'வயது என்பது வெறும் எண்' என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு சொல்லும் வகையில், சொந்த முயற்சியில் (Self Made) கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார் 59 வயதாகும் பெண் தொழிலதிபர் ஃபால்குனி நாயர். அவர் பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.
'நைகா' (Nykaa)... இந்தப் பெயர் பலருக்கு பரிச்சயம் இல்லாத பெயராக இருக்கலாம். ஆனால், ஃபேஷன் துறையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக அழகு மற்றும் ஆரோக்கியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் இந்தப் பெயர் இப்போது மிகப் பிரபலம். அழகு சாதனங்கள் உள்ளிட்ட ஃபேஷன் பொருட்களை விற்பனை செய்கின்ற நிறுவனமே 'நைகா'.
பங்குச்சந்தை உலகில் தற்போது 'நைகா' ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. சமீபத்தில் ஐபிஓ எனப்படும் பங்குச்சந்தை பொதுவெளியீட்டில் 'நைகா' மிகப்பெரிய முதலீடுகளை ஈர்த்தது. ஐபிஓ வெளியீட்டின் மூலமாக நைகா சுமார் 722 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை பெற்றதாக சொல்லப்படுகிறது.
இந்த வெளியீட்டின் மூலமாக நைகா நிறுவன சிஇஓ ஃபால்குனி நாயர் ஒரே நாளில் பில்லியனர் ஆகியுள்ளார். அவரின் பங்கு மதிப்பு ஒரே நாளில் கிட்டத்தட்ட 6.5 பில்லியன் டாலர் வரை அதிகரித்துள்ளது. நைகாவின் தாய் நிறுவனமான FSN E-Commerce Ventures நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வைத்திருந்தவர் ஃபால்குனி நாயர். இதன் காரணமாக இப்போது அவரின் பங்கு மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு அவருக்கு மற்றொரு பெருமையை தேடிக்கொடுத்துள்ளது. அது சொந்த முயற்சியில் (Self made) பில்லியனர் ஆன இந்தியாவின் முதல் பெண் தொழிலதிபர் ஃபால்குனி நாயர் தான்.
உண்மையில் சாதிக்க வயது தேவையில்லை, வயது வெறும் நம்பர் மட்டுமே என்பதை நிரூபித்தவர் ஃபால்குனி நாயர். குஜராத்தியை பின்னணியாக கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த ஃபால்குனி நாயர், அகமதாபாத் ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் பட்டம் பெற்றவர். இவரின் குடும்பம் ஆரம்பத்தில் இருந்து வணிகத்தை அடிப்படையாக கொண்டது. அவரின் தந்தை இரும்பு பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை நடத்தி வந்தவர். அதனால் ஃபால்குனிக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பதே ஆசையாக இருந்துள்ளது.
ஆனால், அந்தக் கனவை யாருடைய துணையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும் என நினைத்தவர், அதற்கான சேமிப்புகளை செய்யத் தொடங்கினார். அதற்காக வங்கித் துறையில் பணியாற்றத் தொடங்கினார். கோடக் மஹிந்திரா கேப்பிட்டல் வங்கியில் நிர்வாக இயக்குநராகவும் தலைவராகவும் இருந்தார். பல வருடங்கள் அதில் பணியாற்றயவர், 50-வது வயதில்தான் தனது பிசினஸ் கனவுக்கு உயிர்கொடுக்கத் தொடங்கினார்.
தனது 50-வது வயதை எட்டியபோதுதான் ஃபால்குனி நாயர் 'நைகா' நிறுவனத்தை தொடங்கினார். 2012-ல் வெறும் 60 தினசரி ஆர்டர்களுடன் தொடங்கியது 'நைகா'வின் பயணம். படிப்படியாக நிறுவனத்தை தனது தலைமையில் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். இன்று இந்திய அளவில் அழகு மற்றும் ஆரோக்கிய தயாரிப்பு விற்பனையில் பெரிய சாம்ராஜ்ஜியமாக வளர்ந்து நிற்கிறது 'நைகா'. 40 நகரங்களில் 80 கடைகளை கொண்டுள்ளது. வயது மட்டுமல்ல பாலினம், கல்வி ஆகியவை தொழில்முனைவோராக மாறுவதற்கு தடை இல்லை என்பதை நிரூபித்துள்ளார் ஃபால்குனி நாயர்.
கடந்த சில ஆண்டுகளாகவே ஃபால்குனி நாயர் தலைமையில் நேரடி வணிகத்தை தாண்டி ஆன்லைன் வர்த்தகத்திலும் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது 'நைகா'. இந்த வளர்ச்சியால் ஆரம்பித்த 9 ஆண்டுகளிலேயே இந்தியாவின் மிக முக்கியமான பியூட்டி பிராண்டாக 'நைகா' உருவெடுத்துள்ளது என்றால் மிகையல்ல.
தனது வெற்றிப்பயணம் தொடர்பாக பேசும் ஃபால்குனி நாயர், ''பெண்கள் தங்கள் மனதில் மிகவும் அவசியமில்லாத கட்டுப்பாடுகளை வைப்பதாக நான் உணர்கிறேன். இன்று, பல பெண்கள் சிறு குழந்தைகளுடன் தங்கள் வணிகங்களை நிர்வகிக்கிறார்கள். எந்தவொரு தொழில்முனைவோருக்கும் நிறைய ஆர்வம், கடின உழைப்பு, மன உறுதி மற்றும் நேரம் தேவை" எனக் கூறும் அவர், மற்ற தொழில்முனைவோர்களை விட கொஞ்சம் வித்தியாசமானவர்.
ஃபால்குனி நாயர் சமூக ஊடகங்களில் பெரிதாக ஆர்வம் காட்டாத நபர். ஒரு பெரிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓவாக இருக்கும் நாயர் Nykaa நிறுவப்பட்ட இந்த ஒன்பது ஆண்டுகளில் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே ட்வீட் செய்துள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 'நேரத்தை சற்று வித்தியாசமாகச் செலவிடுபவர்களில் நான் ஒருவர்" என எப்போதும் கூறும் ஃபால்குனி நாயரின் இந்த அர்ப்பணிப்புதான் அவரை இப்போது இந்தியாவின் பணக்கார பெண் தொழிலதிபர்களில் தனித்துவமானவராக உருவாக்கியிருக்கிறது.
- மலையரசு