சிறப்புக் களம்

‘1000க்கு ஒரு ஆண்தான்’ கருத்தடை பெண்களுக்கு மட்டும்தானா?-தேசிய குடும்பநல ஆய்வு சொல்வதென்ன?

‘1000க்கு ஒரு ஆண்தான்’ கருத்தடை பெண்களுக்கு மட்டும்தானா?-தேசிய குடும்பநல ஆய்வு சொல்வதென்ன?

நிவேதா ஜெகராஜா

தேசிய குடும்ப நல ஆய்வின் 2020-21ம் ஆண்டுக்கான சில தரவுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது. அதில், கடந்த 2015-16ம் ஆண்டுடன் ஒப்பிட்டு, கருத்தடை தொடர்பாக மக்கள் மத்தியில் எந்தளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை அறிய தரவுகள் சில பெறப்பட்டுள்ளன. அதன் முடிவில், கருத்தடை சிகிச்சை முறைகளில் நிலவும் பாலின பாகுபாடு மீண்டுமொருமுறை தெரியவந்துள்ளது.

அந்த ஆய்வுக்கூறும் அடிப்படை தரவுகள் 2020 - 21 | 2015 - 16 இங்கே (விகிதம் அடிப்படையில்):
* ஏதாவதொரு முறையில் கருத்தடை செய்துக்கொள்வோர் - 68.6 | 53.2
* நவீன கருத்தடை முறைகள் - 65.5 | 52.6
* பெண்கள் கருத்தடை செய்துகொள்ளும் விகிதம் - 57.8 | 49.4
* ஆண்கள் கருத்தடை செய்துகொள்ளும் விகிதம் - 0.1 | 0.0
* ஐயூடி / பிபிஐயூடி - 4.8 | 1.9
* மாத்திரைகள் - 0.3 | 0.2
* ஆணுறை - 1.8 | 0.8
* ஊசி - 0.2 | 0.1

குறிப்பு: இவையாவும் தமிழகத்தை சேர்ந்த 15 - 49 வயதுக்குட்பட்ட திருமணமான பெண்கள் பற்றிய தரவுகள்.

இதில் நாம் இக்கட்டுரையில் பேசுவது, பெண்கள் கருத்தடை செய்துகொள்ளும் விகிதமும், ஆண்கள் கருத்தடை செய்துகொள்ளும் விகிதமும் பற்றி மட்டுமே. 2019 - 20 ஆண்டில் பெண்கள் 57.8%; ஆண்கள் வெறும் 0.1%. அதாவது, தமிழகத்தில் ஆயிரத்தில் ஒரு ஆண் மட்டுமே, கருத்தடை செய்துக்கொள்கிறார். ஆனால் பெண்களை பொறுத்தமட்டில், 100-க்கு 57.8 பேர் செய்கின்றனர். அதாவது சரிபாதிக்கும் அதிகம். ஆண்களை பொறுத்தவரை அவர்கள் நிரந்தர கருத்தடைக்கு மட்டுமல்ல; தற்காலிக கருத்தடைக்கு உதவும் ஆணுறை உபயோகத்துக்கும் தயக்கம் அதிகளவில் காட்டுகின்றனர். ஆயிரத்தில் 18 ஆண்கள் மட்டுமே ஆணுறை உபயோகிக்கிறார் என்கிறது இந்த தரவு.

தரவு விவரத்தை முழுமையாக அறிய, இங்கே க்ளிக் செய்யவும் தமிழக அளவில் | இந்திய அளவில்

ஆண்கள் இந்தளவுக்கு தயக்கம் காட்டும் அளவுக்கு, ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சைகள் ஆபத்தானவையா - அதிக சிரமங்களுடன் உடையதா என ஆராய்ந்தால், இல்லை என்கின்றனர் மருத்துவர்கள். மகப்பேறு மருத்துவர் மனுலட்சுமி இதுகுறித்து நம்மிடையே பேசுகையில், “பெண்களைவிடவும், ஆண்களுக்குத்தான் கருத்தடை சிகிச்சை எளிதாக இருக்கும்” என்றார் அழுத்தமாக.

