இந்தியாவில் சவால்கள் இல்லாத துறையென்றோ, பணியிடமென்றோ எதுவுமில்லை. ஆனால் அந்த சவால், பணியை சார்ந்து மட்டுமன்றி, பாலினம் சார்ந்தும் அமையும்போதுதான் அது கேள்விக்குரிய விஷயமாகிறது. அப்படி பாலினம் சார்ந்து ஏற்படும் கூடுதல் சவால்களால் போராடும் பெண்கள் அதிகம் இருக்கும் முக்கியமான துறை, காவல்துறை. இக்காரணத்தால், இந்த பெண்கள் தினத்தில், பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்டறிய முயற்சித்தோம்.
காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு ஏற்படும் மிக முக்கிய பிரச்னைகள் குறித்து பெயர் வெளியாட விரும்பாத ஆயுதப்படை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பேசினார். அவர் பேசுகையில், “எங்ககூட வேலை பார்க்குற சக ஆண் அதிகாரிகள், காவலர்கள் எங்ககிட்ட வந்து `என்ன, பெண்கள்னு சொல்லி நீங்க மட்டும் சிறப்பு சலுகைலாம் கேட்குறீங்க?’னு கேட்பதுண்டு. அந்தக் கேள்விக்கான பதிலைத்தான், இன்னைக்கு நான் சொல்ல விரும்புறேன். கூடவே, எங்களோட மூன்று அடிப்படை கோரிக்கைகளையும் வைக்க விரும்புறேன்” என்றார்.
எங்களை மாதிரி பெண் காவல்துறையினருக்கு, பாதுகாப்பு (பந்தோபஸ்த்) செல்லும் பணிதான் அதிகம் ஒதுக்கப்படும். அந்தப் பணியில் ரொம்ப நேரம் நின்றுகொண்டே இருக்க வேண்டியிருக்கும். பகல், இரவுனு நேரம் காலம் பாராமல் பணி இருக்கும் என்பதால, தங்கும் இடம் - கழிவறையெல்லாம் எப்போ எங்க என்ன வசதி கிடைக்கும்னு கணிக்க முடியாது. சென்னை மாதிரி பெருநகரங்கள்ல, இப்போலாம் ஷிஃப்ட் முறை வந்துடுச்சு. ஆனா, உள்மாவட்டங்கள்ல அதெல்லாம் பெரியளவுல கடைபிடிக்கப்படாது. அதனால `இத்தனை மணி நேரம்தான் வேலை பார்ப்போம்’னு எங்களால சொல்ல முடியாது. மட்டுமில்லாம, பணியிடம் வெவ்வேறு பகுதிகள்ள இருக்குமென்பதால நாம அங்க போயிட்டு வரதுக்கே ரொம்ப நேரம் ஆகிடும். இதுமாதிரி காரணத்துனால, தண்ணீரே அதிகமாக குடிக்க மாட்டோம்.
பல வருஷங்களா தண்ணீர் குறைவா குடிப்பதால, சிறுநீரகக் கல் வந்த எத்தனையோ பெண் போலீஸை கண்கூடா நான் பார்த்திருக்கேன். மாதவிடாய் நாள்கள்யெல்லாம் இன்னும் கஷ்டம். ரொம்ப ரொம்ப உஷாரா இருப்போம். உடல் நலம் நல்லா இருக்கு - இல்லை என்பதலாம் தாண்டி, 8 மணி நேரம்தான் ஒருவருக்கான பணி நேரம் என்பதை அரசு உணர்ந்து, அதை அமல்படுத்தணும். இது பெண் பணியாளர்களுக்குனு சொல்லல... எல்லாருக்குமான கோரிக்கைதான். மகாராஷ்ட்ரால சமீபத்துல 12 மணி நேரமா இருந்த பெண் காவலருக்கான பணி 8 மணி நேரமாக அமலுக்கு வந்ததை, இங்கே நினைவுப்படுத்த விரும்புறேன். 8 மணி நேரம் என்று நேரத்தை மாற்றுகையில், பெண் காவலர்களின் இந்த தண்ணீர் பிரச்னை, சிறுநீரக பிரச்னையெல்லாம் கணிசமாகவாவது குறையும். அதனாலதான் இந்த கோரிக்கை!
