சிறப்புக் களம்

கூகுள் மீட், ஜி பே, சொமேட்டோ; ' இது வேற லெவல் திருமணம்' - சாதக பாதகங்கள் என்ன?

கூகுள் மீட், ஜி பே, சொமேட்டோ; ' இது வேற லெவல் திருமணம்' - சாதக பாதகங்கள் என்ன?

webteam

முன்பெல்லாம் திருமணங்களின்போது நிறைய சடங்குகள் இருந்ததால் குறைந்தபட்சம் 3 தினங்களாவது மண்டபத்தை பிடித்து, உறவினர்கள் புடைசூழ திருமணங்கள் நடந்தன. காலப்போக்கில் சடங்கு, சம்பிரதாயங்கள் சுருங்கி ஒன்றரை நாளில் திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஒரு நாள், பின்னர் ஒரு நாள் போட்டியில் இருந்து ட்வென்டி 20 என்பதுபோல, தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலால் காலத்திற்கேற்ப ஆன்லைனில் திருமணங்களை நடத்தும் பழக்கங்கள் மெல்ல தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. பந்திக்கு முந்தி, தள்ளு முள்ளுடன் மொய் பணம் வைத்து விட்டு மண்டபத்தை விட்டு உறவினர்கள் செல்வதும், அடுத்து வரும் காலங்களில் காணாமல்போகும் அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

இந்நிலையில் காலத்திற்கேற்ப மேற்கு வங்க மாநிலம் பிரதாமன் மாவட்டத்தைச் சேர்ந்த திருமண ஜோடி தங்கள் திருமணத்தை ஆன்லைனில் நடத்த திட்டமிட்டுள்ளனர். சந்தீபன் - அதிதீ ஜோடியின் இந்த ஆன்லைன் திருமணம் வரும் ஜனவரி 24ம் தேதி நடக்கிறது. கொரோனா கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, மாற்றி யோசித்த இந்த ஜோடி, உறவினர்கள் அனைவரையும் பங்கேற்க வைக்க நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தவுள்ளனர். அது தான் கூகுள் மீட். திருமணத்தன்று 2 கூகுள் மீட் லிங்க் உறவினர்களுக்கு அனுப்பபடவுள்ளது. அதில் ஒரு லிங்கிற்கு 250 பேர் வீதம் மொத்தம் 500 பேர் ஒரே நேரத்தில் அவர்களது திருமணத்தை காண முடியும்.

மேலும் திருமணத்தை ஆன்லைன் மூலம் காண்பவர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் சோமேட்டோ நிறுவனத்தின் மூலம் அனைவருக்கும் உணவு ஆர்டர் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமல்ல தம்பதிகளுக்கு கல்யாண பரிசளிக்க விருப்பமுள்ளவர்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் மூலம் தம்பதிக்கு பொருளை ஆர்டர் செய்து அனுப்பி வைக்கலாம். பணமாக மொய் செய்ய நினைப்பவர்கள் கூகுள் பே, போன் பே போன்ற செயலிகள் வழியாக அனுப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருமண பத்திரிகையிலும் இது குறித்த தகவல் அச்சிடப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளில் திருமணத்திற்கு ஆகும் செலவுகள்:

ஒரு சராசரி திருமணத்திற்கு அமெரிக்காவில் சுமார் 29,000 டாலர்கள் செலவாகின்றன; இந்திய மதிப்பில் இது ரூ.20 லட்சம் ரூபாய். ஸ்பெயினில் நடக்கும் திருமணங்களுக்கு சராசரியாக 23,000 அமெரிக்க டாலர்கள் செலவு செய்யப்படுகிறது. இத்தாலியில் 22,500 அமெரிக்க டாலர்கள் வரை திருமணத்திற்கு செலவாகிறதாம். பிரிட்டனில் 19,000 அமெரிக்க டாலர்களும், பிரான்சில் 17,000 அமெரிக்க டாலர்களும் செலவு செய்யப்படுகின்றன.

