சிறப்புக் களம்

கௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்

கௌரவம் - உச்சநீதிமன்றத்தில் நடந்த கௌரவம்

webteam

தமிழ் சினிமாவை ரசித்துப் பார்ப்பவராக இருந்தால், சிவாஜியின் ரசிகராக இருந்தால், கௌரவம் படத்தை பார்த்திருந்தால் அதில் வரும் நீதிமன்ற காட்சி உங்களுக்கு கண்டிப்பாக ஞாபகம் இருந்திருக்கும். அப்பாவும் மகனும் ஒருவருக்கொருவர் நேர் எதிராக வாதிடும் காட்சியமைப்பு அத்தனை அருமையாக இருக்கும். ஆனால் சேதி அதுவல்ல. வழக்கறிஞர்களாக இருந்தால், அப்பாவும் மகனும் எதிரெதிர் திசையில் வாதிட வேண்டிய அவசியம் இருக்கும் என்பதை விளக்கவே அந்த எடுத்துக்காட்டு. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக இருப்பவர் கே.கே.வேணுகோபால். அவரது மகன் கிருஷ்ணன் வேணுகோபால். இவரும் வழக்கறிஞராக உச்சநீதிமன்றத்தில் வாதாடி வருகிறார். குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டாலே , நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை ஒரு தனிநபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட மனுவில் அப்பா கே.கே.வேணுகோபால் மனுவுக்கு எதிராகவும் , மகன் கிருஷ்ணன் மனுதாரருக்கு ஆதரவாகவும் வாதிடுகின்றனர். 

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த மனு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. பாஜக உறுப்பினர் அஸ்வினி உபாத்யாய் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். மனுவை தள்ளுபடி செய்யக் கோரி வாதிட்ட தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் “ ஒருவரை குற்றவாளி என கூறாமல், வழ்க்கு நிலுவையில் உள்ள சமயத்தில் அவரை தேர்தலில் போட்டியிட எப்படி தடை விதிக்க முடியும், நிரபராதி என அவர் நீருபிக்க கொடுக்கப்படும் சமயம் அவருக்கு தண்டனையாக எப்படி மாற முடியும்” என கேள்வி எழுப்பினார். மேலும் “ ஒருவேளை இதனை அனுமதித்தால் அரசியல் ரீதியாக தவறாக பயன்பட வாய்ப்பிருக்கிறது, இதனை அனுமதிக்க கூடாது” என்றார். 

ஏன் அனுமதிக்க கூடாது என்ற எதிர்க்குரலோடு வாதத்தை தொடங்கினார் மனுதாரரின் வழக்கறிஞர். யார் என்று பார்த்தால் கே.கே.வேணுகோபாலின் மகன் கிருஷ்ணன் வேணுகோபால். நீதிபதிகள் புன்னகைத்தனர். வேணுகோபால் சற்று கர்வம் கொண்டார். “குற்ற வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நபர்களை வேட்பாளராக நிறுத்த மாட்டோம் என அரசியல் கட்சிகள் ஆணையம் முன் கூற வேண்டும், குற்றச்சாட்டு பதிவானாலே அந்த நபர் மீது உள்ள சந்தேகமே அவரை தற்காலிகமாக தடை விதிக்க போதுமானது, வேட்பாளர் என்பதற்கும் தகுதி வேண்டாமா” என்றார். மேலும் “நீதிமன்றம் தனக்குள்ள அதிகபட்ச அதிகாரத்தை இது போன்ற சமயங்களின் பயன்படுத்தி, வெற்றிடத்தை நிரப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது” என்றார் கிருஷ்ணன். 

குறுக்கிட்ட கே.கே. “எப்போது தடை விதிக்கலாம் என்பதற்கான அனைத்தும் ஏற்கனவே தெளிவாக உள்ள போது இது தேவையற்ற வாதம் , குற்றம் சாட்டப்பட்ட நபர் என்பவர் அரசியல் ரீதியான பணிகளில் அரசியல் சட்டத்தை மீறுவார் என முன்கூட்டியே கணிப்பது ஏன்? என்றார். இடைமறித்த கிருஷ்ணன் “ கொலை போன்ற கொடூர வழக்குகளில் குற்றச்சாட்டு பதிவான பின்னும் அவர்களை ஏற்றுக் கொள்வது எப்படி சரியாகும், சட்டங்களை இயற்றுபவர்களுக்கு இது சாக்காக மாறாதா?” என கேட்டார். நீதிபதி நாரிமனும் பிரிவு 84-படி ஒரு வேட்பாளர் தகுதியானவராக இருக்க வேண்டும் என்று இருப்பதால், தகுதி என்றால் என்ன என்பது விவாதத்திற்கு உட்பட்டதே என்றார். போட்டியிட வேண்டுமென்றால் தகுதியானவராக இருக்க வேண்டும்” என்றார். வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.