தொடர்ந்து இதுகுறித்து பேசுகையில், “அவர்களுக்கு ஆண்களுக்கு செய்யும் நிரந்தர கருத்தடை சிகிச்சை, வாசக்கடமி எனப்படும். ஆண்களின் பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை மூலம் செய்யப்படும் சிறிய மாறுதல்தான் இந்த வாசக்டமி. இந்த அறுவை சிகிச்சையைச் செய்வதன் மூலம் ஆணின் விந்து, பெண்ணின் முட்டையுடன் சேர்வது தடைப்படும். இதை செய்து கொள்ளும் ஆண்கள் அறுவை சிகிச்சை முடிந்து 48 மணிநேரம் ஒய்வு எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும். இப்போது ‘நோ ஸ்கால்பெல் வாசக்டமி’ (No scalpel vasectomy) என்றொரு சிகிச்சைகூட செய்யப்படுகிறது. இதன்மூலம் மயக்கமருந்துகூட செலுத்திக்கொள்ளாமல், வலியே இல்லாமல் - கத்திகூட உடலில் படாமல், வெறும் ஊசி வழியாக இரண்டு மணி நேரத்துக்குள் ஒரு ஆணால் கருத்தடையை செய்துவிட முடியும். ஆனால் ஆண்கள் இதற்குகூட தயங்குகின்றனர்.

ஆண்களின் தயக்கத்துக்கு பின்னால், பல மூடநம்பிக்கைகளும் தவறான நம்பிக்கைகளும் உள்ளன. குறிப்பாக, ‘நிரந்தர கருத்தடை சிகிச்சை செய்துகொண்டால், அதன்பின் உடலுறுவில் ஈடுபட முடியாது’ என்று பலர் நினைக்கிறார்கள். இன்னும் பலர், பிறப்புறுப்பில் பிரச்னை வருமென நினைக்கிறார்கள். அது தவறு. மூடநம்பிக்கையை தவிர, வேறொன்றும் இல்லை இவை.

பெண்களுக்கு நிரந்தர கருத்தடை செய்ய வேண்டுமென்றால், வயிற்றுக்குள் உள்ள கருக்குழாயில் அறுவை சிகிச்சை செய்துதான் செய்ய முடியும். இது முழுக்க முழுக்க அறுவை சிகிச்சைதான். இதை செய்துக்கொள்ளும் பெண்ணுக்கு, பல மாதங்கள் ஓய்வு தேவைப்படலாம். போலவே கனமான பொருள்களை பின்னாள்களில் தூக்க முடியாமல் போவது போன்ற சூழல்களும் ஏற்படும். ஆகவே ஒப்பீட்டளவில் ஆண்களுக்குத்தான் இது எளிது. இதை கருத்தில்கொண்டு, நாம் ஆண்களுக்கு இதுசார்ந்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவது, மிக மிக முக்கியம். அவர்கள் மத்தியில் நிலவும் தவறான நம்பிக்கைகளை, உடைத்தெரிய வேண்டும். குறிப்பாக ‘பெண்ணின் உடலமைப்பில் இந்த சிகிச்சை சிரமமானது’ என்பதையும், ‘ஆணின் உடலமைப்பில் இது மிகவும் எளிதானது’ என்பதையும் நாம் எடுத்துரைக்க வேண்டும்.

அதேபோல சமூகத்தில் நிலவும் `கரு உருவாதல் பெண்ணுக்கான விஷயம், நமக்கும் அதற்கும் தொடர்பில்லை' என்ற எண்ணம் உடைக்கப்பட வேண்டும். சொல்லப்போனால், பெண்களும்கூட சில நேரங்களில் அப்படித்தான் நினைக்கின்றனர். கருவென்பது, அதை சுமப்பவருக்கு மட்டுமே உரித்தானதல்ல என்பதை, ஒவ்வொரு ஆணும் - பெண்ணும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தேசிய குடும்ப நல ஆய்வின் மற்றொரு அங்கமாக, ஆணுறை உபயோகிக்கும் ஆண்களின் எண்ணிக்கையும் மிக மிக குறைவாக இருப்பதையும் பார்த்தோம். அதை பார்க்கையில், ஆண்கள் ‘குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவதில், தங்கள் பங்கு எதுவுமே இல்லை’ என நினைக்கின்றார்களோ என்ற ஐயம் எழுகிறது. மட்டுமன்றி ஆணுறை போன்ற சாதனங்களெல்லாம், குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவதற்கு மட்டுமன்றி பாதுகாப்பற்ற உடலுறவால் ஏற்படும் பாலியல் தொற்றுநோய்களையும் தடுக்க வல்லவை. அப்படியிருக்கையில், அதை ஓர் ஆண் தொடர்ந்து நிராகரித்து வருகிறார் என்றால், அவருக்கு பாலியல் தொற்றுநோய்கள் பற்றியும் தெரிந்திருக்கவில்லை.

