சிறப்புக் களம்

வாடிக்கையாளர்களை இழந்து வீழ்ச்சியில் செல்லும் ஃபேஸ்புக் சந்தை மதிப்பு- பின்னணி என்ன?

வாடிக்கையாளர்களை இழந்து வீழ்ச்சியில் செல்லும் ஃபேஸ்புக் சந்தை மதிப்பு- பின்னணி என்ன?

நிவேதா ஜெகராஜா

உலகின் முன்னணி சமுகவலைத்தள நிறுவனமாக இருக்கும் ஃபேஸ்புக், கடந்த மாதங்களில் தனது வாடிக்கையாளர்களை பலமடங்கு இழந்துள்ளது. இதனால் ஃபேஸ்புக் சந்தை மதிப்பு 20% அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. ஃபேஸ்புக் ஆரம்பிக்கப்பட்ட 18 வருடங்களில், அது சந்திக்கும் இழப்பு இதுதான் என தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் பின்னணி குறித்த முழு அலசலை இன்றைய `புதிய தலைமுறை நியூஸ் 360’ நிகழ்ச்சியில் நாம் பேசினோம். அதன் விவரத்தை இங்கு தெரிந்துக்கொள்ளுங்கள். 

உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமாக இருக்கும் பேஸ்புக், முதல் முறையாகத் தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மொத்தமாக மெட்டா நிறுவனத்தோடு இழப்பை பொறுத்தி பார்க்கையில், இழப்பு பெரிய அளவில் இல்லைதான். என்றாலும் முதல் முறை இழப்பு என்பதாலும், பேஸ்புக்-ன் ஆதிக்கம் குறைக்கப் போட்டி நிறுவனங்கள் வந்துள்ள காரணத்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக் சமூகவலைதளம் தனது பயனாளர்களை இழக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து, அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20% அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. துல்லியமாக சொல்ல வேண்டுமெனில், கடந்த வருடத்தில் 4 ஆவது காலாண்டில் அதாவது அக்டோபர், டிசம்பர் மாதங்களில் பேஸ்புக்கை தினசரி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 192.9 கோடியாக குறைந்துவிட்டது. அதற்கு முந்தைய காலாண்டில் 199 கோடியாக இருந்தது. பேஸ்புக் தொடங்கப்பட்டது முதல், முதன்முறையாக கடந்த ஆண்டு இறுதியில் இருந்து தினசரி பயனாளர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியது.

இதனால் நடப்பு ஆண்டில் மட்டும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு சுமார் ரூ. 75,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த கணிப்பு வெளியான பின்பு மெட்டா நிறுவனத்தின் சந்தை மதிப்பு 20% அதாவது 200 பில்லியன் டாலர் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது. இந்திய மதிப்பீட்டின் படி, ஒரே நாளில் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் சந்தை மதிப்பு சுமார் ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு சரிந்தது. பேஸ்புக்கின் வாடிக்கையாளர் எண்ணிக்கை சரிவிற்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றி அமைத்த பாதுகாப்பு அம்சமும் காரணம் எனப்படுகிறது. ஆப்பிள் செய்துள்ள விதி மாற்றத்தின் மூலம் மட்டும் 2022ல் 10 பில்லியன் டாலர் வருவாயை இழக்கும் நிலை உருவாகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல டிக் டாக், யூடியூப் போன்ற சக சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும் காரணமாக கூறப்படுகிறது. கடும் போட்டி எதிரொலியாக வரும் காலத்தில் பேஸ்புக்கின் தினசரி பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை மேலும் சரியும் வருவாயின் வீதம் குறையும் என்றும் உலவும் செய்திகளும் சரிவிற்கு மேலும் காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

மத்திய அரசு தரவுப்படி, வாட்ஸ் அப் செயலியை தினந்தோறு 53 கோடி பேர், யூ-ட்யூபை தினசரி 44.8 கோடி பேர், முகநூலை 41 கோடி பேர், இன்ஸ்டாகிராமை 21 கோடி பேர், ட்விட்டரை 1.75 கோடி பேர் பயன்படுத்துகின்றனர் என்பது நமக்கு தெரியவருகிறது. இவை அனைத்தையும், காலை - 30 நிமிடங்கள், மாலை 30 நிமிடங்கள், இரவு - 2 - 5 மணி நேரம் என்கிற அளவுக்கு இந்தியர்கள் சராசரியாக பயன்படுத்துவதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் ஒப்பீட்டளவில் பார்க்கையில் இன்ஸ்டாகிராம் செயலியெல்லாம் முகநூல் வந்த பிறகுதான் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அது, முகநூல் வாடிக்காயளர்களுக்கு ஈடான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

சமூக வலைதளங்களை தவிர்க்க நினைத்தாலும்கூட, ஒவ்வொரு செயலியும் அதற்கு மக்களை அனுமதிப்பதில்லை. மாறாக, மேலும் மேலும் அவரை உள்ளிழுத்தே கொண்டேதான் இருக்கிறது. அப்படியான ஒரு செயலிதான் முகநூலும். ஆனாலும் அதன் எண்ணிக்கை குறைந்ததன் பின்னணி என்ன, இதற்கு பின் மக்களின் சமூகவலைதள மோகம் குறைந்திருக்கிறது என புரிந்துக்கொள்ளலாமா என்ற கேள்வி நமக்கு எழுந்துள்ளது.

