சிறப்புக் களம்

துப்பாக்கிச் சூடு விவகாரம்: இலங்கை அரசின் இரட்டை வேடம்

துப்பாக்கிச் சூடு விவகாரம்: இலங்கை அரசின் இரட்டை வேடம்

webteam

தமிழக மீனவர் விவகாரத்தில் இலங்கை அரசு இரட்டை வேடம் போடுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தங்கச்சி மடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காத வண்ணம் வெளியுறவுத் துறை அமைச்சர் நேரில் வந்து உறுதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் மீனவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

போராட்டத்தின்போது பேசிய பிரிட்ஜோவின் உறவினர், இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த நமது மீனவர்கள் மீது அத்துமீறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் குற்றம்சாட்டினார். இந்த தகவலை செல்போனில் தொடர்பு கொண்டு பிரிட்ஜோ தெரிவித்ததாகவும், இந்திய கடற்பகுதியில் மட்டுமே செல்போனுக்கு சிக்னல் கிடைக்கும் என்ற வாதத்தினையும் அவர் முன்வைத்தார். அவரது கூற்றினை உறுதிப்படுத்தும் விதத்தில், சுட்டுக் கொல்லப்பட்ட மீனவரின் உடலில் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிக் குண்டுகள் அகற்றப்பட்டு, தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்திய-இலங்கை எல்லையை ஒட்டிய கடற்பகுதியில் ஏகே 47 ரக துப்பாக்கிகளை, இலங்கை கடற்படையைத் தவிர வேறு யார் பயன்படுத்தியிருக்க முடியும் என்ற கேள்வி இயல்பாகவே எழுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று கூறியுள்ளது. இதுதொடர்பாக ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விசாரணை நடத்தியதாகவும், அதில் இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று தெரியவந்ததாகவும் மழுப்பலாகவே பதில் அளித்துள்ளது. இந்திய மீனவர்களிடம் மனிதாபிமானத்தோடு இலங்கை கடற்படை நடந்துகொள்ளும் என்ற முரண்பாடானத் தகவலையும் இலங்கை வெளியுறவுத் துறை பதிவு செய்துள்ளது.

கடந்த 1991ம் ஆண்டிலிருந்து 2011ம் ஆண்டு வரை, இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த தமிழ் மீனவர்களின் எண்ணிக்கை 85. இந்த காலகட்டத்தில் மட்டும் 167 முறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 180 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இலங்கையில் ஆட்சி மாறினாலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர் கதையாகவே இருப்பதே வேதனையான உண்மை.