சிறப்புக் களம்

எளியோரின் வலிமை கதைகள் 12: மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வியலும்..போராட்டமும்!

எளியோரின் வலிமை கதைகள் 12: மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வியலும்..போராட்டமும்!

கலிலுல்லா

மனித குல வரலாற்றில் நாகரிக வளர்ச்சியின் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மண்பாண்டங்களாகத்தான் இருக்கும். மனித வாழ்க்கையின் தேவைகளை பல்வேறு வடிவங்களில் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்று மண்பாண்டங்கள். அப்படிப்பட்ட மண்பாண்டங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் கவனத்தில் கொண்டே நம்மோடு பின்னிப் பிணைந்தது என்று சொல்லலாம். உணவு சமைப்பதற்கு பல்வேறு வடிவங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். நாகரிகம் வளர்ச்சி அடைந்து உலோகங்களில் பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தாலும் இன்னமும் மண்பாண்டங்களில் உணவு சமைக்கும் பழக்கம் வெகுவாகவே இருந்துவருகிறது எப்போதும். அப்படிப்பட்ட மண்பாண்டங்களை தயாரிப்பவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

''என் பெயர் ஜெயவேல். எனக்கு வயசு 51 ஆகுது. சின்ன வயசில் இருந்தே மண்பானை செய்றதுதாங்க, எங்க வேலை. எங்க தாத்தா, அதுக்கப்புறம் எங்க அப்பா, இப்போ நான். பெருசா படிப்பு ஏதும் வரல, அப்ப இருந்த குடும்ப சூழல் பள்ளிக்கூடம் போவதற்கு போதிய வசதி இல்லாததால் பள்ளிக்கூடம் போகல. குடும்பத்தோட குளத்துல,ஏரியில மண்ணெடுத்துகிட்டு வந்து அப்பா வேலை செய்வார். அதிலேயே கவனம் அதிகமாயிடுச்சு.

சின்ன வயசுல அப்பா கூட ஏரியில போய் மண் எடுத்துட்டு வந்து கல்லு ஜல்லி எல்லாம் இல்லாம, சீராப் பிசஞ்சி பானை செய்வது வழக்கம். வெயில் காலங்கள்ல தான் மண் பானை செய்ய முடியும். அப்படி செய்ற பானைகளை மழைக்காலங்களில் விற்பனை செய்வோம். முழு நேரமும் வேலை இதுதாங்க எனக்கு.பானை மட்டுமில்ல அடுப்பு, அகல்விளக்கு, பெரிய பானை கல்யாண வீடுகளில் பயன்படுத்துகிற பதினோரு வகையான மண் பாத்திரங்கள் இதெல்லாம் செய்றது தான் எங்களுடைய வேலையா இருக்கும். குடும்பத்துல இருக்கிற எல்லாருமா இந்த வேலை தான் செய்வோம். அவங்கவங்க வயசுக்கு தகுந்த மாதிரி ஆளுக்கு ஒரு வேலையா பிரிச்சி செய்வோம்.

ஆம்பள ஆளுங்க சக்கரத்தில் மண்ணை போட்டு பானைய உருவாக்கி வெட்டிக் கொடுத்தா ஒருஆள் காயவைத்து தட்டி கொடுக்கிற வேலைய செய்வாங்க. ஒரு நாள் இரண்டு நாள் காய்ச்சல் முடிஞ்சதும் சூலையில் அடிக்கி வெச்சு தீ மூட்டனும். அப்படி சூலைமூட்ற நேரத்துல திடீர்னு மழை வந்துரும். அந்த மாதிரி நேரத்துல செஞ்சி வச்ச பானை நிறைய வீணாவது உண்டு. அந்த உழைப்பு அந்த மாதமோ ஒரு வருஷமோ பெரிய நஷ்டத்தை எங்களுக்குத்தரும். இந்த பானை செய்யற வருமானத்தில்தான் வழிவழியாக நாங்க குடும்பம் நடத்திட்டு வந்தோம்.