இவற்றையெல்லாம் பார்க்கையில் ஆண்களுக்கும் - வளரும் ஆண் குழந்தைகளுக்கும், ‘பாலியல் தொற்றுநோய் என்றால் என்ன, பாலியல் தொற்றுநோய்த்தடுப்பில் தற்காலிக கருத்தடை சாதனங்கள் என்னென்ன, தற்போது மருத்துவ சந்தையில் நிலவும் ஆண் மற்றும் பெண்ணுக்கான கருத்தடை சாதனங்கள் என்னென்ன, அவற்றை எப்படி பயன்படுத்துவது எப்படி, குழந்தை பிறப்பை தள்ளிப்போடுவதில் ஆண்களின் பங்கு என்ன, எதிர்பாரா கரு உருவாதல் நிகழ்ந்தால் அப்போது அதை பாதுகாப்பாக மருத்துவத் துணையுடன் எதிர்கொள்வது எப்படி’ என பல பாடங்களை நாம் எடுக்க வேண்டியுள்ளது. இவை அனைத்தும், பெண்ணுக்கும் தேவை என்றாலும்கூட, இந்த தரவுகள் ‘ஆண்களுக்கு இது கூடுதல் தேவை, உடனடி தேவை’ என்றே நமக்கு எடுத்துரைக்கின்றன” என்றார் மருத்துவர் மனுலட்சுமி.

இன்றைக்கு மருத்துவமனை சார்பில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில்கூட, கர்ப்பத்தை தள்ளிப்போடுவது குறித்த விழிப்புணர்வு பெரும்பாலும் பெண்ணுக்கே தரப்படுகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம். அதனால்தான் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்பதை ஆய்வின் முடிவுகள் நமக்கு சொல்கிறது. பிரசவத்துக்குப் பிறகு, கருத்தடை குறித்த ஆலோசனைகளும் சம்பந்தப்பட்ட தாய்க்குத்தான் தரப்படுகிறதே தவிர, தந்தைக்கு முழுமையாக தரப்படுவது இல்லை. ஆக மருத்துவமனைகளிலிருந்து இந்த பேதங்கள் ஒழிக்கப்பட்டால் தீர்வை நோக்கி நம்மாலும் விரைந்து செல்ல முடியும்.

சமீபத்தில், கரூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், ஆண்கள் கருத்தடை செய்வதை ஊக்குவிக்கும் வகையில் சில விஷயங்களை செய்திருந்தார். அதிலொரு முயற்சியாக கடந்த வாரத்தில் “ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை சிறப்பு முகாமில் கலந்துகொண்டு கருத்தடை செய்துகொள்வோருக்குத் தங்கத் தந்தை விருது வழங்கி கவுரவிக்கப்படுவதுடன் ரூ.5,000 ஊக்கத்தொகை அல்லது இலவச வீட்டுமனைப் பட்டா, வீட்டில் உள்ள முதியவர் ஒருவருக்கு முதியோர் உதவித்தொகை, விலையில்லாக் கறவை மாடு அல்லது வெள்ளாடு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலம் இலவச கால்நடைக் கொட்டகை, சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் பிணையதாரர் இல்லாமல் வங்கிக் கடன் உதவி, வேளாண்மைத் துறையின் மூலமாக சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் நுண்ணீர்ப் பாசனம் அமைத்துத் தரப்படும்” என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். சொன்னதுபோலவே அன்றைய தினம் செய்துகொண்ட 21 பேருக்கு, அதை செய்திருந்தார் அவர்.

இதேபோல அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து பேசுகையிலும் - நடவடிக்கை எடுக்கையிலும், இன்றுள்ள ஆயிரத்துக்கு ஒரு ‘தங்கத்தந்தை’ விகிதம், கொஞ்சமேனும் அதிகரிக்கும். பெண்ணின் சுமையும் குறையும். நடைமுறையில் அது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.