், பயன்படுத்த முடியாத துணிகள் ஆகியவற்றை ஆசரமங்களுக்கு அனுப்பிவிடுகிறோம்" என்றார் அதன் மற்றொரு நிர்வாகி.

நல்ல மனம் வாழ்க!