இப்போ இருக்கும் ஷர்ட் பட்டனின் உள்பக்கம், ஹூக் வடிவிலானதாக இருக்கும். இதைபோட்டுட்டு பந்தபோஸ்துக்கு போய் பாதுகாப்புக்கு நிக்கும்போது, அந்த பட்டனின் ஹூக் நெஞ்சுல பட்டு அந்த இடத்துல காயம் ஆகிடுது. ஆண்களைப் பொறுத்தவரை, அவங்க கழுத்துவரை பணியன் போட்டிருப்பாங்க. அதனால் அவங்களுக்கு அது பிரச்னையா தெரியல. ஆனா எங்களுக்கு பெரும் பிரச்னையா இருக்கு. இந்த ஆட்சியில், இந்த பட்டன் `பிளாஸ்டிக் பட்டனா’ மாற்றப்படும்னு முன்பொருமுறை சொல்லியிருந்தாங்க. ஆனா இன்னும் மாற்றப்படலை. சீக்கிரம் மாத்திக்கொடுத்தா நல்லாருக்கும்.
இந்தத் துறையை பொறுத்தவரை, உடம்பு சரியில்லன்னு திடீர்னு லீவ் சொல்ல முடியாது. மூணு நாளுக்கு முன்னாடியே காரணம் எழுதி கொடுத்து, அதுக்கு ஒப்புதல் வாங்கினாதான் லீவ் எடுக்கலாம். அதனால வலியோ துன்பமோ, வந்து ட்யூட்டிக்கு நின்னுடுவோம். ஆனா, உடல்நல பிரச்னைன்றது சொல்லிட்டா வரும்? அதுவும் மாதவிடாய் மாதிரியான சிக்கல்கள், இன்னும் ரணம்.
மாதவிடாய்ன்றது, எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது. ஒருத்தருக்கு வலிக்கும், ஒருத்தருக்கு வலிக்காது; சிலருக்கு உதிரப்போக்கும் அதிகமிருக்கும், இன்னொருத்தருக்கும் இருக்காது. ஆனா நம்ம உடல்நிலையை சொல்லி, சில நிமிஷம் கூட எங்கப் பணியில ஓய்வு எடுக்க முடியாது. ரோந்து நேரம், பந்தோபஸ்த் நேரங்கள்ல, சில நிமிஷம் ஓரமா போய் உட்கார்ந்துட்டு வந்தாகூட, `இது அதிகாரி வர நேரம்... இப்படித்தான் போய் உட்காருவீங்களா? அறிவில்லையா’னு ஆரம்பிச்சு, கண்டபடி திட்டுவாங்க. மாதவிடாய் காலத்துல, உச்சி வெயில்ல பந்தோபஸ்துக்கு நிக்கிறது எவ்வளவு கஷ்டம்னு வார்த்தையால விளக்கி சொல்ல எனக்கு தெரியலை. ஆனா, அரசு இதை உணரணும். எங்களுக்கு அதிகம் வெளியில் செல்லும் பணிதான் போடப்படும். நாங்க அதை வேண்டாம்னு சொல்லலை. ஆனா மாதவிடாயை கருத்தில் கொண்டாவது, அரசு மாதா மாதம் இதுபோன்ற நாள்கள்ல எங்களுக்கு வேறு பணிகளை - குறிப்பா கொஞ்சம் உட்கார்ந்து செய்வதுமாதிரியான பணிகளை ஒதுக்க பரிந்துரைச்சா நல்லாருக்கும்.
