Child Marriage Child Marriage
சிறப்புக் களம்

கொரோனா பேரிடர் முதல் 'தாலிக்கு தங்கம்' வரை... குழந்தைத் திருமண அதிகரிப்பு ஏன்?- ஓர் அலசல்

Madhalai Aron

கொரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டைக் காட்டிலும், 2020-ல் 45% குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

உலகம் முழுவதுமே குழந்தைத் திருமணம் ஒரு சமூக பிரச்னையாக உள்ளது. இதனால் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படுகிறது. கொரோனா பேரிடர் காலத்தில், ஊரடங்கு போடப்பட்டுள்ள நிலையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, பலர் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் அவலம் தமிழ்நாடு முழுவதும் நடந்துள்ளது.

சமீபத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக ஆர்வலர் பிரபாகர், தமிழ்நாட்டில் நடைபெறும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுள்ளார். இதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டைக் காட்டிலும், 2020-ல் 45 சதவிகிதம் குழந்தைத் திருமணங்கள் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா பேரிடர் காலத்தில் ஏற்பட்ட வறுமை, வாழ்வாதார பாதிப்பு, பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பது, பெண் பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்து திருமணம் செய்து வைத்தால் பாதுகாப்பு கிடைக்கும் என நம்புவது, லாக்டவுனில் திருமணம் செய்துவைத்தால் செலவுகள் குறைவு என்பவையே லாக்டவுன் காலத்தில் குழந்தை திருமணம் அதிகரித்துவருவதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் மட்டும் 3,208 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 2019-ம் ஆண்டில் 2,209 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அதிலும், 2020-ம் ஆண்டில், அதிகபட்சமாக, தேனி மாவட்டத்தில் 259 குழந்தைத் திருமணங்களும், சேலம் மாவட்டத்தில் 256 குழந்தைத் திருமணங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 224 குழந்தைத் திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில், 2019-ல் 18 குழந்தைத் திருமணங்களும், 2020-ல் 24 குழந்தைத் திருமணங்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.



பாலின சமத்துவமின்மை, பாரம்பரியம் எனப் பலவற்றைக் காரணம் காட்டி, பல நூற்றாண்டுகளாக குழந்தைத் திருமணம் செய்துவைப்பது தொடர்கதையாகி வருகிறது. கடந்த 2006-ம் ஆண்டு, குழந்தைத் திருமணத்தைத் தடுக்க குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தை மற்றும் 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு திருமணம் செய்து வைத்தால், அது சட்டப்படி குற்றம். இந்தத் திருமணத்தில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் 2 ஆண்டு சிறைத்தண்டனை, ஒரு லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற வகையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல், கடந்த 2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் (Protection of Children from Sexual Offences Act - POCSO Act 2012), 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன், அவர்கள் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அது குற்றம் என கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மலைகிராம மக்கள், வேலைக்காக இடம் பெயரும் குடும்பங்கள், ஒற்றைப் பெற்றோர் உள்ள குடும்பங்கள், அதிகக் குழந்தைகள் குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் உள்ள குடும்பங்கள், பாதுகாவலரிடம் வளரும் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் என பல குடும்பங்களில் குழந்தைத் திருமணம் நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இது தொடர்பாக குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளரான தேவநேயன் கூறுகையில், "குழந்தை திருமணம் என்பது குடும்பத்திற்கான பிரச்னை அல்ல, ஒரு சமூகத்திற்கான பிரச்னை. பெண்கள் என்றாலே வரதட்சணை, திருமணம் என்பது மட்டுமே பலரின் மனதில் உள்ளது. கொரோனா காலத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருப்பதால் குழந்தைகளைக் குறித்து யாருக்கும் அக்கறை இருப்பதில்லை. பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், மாணவிகள் பலர் திருமணத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் பல இடங்களில் பாரம்பரிய முறை பின்பற்றப்படுகிறது. இதனால் பெண் குழந்தைகள் வயதுக்கு வந்து விட்டாலே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வந்து விடுகின்றனர். பெண்கள் அதிகம் படித்திருந்தால் அதிக வரதட்சணை கொடுக்க வேண்டும் என்ற மனநிலையும் மக்களிடத்தில் உள்ளது. தற்போதைய சூழலில் நகரங்களில் இருக்கும் ஏழைகளின் வாழ்வாதாரம் சிக்கலாக இருப்பதால், மாப்பிள்ளை கிடைத்தால் போதும் என்று திருமணம் செய்துவைத்து விடுகிறார்கள்.

குழந்தைத் திருமணம் தடுப்பு சட்டத்தின் மூலமாக, பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மிக மிகக் குறைவு, அதன்படி பார்த்தால் இந்தச் சட்டம் அமலாக்கத்தில் இல்லை என்றே சொல்லலாம். குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டாலும், தடுத்துநிறுத்தப்பட்ட திருமணங்களில் 50-லிருந்து 60 சதவிகிதம் மீண்டும் நடந்துவிடுகிறது. பெண்ணின் திருமண வயது பெண்ணுக்கு 21-ம், ஆணுக்கு 21-ம் இருக்க வேண்டும். பெண்கள் என்பதில் அரசாங்கத்தின் மனநிலையும் திருமணத்தை நோக்கியே உள்ளது. பெண் குழந்தைக்குக் கொண்டுவர பல்வேறு திட்டங்கள் இருக்கும்போது திருமணத்தை மையப்படுத்தியே திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. திருமண நிதியுதவி திட்டமான தாலிக்குத் தங்கம் என்ற திட்டத்தை மாற்றியமைத்து, ஊக்கம் கொடுக்கும் வகையில் பெண்களின் ஆளுமைத் திறன், தொழில் முனைவோர், ஆசிரியர் பணி, விளையாட்டுத் துறை போன்ற பெண்களை வளப்படுத்தும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும். தாலிக்குத் தங்கம் என்ற திட்டமும் வரதட்சணை போன்றது தான். எனவே அரசாங்கத்தின் பார்வையும் மாற வேண்டும். பள்ளி குழந்தைகளின் பாடங்களில் குழந்தைத் திருமணம் தொடர்பான விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும்.

