சிறப்புக் களம்

மாஸ்.. ஸ்டைல் தவிர ரஜினியிடம் கவனிக்கப்படாத ஒன்று - காதலும்.. ரஜினியும்..ஏன் ஸ்பெஷல்?

கலிலுல்லா

'என்னமோ பேசணும்னு சொன்னீங்க?' என ரஜினி ஆரம்பிப்பார். அதை எப்படி சொல்வது என தெரியாமல் குழப்பத்திலிருக்கும் ஸ்ரீதேவி, மெதுவாக பேசத்தொடங்குவார். 'சுத்தி வளைச்சு பேசத்தெரியாது' என தொடங்கி தன் காதலை வெளிப்படுத்திவிடுவார். 'இத நான் எதிர்பார்க்கல' என அவரது புரோபசலை நிராகரித்துவிடுவார் ரஜினி. உடனே அர்ச்சனா(ஸ்ரீதேவி) கண்களில் கண்ணீர் வந்ததும், அவரை ரஜினி சமாதானம் செய்யும் காட்சிகள் அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு குழந்தையைப்போல ஸ்ரீதேவியை ஆற்றுப்படுத்துவார். தொடக்கத்திலிருந்த அந்த கறார் முகம் கரைந்து, 'உங்கள நான் மனைவியா ஏத்துக்குறேன்' என குழையும் அந்த காட்சிக்கு இழையும் பசையை பின்னிருந்து ஒட்டியிருப்பார் இளையராஜா..அந்த படம் தான் மகேந்திரன் இயக்கிய ஜானி. உண்மையில் ரஜினிக்கு மாஸ், ஸ்டைல் மட்டுமல்ல ரொமான்டிக்கும் அழகாகவே வரும்!

இரண்டு கரும்பு ஜூஸ் க்ளாஸ்களை எடுத்துக்கொண்டு நடந்துவருவார். தடுமாறி ஒரு க்ளாஸிலிருக்கும் கரும்பு ஜூஸ் சிந்திவிடும். சிந்திய க்ளாஸை ஸ்ரீதேவி கேட்கும்போது, அதை கொடுக்க மறுத்து செல்லமாக நடக்கும் போராட்டத்தில் காருக்குள் வைத்திருக்கும் கேமிராவின் வழியே காதல் வழியும். 'நீ வெறும் காதலோட பேசு..மத்தத நான் பாத்துக்குறேன்' என சார்பட்ட பட டெம்ப்ளேட் போல, இளையராஜா இசைக்க டையலாக்கின் வெற்றிடத்தை ரஜினியின் பாவனைகள் நிரப்பும். ஜானி படத்தின் அந்த மாண்டேஜ் காதல் காட்சிகள் யாவும் ஸ்ரீதேவிக்கு டஃப் கொடுத்திருப்பார் ரஜினி. ஸ்ரீதேவிக்கும் ரஜினிக்குமான கெமிஸ்ட்ரி கச்சிதமாக பொருந்தி போகும்.. ஜானி ரஜினியின் காதல் சப்ஜக்ட்டுகளின் மாஸ்டர் பீஸ்!

அதேபோல புதுக்கவிதை படத்தில் ரஜினியின் காதல் காட்சிகள் ரசிகர்களுக்கான திரை விருந்து. மீண்டும் தன் பழைய காதலியை சந்திக்கும் காட்சி அது. தன் அண்ணன் குழந்தையை அழைத்துவர பள்ளிக்குச் செல்லும் ரஜினி ஸ்டன்னாகி நிற்பார். படியின் மேலிருந்து ஜோதி அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருப்பார். இருவருக்கும் இடையே உள்ள தூரத்தை காதல் கவ்விக்கொள்ளும். ஜோதி ஒவ்வொரு படியாக இறங்க 'வெள்ளைப்புறா ஒன்று' பாடலின் ஹம்மிங் ஒலிக்க அந்த சீன் முழுவதுமே காதல் வழியும். தொடர்ந்து வரும் சீன்களில் ரஜினியும் ஜோதியும் பேசும் உரையாடல்கள், க்ளோசப் ஷாட்களில் முதல் காதலின் நினைவுகளை தேக்கிவைத்த ஆணை அப்படியே உருவகப்படுத்தியிருப்பார்.

பிரேக் அப் காட்சிகளில் பிச்சி உதறியிருப்பார். தளபதி படத்தில் வரும் அந்த காட்சி க்ளாஸிக்!. 'நானா உன் பின்னாடி சுத்துனேன்.. நானா உன்ன பார்த்து பிடிச்சிருக்குன்னு சொன்னே..நானா உன் தோள்ல சாஞ்சு அழுதேன்.. போடி..போ' என சொல்லி முடித்ததும் ஷோபானா அந்த இடத்தை விட்டு நகர, அத்தனை வலியையும் 15 செகண்டில் கடத்தியிருப்பார் ரஜினி. அந்த காட்சியில் சந்தோஷ் சிவனின் கேமிராவும், இளையராஜாவின் வயலினும், புல்லாங்குழலும், ரஜினியின் நடிப்பும் போட்டி போட்டு ஒன்னுக்கு ஒன்னு சலச்சதில்ல என்பதை நிருபித்திருக்கும். அந்த காதல் காட்சி ரஜினி எனும் மாஸ் ஹீரோவிலிருந்த காதலனை வடிக்கட்டியிருக்கும்.

ரஜினி ஒரு காதல் மெட்டிரியல். அந்த மெட்டிரியலை சரியாக பயன்படுத்திய இயக்குநர்கள் மிகசிலரே.. அப்படியாக அண்மையில் ரொமான்டிக் ரஜினியை திரையில் பார்த்தது காலா படத்தில் தான்! இருள் சூழ்ந்த வீட்டுக்குள் ஹீமா குரேஷி அமர்ந்திருப்பார். குடும்பத்தாரை பயமுறுத்த நுழையும் ரஜினி பயந்து நிற்பார். உண்மையில் பழைய காதல் பயமுறுத்தக்கூடியது தானே!.. பிரதீப் வாய்ஸ் ஒலிக்க, ரஜினிக்கும், ஹீமாவுக்குமான க்ளோசப் நீண்ட நாட்கள் கழித்து ரஜினியின் காதல் முகத்தை வெளிப்படுத்தியது. 'எப்போ வந்த.. ஏதாவது சாப்டியா?' என அதிர்ச்சியில் திணறி பேசும் ரஜினி வெகுவாக ரசிக்கவைத்திருப்பார்.

படம் முழுவதுமே இழையோடும் காதல் ரஜினி ஒரு ரொமான்டிக் ஹீரோவாவே நடிக்கலாம் என தோன்ற வைக்கும்.. மழைக்கும் மண்வாசத்துக்குமான உறவைப்போல காதல்காட்சிக்கும் ரஜினிக்குமான கனெக்ஷன் வேறலெவலில் இருக்கும். பேட்ட, தர்பார், சிவாஜி போல மேலோட்டமான காதல்காட்சிகளைக்கடந்து, ஆழமான காதலுக்குள் பொருத்தி ரஜினியை முழுக்க முழுக்க ஒரு ஸ்டைலுடன் கூடிய காதல் ரஜினியை திரைவிருந்தாக்க இயக்குநர்கள் முன்வருவார்களா? என்பது அவரது பிறந்த நாளில் ரசிகர்கள் வைக்கும் கோரிக்கை.

ஹாப்பி பர்த்டே காதல் நாயகன் ரஜினி!

-கலிலுல்லா