சிறப்புக் களம்

விரிவுப்படுத்தப்படுகிறதா தனியார்மயமாக்கல் ? மத்திய அரசின் எதிர்கால திட்டமென்ன ?

விரிவுப்படுத்தப்படுகிறதா தனியார்மயமாக்கல் ? மத்திய அரசின் எதிர்கால திட்டமென்ன ?

PT

முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் கூட தனியார் முதலீடு அனுமதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருப்பது நரேந்திர மோடி அரசு அரசுடைமை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை மேலும் விரிவுபடுத்த கூடுமோ என்ற ஐயத்தை எழுப்பியிருக்கிறது. ஏற்கெனவே ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களை தனியாருக்கு விற்று விடுவது என முடிவு செய்யப்பட்டு இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை என்கிற காரணத்தால் இது போன்ற நிறுவனங்களை தனியார் மயமாக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் உலக பொருளாதாரத்தை போலவே சரிந்து வரும் சூழ்நிலையில், இந்திய தொழில்துறையை வலுப்படுத்தி அதன் மூலமாக பொருளாதார ரீதியாக இந்தியாவை பலம் பொருந்திய நாடாக உருவாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

இதற்கான "சுயசார்பு இந்தியா" திட்டத்தின் பல்வேறு அம்சங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 தவணைகளாக அறிவித்தார். அப்போது அவர் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் கூட தனியார் முதலீடு அனுமதிக்கப்படும் என தெரிவித்தார். அதே போலவே முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் பல அரசு நிறுவனங்கள் செயல்படும் நிலை இருந்தால் அவற்றில் மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள் தவிர பிற நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் இணைக்கப்படும் அல்லது தனியார் மயமாக்கப்படும் என்று சொல்லியிருந்தார். அத்துடன் முக்கியத்துவம்வாய்ந்த துறைகளில் கூட தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். எனினும் முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்களையே நம்பி இருக்க வேண்டாம் என்கிற காரணத்தால், முக்கியத்துவம் வாய்ந்த துறைகளிலே குறைந்தபட்சம் ஒரு அரசு நிறுவனம் செயல்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விரைவிலேயே முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் என்ன என்று பட்டியல் வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அணுசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளுக்கான ஆயுதங்கள் உற்பத்தி ஆகியவை தற்போது அரசுடமை நிறுவனங்கள் மூலமாகவே நடத்தப்பட்டு வருகின்றன. ஆகவே இது போன்ற துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் பட்டியலில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு காலகட்டத்திலே தொலைத்தொடர்பு துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை ஆகியவை கூட முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் என்று கருதப்பட்ட நிலை இருந்தது. ஆனால் இன்று அந்தத் துறைகளில் தனியார் முதலீடு பெருமளவு அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

விமான நிலையங்களில் தனியார் கூட்டணி மூலமாக கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது, இந்த விமான நிலையங்களின் மேலாண்மையை தனியார் வசம் ஒப்படைப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருக்கும் அரசு தற்போது அரசுடமை விமான சேவை நிறுவனமான ஏர் இந்தியாவை விற்பதற்கும் ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது அதேபோலவே தொலைத்தொடர்பு துறையிலே எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய அரசு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தில் சிக்கியிருக்கும் நிலையில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற தனியார் நிறுவனங்கள் அந்த துறையிலே பெருமளவு வியாபாரத்தை தங்கள் கைவசம் வைத்துஉள்ளன.

ஆகவே மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மத்திய அரசு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் என்னென்ன என்று தெரிவிப்பதற்கான வாய்ப்பு என்பதால் இந்தப் பட்டியலில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.. அன்னிய முதலீட்டை பொருத்த வரை, வங்கிகள் மற்றும் காப்பீடு உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், லாட்டரி வியாபாரம், அணுசக்தி மற்றும் புகையிலை தொடர்பான தொழில்கள் ஆகியவற்றில் மட்டுமே அந்நிய முதலீடு அனுமதிக்கப் படாத சூழ்நிலை தற்போது நிலவுகிறது.

வேறு பல துறைகளிலே அரசு அனுமதியுடன் அந்நிய முதலீடு செய்யப்படும் வகையிலும், பெரும்பாலான துறைகளில் அரசு அனுமதி இல்லாமலேயே அந்நிய முதலீடு செய்யலாம் என்ற கொள்கை ஏற்கனவே தாராளமாய் மாற்றப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசு தனது பொருளாதார கொள்கைகளில் தனியார்மயமாக்கல் மற்றும் அது சார்பான கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பின் காரணமாகவும், சைனாவைப் போலவே இந்தியாவிலும் தொழில்துறை வலுப்பெற வேண்டும் என்றும் அதற்காக அந்நிய முதலீடுகள் மற்றும் தனியார் முதலீடுகள் அதிக அளவில் தொழில் துறை மற்றும் உட்கட்டமைப்பு போன்றவற்றில் கொண்டுவரப்பட வேண்டும் என்ற சூழ்நிலையில் இருப்பதால் மேலும் பல அரசுடமை நிறுவனங்கள் படிப்படியாக தனியார்மயமாக்க படலாம் என்ற கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களிலும் சரி தொழில்துறை வட்டாரங்களிலும் சரி மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

தற்போது பொருளாதார வளர்ச்சி சரிந்துள்ளது என்பதாலும் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து இருப்பதாலும் உடனடியாக தனியார் வசம் அரசுடமை நிறுவனங்களை ஒப்படைத்தால் அரசுக்கு அந்த நிறுவனங்களுக்கு உரிய சரியான விலை கிடைக்காது என்பதால் தற்போதைக்கு நரேந்திர மோடி அரசு காய்களை மெதுவாக நகர்த்தும் எனவும் நிலைமை சுமாரான உடன் தனியார் மயமாக்கலை மேலும் முழுவீச்சில் செயல்படுத்த அதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

- கணபதி, செய்தியாளர், புதிய தலைமுறை