நான் பத்து வயசுல இந்த வேலைக்கு வந்தேன். அப்பல்லாம் ஒரு கிலோ 2 கிலோ 5 கிலோ பானைகள் செய்யறதுதான் வழக்கம். அப்ப பானை விலை ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் இப்படித்தான் இருந்துச்சு. பானை செய்றவங்க பெரும்பாலும் எல்லாம் ஒரு ஊருக்கு இரண்டு குடும்பமும் ஒரு குடும்பம் அப்படித்தான் இருப்போம். கல்யாணத்தில் இருந்து இழவு வரைக்கும் தேவைப்படும் எல்லா பானைகளையும் எங்ககிட்ட தான் வந்து வாங்கணும். இப்ப பொங்கல் நேரம். இனிமே கொஞ்சம் கொஞ்சமா பொங்கல் பானை வியாபாரம் கொஞ்சம் சூடு பிடிக்கும். பொங்கல் பானை வியாபாரம் மட்டுமே ஒரு ஆறு மாசம் குடும்பத்திற்கு தேவையான அளவுக்கு எங்களுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும்.

அப்புறம் கார்த்திகை தீபம் அகல் விளக்கு இப்படின்னு செய்வோம்.அப்பெல்லாம் நெல் கொட்டி வைக்க தொம்பை செய்வாங்க, இப்பல்லாம் யாரு சார் தொம்பை வைக்கிறாங்க. அது மாதிரி பெரிய பொருள் செய்தால் தான் கூடுதலாக பணம் கிடைக்கும். எனக்கு இந்த வேலை தினமும் செய்றதால பழகிப்போச்சு எனக்கு மூன்று பெண் ஒரு ஆண் பிள்ளையும் இருக்காங்க. பெண் பிள்ளைங்க எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு. மகன் போலீஸ் வேலை செய்றான்.எங்க குடும்பத்துல மண்பானை செய்கிற கடைசி ஆள் நானாத்தான் இருப்பேன். எனக்கு எவ்வளவு நாள் மண்பானை செய்ய முடியுமோ அவ்ளோ நாள் செஞ்சு கிட்டே தான் இருப்பேன்.

எனக்கு அப்புறம் யாரும் இல்லை. இப்ப எல்லாம் ஒரு கிலோ அரை கிலோ பானைதாங்க நிறைய வாங்குறாங்க. குடும்பம் சின்னதா போயிடுச்சு இல்லையா? அதனால சோறு வடிக்கிற பானை, மீன் வைக்கிற சட்டி, பருப்பு கடையற சட்டின்னு விதவிதமாக செய்வோம். என்னதான் உலோகத்துல நிறைய பாத்திரங்கள் வந்தாலும் மண்பானை பயன்படுத்தியவங்க அப்படியே தான் இருக்காங்க. மண்பானை செய்து வந்த வருமானத்தை வைத்து தான் என் பிள்ளைகளை படிக்க வச்சேன், கல்யாணம் பண்ணி கொடுத்தேன் நான் செஞ்சு கொடுத்த மண்பானைகளில் ஒரு லட்சம் குடும்பம் இன்னைக்கு ஏதோ ஒரு வகையில் உணவு சமைத்து சாப்பிடறத நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க'' என்றார் ஜெயவேல்.

என்னதான் உலோகங்கள் எலக்ட்ரானிக் உணவு தயாரிக்கும் சாதனங்கள் வந்தாலும் மண்பாண்டங்களுக்கு இன்னமும் மவுசு குறையாமல் தான் இருக்கிறது. ஆனால் மண்பாண்டங்கள் செய்கிற தொழிலாளர்களின் அடுத்த வாரிசுகள் இல்லாத சூழலில் இருந்து வருகிறது. இப்படியே போனால் எதிர்காலத்தில் மண்பாண்டங்கள் காட்சிப்பொருளாக கூட மாறிப்போகும் நிலை உள்ளது. அந்த வகையில் இன்னமும் ஆர்வத்தோடு மண்பாண்டங்கள் செய்யும் ஏழுமலையை சந்தித்தோம்.