கிராம அளவில் குழந்தைகளைப் பாதுகாக்கும் குழுக்களை வலுப்படுத்த வேண்டும். இவர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூடி குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து கலந்தாலோசித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்குத் தகவலை அனுப்ப வேண்டும். என்னுடைய கிராமம் 'குழந்தைத் திருமணம் இல்லாத கிராமம்' என்ற நிலையை உருவாக்க வேண்டும். குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர் என அனைத்து மாநிலங்களிலும் தனித்தனியாக இருக்கின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் மாவட்ட சமூக நல அலுவலருக்குக் கீழ் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர் செயல்படுகின்றனர். ஆனால், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு சமூகப் பாதுகாப்புத் துறைக்குக் கீழ் உள்ளது. குழந்தைத் திருமண தடுப்பு அலுவலர் பொறுப்பையும், சமூகப் பாதுகாப்புத் துறைக்குக் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இரு துறைகளும் கலந்தாலோசித்து குழந்தைகளின் பாதுகாப்பையும், குழந்தைத் திருமணங்களையும் முறையாக கண்காணிக்க முடியும்.

இந்தியா முழுவதும் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காகக் கேரளாவில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் வெறும் 51 லட்சம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்த அமைப்பிற்குச் சரியான அலுவலகம், வழக்கறிஞர், ஆவணக் காப்பகம் என எதுவும் இல்லை. இந்த அமைப்பின் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும். எனவே, அமைப்பை முற்றிலும் மாற்றி, குழந்தை உரிமை, குழந்தை பாதுகாப்பு, குழந்தைகளுக்கான சட்டம், குழந்தைகளுக்கான உளவியலில் கள அனுபவம், நிபுணத்துவம் கொண்ட நபர்களை அமைத்து, முறையான நிதி ஒதுக்கீடு செய்து குழந்தைகளின் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். குழந்தைகளுக்கு உகந்த உலகத்தை உருவாக்க வேண்டுமென்றால், குழந்தைகளுக்கு பாதுகாப்பான சூழலையும், நட்பு சூழலையும் உருவாக்க வேண்டும்" என்கிறார் தேவநேயன்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் நல ஆர்வலர் (AIMS NGO) கன்யா பாபு கூறுகையில், "தற்போது அதிகரித்துவரும் குழந்தை திருமணத்திற்கு லாக்டவுன் ஒரு காரணமாக அமைந்துவிட்டது. கிராமப்புறங்களைப் பொறுத்தவரை, சாதி திருமணம் என்ற பெயரில் அதிகளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. பல இடங்களில் திருமணம் முடிந்த பிறகுதான், அரசுக்கு தகவல்களைத் தெரிகிறது. இதனால் பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமே. இதனாலேயே பலர் வெளியில் சொல்வதில்லை. அதனையும் மீறி காவல் நிலையத்திற்கு தெரியவந்தால், பேசி சமாதானம் செய்து வைத்துவிடுகின்றனர்.

சட்ட திட்டங்கள் கடுமையாகவே இருக்கின்றன. ஆனால், சட்டத்தின்படி, முறையான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். பெண்கள் பாதிக்காத வண்ணம் அரசு அவர்களுக்கான சட்ட திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்டு வரும் 18 வயதுக்குட்பட்ட பெண்களை அரசு காப்பகத்தில் தங்க வைத்து 18 வயது வரை அவர்களுக்கான கல்வியை அரசாங்கமே கொடுக்க வேண்டும். அதுபோன்று பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 18 வயதுக்குப் பின், அவர்களின் வாழ்க்கைக்கான திட்டங்களையும்
கொண்டுவர வேண்டும்.

குழந்தைத் திருமணங்களிலிருந்து குழந்தைகளை மீட்பதற்கு முன், முதலில் பெற்றோர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்க வேண்டும். குழந்தைத் திருமணத்தை நடத்தி வைக்கும் பெற்றோர்களைக் கைது செய்தால், அவர்களைப் பார்த்து பலர் தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதைத் தவிப்பர். ஆனால், தமிழகத்தில் அப்படி நடைபெறுவதில்லை. சென்னையில் கூட பல இடங்களில் குழந்தைத் திருமணம் நடைபெறுவதாக அடிக்கடி தகவல்கள் வருகின்றன. இதுபோன்று ஒரு சில குழந்தைத் திருமணங்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தெரியவராத திருமணங்கள் ஏராளம்.

குழந்தைகள் திருமணம் நடைபெறுவதை உடனடியாக ஒழிக்க முடியாது. ஆனால், கடுமையான சட்டங்கள் மூலமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதை படிப்படியாகக் குறைக்க முடியும்" என்றார் கன்யா பாபு.

தகவல் உறுதுணை: தி டைம்ஸ் ஆஃப் இந்தியா