இந்தியாவில் திருமண செலவுகள்:

உலகத்திலேயே இந்தியா தான் திருமணத்திற்கு அதிகமாக செலவு செய்யும் நாடு. இந்தியாவில் சராசரியாக திருமணத்திற்கு ரூ.16 லட்சத்திலிருந்து 22 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ராஜஸ்தானில் தான் அதிகம் செலவுசெய்து திருமணங்கள் நடைபெறுகிறது. எளிமையாக நடத்த திட்டமிடப்படும் திருமணங்களுக்கே ரூ.15 லட்சம் செலவாகிறதாம். குஜராத் மாநிலத்தில் ரூ.14 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை செலவாகிறதாம். தெலங்கானா, ஆந்திராவில் ரூ.12 லட்சம் வரையிலும், தமிழகத்தில் ரூ.10 லட்சத்திற்கு குறைவு இல்லாமல் திருமணங்கள் நடப்பதில்லை எனக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் பேசுகையில், ''எங்கள் கிராமங்களில் திருமணம் என்றால் வேலைக்கு சென்றுவிட்டு, மாலை நேரத்தில் இருட்டிய பிறகு நடைபெறும். இரவு விருந்து கொடுக்கப்படும். கிராமத்தில் நடந்த திருமணங்கள் மாலை நேரத்தில் தான் நடைபெற்றது. இதன் நீட்சி தான் மாலை நேரத்தில் வைக்கப்படும் ரிஷப்சன் நிகழ்வுகள். கொரோனா காலத்தில் சொமேட்டோ, ஜிபேக்களை பயன்படுத்தி நடைபெற்றது. இதெல்லாம் ஒரு தொழில்நுட்பத்தின் மாற்றங்கள். என்னைப்பொறுத்தவரை திருமணங்கள் எளிமையாக நடைபெறுவதே சிறந்தது. ஆடம்பரத்தின் அம்சங்கள் ஒவ்வொன்றாக கூடி கூடி, திருமணங்களின் செலவுகள் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஆடம்பரத்தை பார்த்து, மற்றவர்களும் இதையே பின்தொடர ஆரம்பித்துவிட்டனர். சேலம், கோவை, போன்ற மாவட்டங்களில் பிரம்மாண்டமான முறையில் திருமணங்கள் நடைபெறுகின்றன. பகட்டை வெளிப்படுத்தும் விதமாக திருமணங்கள் நடைபெறுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது. எல்லாரும் செய்றாங்க நம்மளும் இதையே செய்யணும் என கடன்களை வாங்கித் தவிக்கும் பலருக்கும் திருமணங்கள் பெரும் தலைவலியாக மாறியிருக்கின்றன.

எனது நண்பர்கள் திருமணங்களில், ரிஜிஸ்டர் ஆபிஸூக்கு சென்று பதிவு செய்துவிட்டு, கிழே வந்து டீக்கடையில் டீ குடித்து விட்டு கலைந்து சென்றிருக்கிறோம். திருமணத்தை அதிக நபர்களுக்கு நீங்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றால், அதற்கு சமூக வலைதளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு ஏன் திருமணத்திற்கு இத்தனை பேரை அழைத்து, ஆடம்பர செலவுகள் செய்து இறுதியில் கடனாளியாக வேண்டும். எல்லாமே திருமணம் தான். இதற்கான அளவுகோலை வைப்பது யார்?.

எளிய முறையில் நடத்துவதும் திருமணம் தான். இங்கே முக்கியமான பிரச்னை என்னவென்றால், பணம் இருப்பவர் செய்யும் ஆடம்பர திருமணத்தைப்போல பணம் இல்லாதவரும் ஆடம்பரமாக திருமணத்தை நடத்த கட்டாயப்படுத்தப்படுகிறார். கௌரவ பிரச்னையாக மாறுவதில் தான் பிரச்னை. அடுத்த 5 ஆண்டுகளுக்கான உழைப்பை ஒரேநாளில் கடன் வாங்கி கரியாக்குவது தேவையற்றது என நான் கருதுகிறேன்'' என்றார்.