தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று காலை வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்த தெளிவான விளக்கங்களை புதிய தலைமுறையிடம் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த சிறப்பு நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விகளையும் அவர் அளித்த பதில்களையும் இங்கு காணலாம்.
கேள்வி: இது திமுக அரசின் வெள்ளை அறிக்கையா? அல்லது அதிமுக மீதான குற்றப்பத்திரிகையா?
பதில்: இந்த அறிக்கையில் எந்த தனிப்பட்ட நபரையோ அல்லது கட்சியையோ குறிப்பிட்டு குற்றம் சுமத்தவில்லை. ஆண்டுகளின் அடிப்படையில் புள்ளிவிவரங்களை இருப்பது போலவே எடுத்துக்கூறியுள்ளோம். வெளியே பொதுமக்களுக்கு தெரியாத தகவல்களை கொடுத்துள்ளோம். ஜெயலலிதா வசம் இருந்தவரையில் நிதிநிலை சரியாகவே இருந்திருக்கிறது. ஆனால் 2013 -2014 ஆண்டுகளில் இருந்துதான் இது மாறியிருக்கிறது.
கேள்வி: வரியை உயர்த்தப்போகிறீர்களா?
பதில்: வருவாயை உயர்த்த வேண்டும். யாரிடம் எந்த அளவிற்கு உயர்த்த வேண்டும் என்பதுதான் இப்போதைய கேள்வி.
கேள்வி: வரக்கூடிய வருவாய்க்கும் செலவினத்துக்கும் பெரிய இடைவெளி இருக்கிறது. அதை சீர்செய்ய வேண்டும் என்ற கருத்தை நிதியமைச்சராக முன்வைக்கிறீர்கள். ஆனால் மக்கள் நலன் அரசாக அதிமுக இருந்தது என்று கூறுகிறது. அதிலிருந்து திமுக முரண்பட்டு போகிறதா?
பதில்: தகவல் இல்லாதா சூழ்நிலை அறையில் வெளிச்சம் இல்லாமல் உட்காருவது மாதிரி. யார் இந்த தவறான சிஸ்டத்தால், முறைகேடாக சம்பாதிக்கிறார்களோ அவரகள் இதுபோன்ற தவறான கருத்தை பரப்புகிறார்கள். அதவாது மக்கள் நலன் அரசுதான் நஷ்டத்தில் ஓடும். மக்கள் நலன் இல்லாத அரசுதான் வருவாய் கணக்கை சரிசெய்யும் என்கிறார்கள். அப்படியல்ல. சட்டப்படி நாம் சரிசெய்ய வேண்டும். 2003- 2014 ஆம் ஆண்டுகளில் நடந்த கருணாநிதி, ஜெயலலிதா அரசுகள் சரி செய்திருக்கின்றன. அப்போது மக்கள் நலன் இல்லையா? அவர்களால் எப்படி நடத்த முடிந்தது? ஜெயலலிதாவிற்கு மக்கள் நலன் இல்லை என்று சொல்லவருகிறார்களா? ஜெயலலிதாவால் செய்ய முடிந்ததை இவர்களால் செய்ய முடியவில்லை.
தமிழ்நாடு அரசு பல்வேறு செலவினங்களின் கடன்களுக்காக ஒரு நாளைக்கு மட்டும் 180 கோடி ரூபாய் வட்டி செலுத்துகிறது. ஆண்டுக்கு ரூ.65 ஆயிரம் கோடி வட்டி செலுத்துகிறது.
கேள்வி: நிதியமைச்சராக நீங்கள் சொல்வது சரி. ஆனால் ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டிய கடமை அரசு உள்ளதே?
பதில்: கண்டிப்பாக. தேர்தல் அறிக்கையையும் வெள்ளை அறிக்கையையும் ஒன்றாக சேர்க்க வேண்டாம். நியாயமாக எல்லாத்துக்கும் எல்லாம் கொடுக்க முடியாது. யாருக்கு தேவை என்பது தெரியாமல் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தவறு என்பது எனது தனிப்பட்ட கருத்து. அதனால் நான் ஒரு அமைச்சர் என்ற முறையில் எனது கருத்தை முதல்வரிடம் எடுத்துரைப்பேன். அதை மீறி அவர் என்ன செய்ய சொல்கிறாரோ அதைத்தான் நான் செய்ய முடியும். நீ நியாயத்திற்கு விரோதமாக செய் என்று இதுவரை என்னுடைய தலைவர் கூறவில்லை. இதிலும் அவ்வாறு கூறமாட்டார் என நம்புகிறேன். டேட்டா பேஸ் நம்மிடம் இல்லை... இல்லை... இல்லை... அதுதான் ஆச்சரியமாக உள்ளது. யார் ஏழை, பணக்காரர் என்ற தகவலே இல்லை. அந்த தகவலை திறட்டி உதவ வேண்டும்.
கேள்வி: மத்திய அரசு குறிப்பிட்ட அளவை தாண்டாமல்தான் கடன் அளவை வைத்திருக்கிறோம் என அதிமுக கூறுகிறதே?
பதில்: கடன் வாங்குவதில் பாதிக்கு பாதிதான் முதலீடு செய்தோம் என முன்னாள் முதல்வர் சொல்லும் தகவலை வரவேற்கிறேன். அவரே வாக்குமூலம் கொடுத்துவிட்டார். தொலைநோக்கு பார்வை 2023 என்ற திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். அப்போது ஜெயலலிதா , ‘வருவாயும், செலவினமும் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு ஆண்டுக்கு வெறும் 3% முதலீடு செய்தால் வருவாய் போதாது. எனவே 6% முதலீடு செய்தால் வருவாய் 14 சதவீதமாக அதிகரிக்கும்’ என்று சொன்னார். ஆனால் எடப்பாடி அரசு முழுமையான கடன்தொகை 3%ஐ முதலீடு செய்யாமல் அதில் பாதியான ஒன்றரை சதவீதத்தை முதலீடு செய்துள்ளது.
கேள்வி: பேருந்து கட்டணம்; மின்கட்டணம் உயர்த்தப்படுகிறதா?
பதில்: பயணிகளுக்கு நெருக்கடி வராத வகையில் சீரமைப்பது பெரிய வித்தை கிடையாது. பொருளாதாரத்தில் ஏழை, நடுத்தர, மேல்மட்ட மக்கள் அனைவரும் பேருந்தில் ஒரே கட்டணத்தில் பயணிக்கிறார்கள். தகவல் இல்லாதது இதிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மின்சாரத்தில் ஏராளமான திருட்டு நடக்கிறது. அவை தடுக்கப்பட வேண்டும். நிர்வாக சீர்கேடுகளை சீர் செய்ய வேண்டும்.