இதுகுறித்து எழுத்தாளர் ஸ்ரீதர் சுப்ரமணியன் தெரிவிக்கையில், ”அப்படி பார்க்க முடியாது. முகநூல், நிறைய எழுத்துவடிவத்தை கொண்டிருக்கிறது. ஆனால் இன்றைய தலைமுறை வீடியோ வடிவத்தையே விரும்புகின்றனர். இந்த இன்றைய (இளைய) தலைமுறையினர்தான், அதாவது மில்லினிய குழந்தைகள்தான் சமூக வலைதளங்களில் பெரியளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனாலேயே முகநூலின் பயனாளர்கள் கணிசமாக குறைந்திருக்க கூடுமென்பது எங்களைப் போன்றோரின் கணிப்பு. அதுமட்டுமல்ல, வீடியோவை உருவாக்குபவர்களுக்கும் அந்த வீடியோவால் நிறைய பலன்கள் கிடைக்கின்றன. அது பொருளாதார உதவியாகவும் இருக்கலாம், அல்லது சமூகத்தில் கிடைக்கும் ஒரு அந்தஸ்தாகவும் இருக்கலாம். இதுபோன்ற காரணங்களால், எழுத்துவடிவத்தை உருவாக்குவோரின் எண்ணிக்கை குறைந்தும், வீடியோ உருவோக்குவோரின் எண்ணிக்கை உயர்ந்தும் உள்ளது. இப்படியாக வீடியோவை உருவாக்குபவர் மற்றும் அதை எடுத்துக்கொள்ள நினைப்பவர் என இருவரின் எண்ணிக்கையும் சமமாக இன்றைய சூழலில் உயர்ந்துள்ளது. இதுதான் பேஸ்புக்கின் சரிவின் முக்கிய பின்னணியாக இருக்க வேண்டும்.

இந்தக் கருத்தை நான் முன்வைக்கையில், `எழுத்தின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதா? எழுத்தின் மூலம் ஒருவர் ஒரு கருத்தை பகிர்கையில், அந்நபர் அக்கருத்தை விரிவாக பகிர முடியுமே... வீடியோவில் பகிர்கையில் அப்படி முடியாதே’ என பலரும் நினைக்கலாம். இங்கு, பயனர்களின் எண்ணம் எப்படி உள்ளதென்பதே முக்கியமான விஷயம். நான் முன்பே சொன்னது போல இன்று சமூக வலைதளத்தை உபயோகிப்போரில் மிக அதிகமானோர் வீடியோவையே விரும்புகின்றனர். அதனால் அதைநோக்கிய செயலியை அவர்கள் நாடுகின்றனர். அது கிடைக்கப்பெறாத செயலிகளை, அவர்கள் புறக்கணிக்கின்றனர். அப்படித்தான் பேஸ்புக்கிற்கும் நிகழ்ந்துள்ளது. இதை உணர்ந்தே, பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க், “நாங்கள் இன்ஸ்டா ரீல்ஸை மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம்” எனக்கூறியுள்ளார் என நான் நினைக்கிறேன்.

இப்படி வீடியோ கலாசாரம் பெரியளவில் வரும்போது, என்ன மாதிரியான வீடியோக்களை வெளியிடுவது / வெளியிடக்கூடாது - என்ன மாதிரியான வீடியோக்களை பார்க்கலாம் / பார்க்கக்கூடாது என்பதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மக்களை நெறிப்படுத்த அரசாங்கம் முயல வேண்டும். இங்கே நான் மீண்டும் சொல்ல முனைவது, நாம் அனைத்தையும் நெறிபடுத்த வேண்டும் என்பதுதானே தவிர, அனைத்தையும் தடை செய்ய வேண்டுமென்பதல்ல. இன்றுவரை நாமும் (இந்தியர்கள்) அரசாங்கமும் வீடியோவொன்று ஏற்படுத்தும் தாக்கத்தை முழுமையாக தெரிந்துக்கொள்ளவில்லை. என்றாவது ஒருநாள் வீடியோக்களினால் உருவாகும் பிரச்னை மிகப்பெரிதாக மாறி நிற்கும். அன்றே நாம் உணர்வோம். டிக்டாக் ஏற்படுத்திய தாக்கம், பப்ஜி ஏற்படுத்திய தாக்கமெல்லாம் அப்படியானதே.

இந்த விஷயத்தில் நாம் முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டுமென்பதே விஷயம். ஒரு விஷயத்தை எழுத்து வடிவத்தில் படிக்கையில் நாம் அதை உள்வாங்கிக்கொள்ளும் விதமும், வீடியோ வடிவில் பார்க்கையிலும் நாம் அதை உள்வாங்கிக்கொள்ளும் விதமும் முற்றிலும் வேறு வேறு. வீடியோ வடிவில் பார்க்கையில் அதிகம் உள்வாங்கி கொள்வோம். குறிப்பாக வன்முறை, சாதிய தீண்டல்கள், பாலியல் சார்ந்த விஷயங்கள் போன்ற சென்சிடிவ் விஷயங்களை வீடியோ வடிவில் பார்க்கையில், நாமும் நம் அளவில் சென்சிடிவாகி விடுகிறோம். இதன் பின்னணியை உணர்ந்து, அரசு தரப்பில் வீடியோக்களுக்கான நெறிமுறைகளை விரைந்து வகுப்பது அவசியம்” என்றார்.