சிறப்புக் களம்

ரபேல் விமானத்தை உருவாக்க தகுதியில்லாததா இந்திய அரசு நிறுவனம் ?

ரபேல் விமானத்தை உருவாக்க தகுதியில்லாததா இந்திய அரசு நிறுவனம் ?

webteam

ரபேல் விமான ஊழல் விவகாரத்தில் முக்கிய சர்ச்சையாக இருப்பது அனில் அம்பானியின் தேர்வு. ரபேல் விமானங்களை வழங்க உள்ள டசால்ட்ஸ் நிறுவனத்தின் இந்திய பங்குதாரராக தேர்வானதுதான் ரிலையன்ஸ் டிபன்ஸ் லிமிடெட். இந்த நிறுவனம் மூலமே இந்தியாவில் ரபேல் தொடர்பான வியாபரத்தை டசால்ட்ஸ் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதில் என்ன சர்ச்சை ? ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் இதில் எப்படி வந்தது ?

கடந்த 2015 ஏப்ரலில் பிரதமர் மோடி , அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹாலண்டை சந்தித்த பின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார். அதில் பறக்கும் நிலையில் தயாராக உள்ள 36 ரபேல் போர் விமானங்களை டசால்ட்ஸ் ஏவியேஷன் நிறுவனத்திடம் இருந்து இந்தியா வாங்க உள்ளதாக கூறினார். பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியானது ஏப்ரல் 2015. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது மார்ச் 2015-ல். அதாவது சரியாக ஒருமாதம் முன்பு. அந்நிறுவனத்தின் ஆரம்பகட்ட மூதலீடு என்பது வெறும் ரூ.5 லட்சம். அனில் அம்பானியின் மற்ற நிறுவனங்கள் கடும் சரிவை சந்தித்துக் கொண்டிருந்த தருணமும் கூட. 

காங்கிரஸ் ஆட்சியில் டசால்ட்ஸ் நிறுவனத்தில் தொழில்நுட்பங்களை பெற்று ரபேல் விமானங்களை இந்தியாவில் உருவாக்கும் பணி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனத்திடம் கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் 2015-ல் அறிவிக்கப்பட்ட முடிவில் HAL நிறுவனம் நிரகாரிக்கப்பட்டது. இது குறித்து கேள்வி எழுப்பிய போது “HAL நிறுவனம் சீரழிந்து விட்டதாகவும், ரபேல் விமானங்களை உருவாக்குவதற்கான தகுதியில்லை என்றும் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆனால் தேஜஸ் விமானத்தை தயாரித்தது HAL நிறுவனம் என்பது கடைசியாக பாதுகாப்பு படையில் சேர்க்கப்பட்ட நவீன விமானம் என்பது அதுவே என்பதும் குறிப்பிடத்தக்கது. 

ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்கல் நிறுவனம் இந்தியாவின் பாதுகாப்பு படையில் உள்ள பல்வேறு விமானங்களை தயாரித்து வரும் ஒரு அரசு நிறுவனம். கடந்த 60 வருடங்களில் பல நூறு பாதுகாப்பு விமானங்களை தயாரித்த பெருமை HAL நிறுவனத்துக்கு உண்டு. குறிப்பாக இந்திய விமானப்படையில் உள்ள மிக் 21, மிக் 27, ஜாகுவார், சுகோய் 30, டார்னியர் போன்றவையும், துருவ், ருத்ரா, ஜீடாக் போன்ற உயர்ரக ஹெலிகாப்டர்களும் HAL நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டவையே. 

ஏரோனாடிக்ஸ் துறையில் அனுபவம் உள்ள கரீம் கூறும் போது “ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஹெலிகாப்டர்களை தற்போது எட்டு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அதோடு சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் HAL நிறுவனம் தயாரிக்கும் உதிரி பாகங்களை பயன்படுத்துவதோடு, சில தொழில்நுட்பங்களை பெற்றூ பயன்படுத்தி வருகின்றன. அம்பானி போன்றவர்களால் HAL நிறுவனத்துக்கு இணையாக செயல்பட முடியுமா என்பது சதேகமே. 60 ஆண்டுகள் அனுபவம் எங்கே, 12 நாட்கள் முன் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் எங்கே’ என்றார்.