''என் பெயர் ஏழுமலை . எனக்கு வயசு நாற்பத்தி ஏழு ஆகுது. என் குடும்பத்தில் நான் எட்டாவது பிள்ளை இரண்டாவது வரைக்கும்தான் படிச்சேன். எங்க அப்பாவுக்கு மண்பானை செய்வது தான் தொழில் அவர் கூட இருந்து நான் கத்துக்கிட்டேன். அப்பெல்லாம் கிராமத்தில பானை செய்றதுக்கு மண் எங்க வசதியாக கிடைக்கிதோ அங்கெல்லாம் போய் மண் எடுத்துட்டு வருவோம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க. ஆனா இப்ப எல்லாம் அதுக்கெல்லாம் பெரிய கட்டுப்பாடு வச்சுட்டாங்க. அங்க மண் பானை செய்றதுக்கு மண்ணு எடுக்க அரசாங்கத்துக்கிட்ட அனுமதி கேட்கணும், அரசாங்கம் எல்லா நாட்களில் நமக்கு அனுமதி கொடுக்கறதில்ல அப்படியே கொடுத்தாலும் குறிப்பிட்ட அளவுதான் மண் எடுக்க அனுமதி கொடுக்கும். காசு இல்லாம சும்மாவே மண் எடுப்போம். இப்ப மண் எடுக்க காசு கொடுக்கனும். அதை எல்லாம் சேர்த்து தான் நாங்க மண்பாண்டங்களை வித்துட்டு வருவோம்.

சாதாரணமா சின்னதா தயாரிக்கிற பானையா இருந்தா கூட, 50 ரூபாயிலிருந்து 70 ரூபா வரைக்கும் விக்கிறோம். அதுவும் கூட பொங்கல் தீபாவளி போல பண்டிகை காலத்துல ஓர் அளவுக்கு அதிகமாக பானை விக்கும். ஒரு பானை செய்யறதுக்கு ஒரு குடும்பமே உழைக்க வேண்டி இருக்கு. சாதாரணமா நினைக்க முடியாது. இந்த தொழில இதிலும் நிறைய கஷ்டம் இருக்கு. ஆனா கஷ்டத்தை எல்லாம் நாங்கள் எங்களுடைய வேலையில காட்டுறதில்லை. பானை, அகல்விளக்கு, அதுமட்டுமில்லாம விநாயகர் பொம்மையும் செய்வோங்க.

விநாயகர் சதுர்த்தி போன்ற நாள்ல அதுல கொஞ்சம் காசு கிடைக்கும். கொரோனா வந்ததிலே இருந்து பெருசா வருமானம் எதுவும் இல்லைங்க. நாங்க தான் படிக்கலையே அப்படின்னு நினைச்சு எங்க புள்ளைங்கள படிக்க வைச்சிட்டோம் அது ஒன்னு தாங்க நாங்க செஞ்ச நல்ல காரியம். எங்களுக்கு பிறகு பானை செய்றதுக்கு ஆள் இருக்க மாட்டாங்கன்னு நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு. பானை செய்ற வேலை இல்லாத நாள்ல கரும்பு வெட்டவோ, களை எடுக்கவோ போவோம். அதில வரும் சொற்ப வருமானத்தை வச்சு குடும்பத்தை ஓட்டிட்டு இருப்போம். எங்க புள்ளைங்க எல்லாம் தலையெடுத்து வேலைக்கு போய் சம்பாதிக்க ஆரம்பிச்சா தான் எங்களுக்கு ஓய்வு. அதுவரைக்கும் இந்த வேலை செய்துகிட்டேதான் இருப்போம் லாபமோ, நஷ்டமோ நம்ம செஞ்சு கொடுக்கிற வேலையால கொஞ்சம் பேர் சந்தோஷப் படறாங்க அது ஒன்னு போதுங்க" என்றார் ஏழுமலை.

எல்லா வேலைகளிலும் ஒரு நுணுக்கம் இருக்கும். ஒரு சிரமம் இருக்கும். பல சிரமங்கள் பல நுணுக்கங்களை உள்ளடக்கி தான் அந்த வேலை முடியுது. அப்படித்தாங்க இந்த பானை செய்ற வேலையும்.

-ஜோதி நரசிம்மன்