சிறப்புக் களம்

இலவச மின்சாரம் தொடருமா?: அச்சத்தில் விவசாயிகள்..!

இலவச மின்சாரம் தொடருமா?: அச்சத்தில் விவசாயிகள்..!

webteam

தமிழகத்தில் மழை பொய்த்து, விவசாயம் கேள்விக்குறியாகியிருக்கும் இன்றைய சூழலில், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் பல விவசாயிகள் உயிரை விட்டுள்ளனர். அந்த அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் சிறு, குறு விவசாயிகளை புதியதொரு அச்சம் குடிகொண்டிருக்கிறது. அது, இதுவரை இலவசமாக பெற்றுவந்த மின்சாரத்துக்கும் இனி கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுமோ என்பதுதான்.

இலவச மின்சாரம் பெற்று வரும் விவசாயிகளின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருப்பதே அதற்கு காரணம். அதோடு, பல ஆண்டுகளாக புதிய இலவச மின் இணைப்பு தராமல் இருப்பதும், புதிய மின் இணைப்பை தட்கல் முறையில் பல லட்சம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிவித்திருப்பதும் அந்த சந்தேகத்தை வலுவாக்கியிருக்கிறது. இதில் விவசாயிகளின் கருத்தை அறிய கள ஆய்வில் இறங்கியது புதியதலைமுறை.

விருதுநகர் மாவட்டத்தில் 8 லட்சம் ஏக்கராக இருந்த விளைநிலத்தின் அளவு, வறட்சியால் கடந்த 10 ஆண்டுகளில் 4 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. அதிலும், இந்தாண்டு விருதுநகர் மாவட்டத்தில் வெறும் 593 ஏக்கர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பாசனத்திற்காக பயன்படுத்தப்படும் 35,562 கிணறுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் ஒருநாளைக்கு 3 மணி நேரம் மட்டும்தான் இலவச மின்சாரம் வழங்கப்பட்டாலும், இது மட்டுமே சாகுபடிக்கான தங்களின் ஒரே நம்பிக்கை என்கிறார்கள் விவசாயிகள்.

நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதால், 5 எச்.பி கொண்ட மின்மோட்டர்களுக்கு பதில், 7.5 எச்.பி, 10 எச்.பி கொண்ட மின்மோட்டர்களை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், உதய் மின் திட்டத்தின் கீழ், இலவச மின்சார திட்ட பயன்பாட்டினை கணக்கெடுக்கும் வகையில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதனால், எதிர்க்காலத்தில் இலவச மின் திட்டம் ரத்து செய்யப்படுமோ என்ற அச்சம் விவசாயிகளுக்கு ‌ஏற்பட்டுள்ளது.

விவசாயிகளிடமிருந்து வாங்கும் விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்த பிறகு, இலவச மின் பயன்பாட்டை அளவீடு செய்ய மீட்டர்கள் பொருத்தும் பணியை அரசு தொடங்க வேண்டும் என்கிறார்கள் விவசாயிகள்.

இலவச மின்மோட்டர் பயன்பாட்டின் அளவை கணக்கெடுப்பதற்காக மீட்டர் பொருத்துவதன் நோக்கம் குறித்து மின்வாரிய அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

அதேபோல, கடலூர் மாவட்டத்தில் இலவச மின் இணைப்புகளுக்கு பொருத்தப்பட்ட மீட்டர்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் 74 ஆயிரம் பாசன கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் 5 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்த நிலையில், கடந்த வாரம் சின்னவடவாடி, பெரியவடவாடி, எருமலூர் உள்ளிட்ட 10-க்கும் அதிகமான கிராமங்களில் இலவச மின்சாரத்தால் இயங்கும் மின்மோட்டர்களுக்கு மீட்டர் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, விளைநிலங்களில் மின்வாரிய அதிகாரிகள் மீட்டர்கள் பொருத்தியதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனடியாக மீட்டர்களை அகற்ற வலியுறுத்தி விருத்தாசலம் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். மத்திய அரசின் உதய் மின் திட்டத்தால், இலவச மின் இணைப்புக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது. விதை, உரம், தண்ணீர், என விவசாயத்திற்கு தேவையான பொருட்களை விலைகொடுத்து வாங்கும் தங்களால், மின்சாரத்தையும் விலைக்கொடுத்து வாங்குவது இயலாத காரியம் என்கிறார்கள் விவசாயிகள்.

இதற்கிடையில் இலவச மின்சாரத்திற்குப் பதிவு செய்து விட்டு காத்திருக்கும் விவசாயிகளும் உள்ளனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த ஜேடர்பாளையம், கண்டிப்பாளையம், வடகரையாத்தூர், சிறு நெல்லிக்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரத்திற்காக பதிவு செய்துவிட்டு 17 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கின்றனர். இந்த நிலையில், தட்கல் முறையில் இரண்டரை லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை செலுத்தினால் உடனடியாக பாசன கிணறுகளுக்கு இலவச இணைப்பு வழங்கப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதனை பெரு விவசாயிகள் வரவேற்றாலும், சிறு குறு விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

இலவச மின் இணைப்பு கிடைக்காததால், டீசல் என்ஜின் மூலம் விவசாயிகள் தண்ணீரைப் பெறுகின்றனர். அதனால், கூடுதல் செலவு ஏற்படுவதாகக் கூறும் விவசாயிகள் பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு முதலில் இலவச இணைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். 2000 ஆம் ஆண்டிலிருந்து விவசாய கிணறுகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக கூறும் அவர்கள் தட்கல் முறை மூலம் பெருவிவசாயிகளை மட்டும் ஊக்குவிப்பதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இலவச மின்சாரத்திற்கு பதிவுமூப்பு அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் அல்லது அதற்கான கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர். ஒருபுறம் இலவச மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்துவது, மறுபுறம் தட்கல் முறை போன்றவற்றால் இலவச மின்சார திட்டம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கூறுகிறார்கள் விவசாயிகள்.