இந்த இடத்துல, ஒரு சின்ன உதாரணம் சொல்ல விரும்புறேன். என் கூட வேலை செஞ்ச ஒரு சக பெண் ஊழியர், 2 மாத கர்ப்பிணியா இருந்தப்போ அவங்க உடல்நலனை கருத்தில் கொண்டு ஒரு ட்யூட்டில இருந்து ரிலீவ் ஆகனும்னு கேட்டிருந்தாங்க. ஆனா அதிகாரி வராங்கனு சொல்லி, அவங்களை ரொம்ப தூரம் போகவச்சு, கடைசில அலைச்சல்னால அவங்களுக்கு கரு கலைஞ்சிடுச்சு. உடல் ரீதியிலான வேதனை மட்டுமில்லாம, மனரீதியிலான வேதனையும் அவங்களுக்கு அதனால ஏற்பட்டுச்சு. சில மணி நேர ஓய்வு, உடல்நலம் குன்றிப்போகும் சில நாள்களுக்கு வேறு பணி ஒதுக்குதல் பற்றி நாங்க கேட்கும்போதெல்லாம் `போலீஸ் வேலைக்கு வரும்போதே, வேலை கடினமா இருக்கும் - அதிகம் நிற்க வேண்டியிருக்கும்னுலாம் தெரிஞ்சுதானே வர்றீங்க... நிற்க முடியாது, தொலை தூரத்துக்கு அலைய முடியாதுன்றதுனா ஏன் நீங்களாம் வேலைக்கு வர்றீங்க’ என்பது மாதிரிலாம், எங்களுக்கு எங்களோட உயரதிகாரிகள்கிட்ட இருந்து வரும் வசவுகள் அதிகம். அதலாம் நிறுத்தப்படணும். நாங்க, `வேலை செய்ய மாட்டோம்’னு சொல்லலியே.... `ஒவ்வொரு தனி மனுஷங்களுக்கும், அவங்களோட உடல் சார்ந்த சில சில சிக்கல், சவால்களெல்லாம் இருக்கும்; அதை மதிங்க’ன்னு தானே சொல்றோம்... அரசு இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்கணும். அதுதான் எங்க விருப்பம்” என்றார்.
இவற்றைத் தொடர்ந்து, இந்த மகளிர் தினத்தில் பொதுமக்கள் அனைவருக்குமான ஒரு விஷயத்தையும் அந்த பெண் காவலர் முன்வைத்தார். அது, “என்கூட பணி செய்யும் பல பெண் அதிகாரிகள், வீட்டிலயும் நின்னுகிட்டே சமையல் செஞ்சுட்டு, எல்லாத்தையும் ரெடி செஞ்சு வச்சுட்டு, வேலைக்கு வருவாங்க. வேலைக்கு வரும் இடத்துலயும், அவங்க நின்னுகிட்டே இருக்க வேண்டியிருக்கும். கொஞ்ச நேரம் உட்கார போனாலும், `என்ன உங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகையா’னு கிண்டல் பண்ணுவாங்க. இது, எங்க துறைக்கு மட்டுமில்ல. உடலுழைப்பு அதிகம் தேவைப்படும் எல்லா துறையிலுள்ள பெண்களுக்கும் நடக்கும் விஷயங்கள்தான். இந்த இடத்துல, `எங்களுக்கு ஸ்பெஷல் பெர்மிஷன் கொடுங்க’னு நான் கேட்க விரும்பலை. நான் கேட்குறது வீட்ல இருக்க வேலைகள்ல, பெண்கள்கூட பகிர்ந்துக்கோங்க. நீங்க வீட்ல வேலையை பகிர்ந்துக்கிட்டாலேவும், அவங்க வேலைக்கு போற இடத்துல இதுமாதிரியான இக்கட்டான வசவுகளுக்கு உள்ளாக மாட்டாங்க. உங்க வீட்டுப் பெண்களோட பணியை பகிர்ந்துக்காம, அலுவலத்துல உடல் சோர்வுக்காக ஓய்வு கேட்கும் ஒருத்தரை கிண்டல் செஞ்சு என்ன பாஸ் சாதிக்கப்போறீங்க நீங்க?” என்றார் அழுத்தமாக! ஆமாம் தானே!?
இதையும் படிங்க... பெண்கள் தினத்தை கொண்டாடப் போறவங்க, இதையெல்லாம் முதல்ல செய்ங்க!