சிறப்புக் களம்

`எங்க பஞ்சமி நிலம்தான் கிடைச்சதா?’- சிப்காட் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

`எங்க பஞ்சமி நிலம்தான் கிடைச்சதா?’- சிப்காட் நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்

webteam

நெல்லை மாவட்டம் அளவந்தான்குளம் கிராம மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலம், சுற்றியுள்ள 9 விவசாய கிராமங்களில் வளர்க்கபடும் லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகளின் உணவு ஆதாரமான மேய்ச்சல் நிலத்தை, சிப்காட் நிறுவனம் சூரிய மின்சக்தி மையம் அமைக்க கையகப்படுத்தும் முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வகையில் 9 கிராமங்களிலும் வீடு மற்றும் தெருக்களில்  கருப்பு கொடி ஏற்றி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நெல்லை மாவட்டம் மானூர் தாலுகா உட்பட்ட பிராஞ்சேரி கிராமத்திற்கு உட்பட்ட அளவந்தான் குளம் ஊரில் சுமார் 1,250 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்கள். 1897 ல் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் கொத்தடிமைகளாக உழவு வேலை பார்த்த இந்த கிராம மக்களுக்காக தர்காஸ்து அரசாணையின் கீழ் விவசாயம் செய்யவும் ஆடு மாடுகளை பராமரித்து பாதுகாக்கவும் காஞ்சேரி கிராமத்தில் நிலங்களை வழங்கியுள்ளனர்.

அந்த நிலம் இன்று அரசு ஆவணங்களில் "64 ஏர் அரிஜன உழவர் சமுதாயம்" என குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு கொடுத்த நிலத்தில் கூட்டாக விவசாயம் செய்து கிடைத்த வருமானத்தைக் கொண்டு இன்னும் கூடுதல் நிலங்களை வாங்கியுள்ளனர். அதனை 02.11.1905 ல் சமுதாயத்தின் பெயரிலேயே பதிவு செய்துள்ளனர் இன்று பட்டா எண்கள் 37, 40, மற்றும் 441 - ல் சுமார் 405 ஏக்கர் நிலம் "64 ஏர் அரிஜன உழவர் சமுதாயம்" என்ற பெயரில் கிராம மக்களுக்கு சொந்தமாக உள்ளது. இந்த 405 ஏக்கர் நிலத்தில் விவசாய நிலம் போக 345 ஏக்கர் நிலத்தை, சூரிய ஒளி மின்சக்தி மையம் அமைக்க திட்டமிட்டு அதற்கான விளக்க அறிக்கையை கிராம மக்களுக்கு வழங்கியுள்ளனர் சிப்காட் அதிகாரிகள். 

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியில் சிப்காட் அமைந்துள்ளது இங்கு ஏற்கனவே பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வரும் நிலையில் சிப்காட் வளாகத்தின் அருகே உள்ள கிராமமான அளவந்தான்குளம் ஊர் மக்களுக்கு சொந்தமான "64 ஏர் அரிஜன உழவர் சமுதாயம்" பெயரில் இருக்கும் மேய்ச்சல் நிலத்தை, சிப்காட் நிறுவனம் மூலம் சூரிய ஒளி மின்சக்திமையம் அமைக்கும் தொழில்துறை நோக்கத்திற்காக ஏன் கையகப்படுத்த கூடாது என காரண விளக்க அறிக்கை கேட்டு சிப்காட் வட்டாட்சியர் மூலம் சம்பந்தப்பட்ட சமுதாய மக்களுக்கு அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அளவந்தான்குளம் மக்களுக்கு சொந்தமான மேய்ச்சல் நிலம், சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒன்பது கிராம மக்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு உணவுக்கான ஆதாரமாக உள்ளது.

இந்த மேய்ச்சல் நிலத்தை தங்கள் கால்நடைகளுக்காக பயன்படுத்தி வரும் தென்கலம், நல்லம்மாள்புரம், தென்கலம்புதூர், அலவந்தான்குளம், நெல்லை திருத்து, பல்லிக்கோட்டை, பள்ளமடை, புளியங்கொட்டாரம், நாஞ்சான்குளம் மற்றும் வெங்கலப்பொட்டல் ஆகிய  கிராம மக்கள் தங்கள் வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றி மேய்ச்சல் நிலத்தில் சூரிய ஒளி மின்சக்தி மையம் அமைக்க தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த ஒன்பது கிராமங்களில் 20,000 விவசாய குடும்பங்கள் உள்ளன. இந்த குடும்பங்களில்  ஆடு, மாடு என லட்சதிற்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன.

மேய்ச்சல் நிலத்தை நம்பி வளர்க்கப்படும் இந்த மாடுகள் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் பால் வரை உற்பத்தி செய்து ஆவின் சொசைட்டிக்கு விவசாயிகள் வழங்குகின்றனர். அவர்கள் இதுகுறித்து நம்மிடையே பேசுகையில், “இப்படி கால்நடைகளை நம்பியிருக்கும் எங்களின் (விவசாயிகளின்) வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் சிப்காட் நிறுவனம் மூலம் சூரிய ஒளி மின்சக்தி மையம் அமைப்பதை எதிர்க்கும் வகையில் நாங்கள் கருப்பு கொடி கட்டி இருக்கிறோம். தொடர்ந்து தீபாவளியை கூட கருப்பு தீபாவளியாக எடுத்துக்கொண்டு, கொண்டாடமல் கடந்து இருக்கிறோம். எங்கள் பஞ்சமி நிலத்தை அரசுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம். மனிதர்களுக்கு உணவு இல்லை என்றால் தேடிக் கொள்ளலாம்.

ஆனால் கால்நடைகளுக்கு உணவு என்றால் மேச்சேரி நலம் தான் ஆதாரம். எனவே அதனை அரசு கருணை கொண்டு, அபகரிக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். மேலும் இதனை முன்னிட்டு ஒன்பதுக்கு மேற்பட்ட கிராமங்களில் வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி எங்கள் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம் என்றும் தெரிவித்தனர்.

அளவந்தன்குளம் நாட்டாமை பேட்டி தொடங்கி MBA படிப்பு முடித்து IT துறையில் பணியாற்றிய இளைஞர் வர்கீஸ், IT வேலையை விடுத்து தற்போது கிராமத்தில் பால்பண்ணை அமைத்து இந்த மேய்ச்சல் நிலத்தை நம்பி ஆவின் நிறுவனத்திற்கு 2000 லிட்டர் பால் வழங்கி வருகிறார். இப்படியான பட்டதாரிகளின் நிலையும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

சிப்காட் நிறுவனம் அளவந்தான் குளம் ஊர் மக்களுக்கு சொந்தமான மேய்ச்சல் நிலத்தை கையகப்படுத்த விடுத்துள்ள அறிக்கை:

அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அக்கிராமத்தினர் எல்லோருடைய எதிர்பார்ப்புமாக இருக்கிறது. 

செய்தியாளர்: நாகராஜன். 
ஒளிப்பதிவாளர்: நாராயணமூர்த்தி.