அனைவருடைய வாழ்க்கையிலும் மன பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால் அதிகப்படியான மன அழுத்தமானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடும். இதனால் ரத்த அழுத்தம் அதிகரித்து உடலின் முக்கிய பாகங்களான இதயம், சிறுநீரகம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் சொல்வதுண்டு.
மன அழுத்தமும் உடல் உறுப்புகளும்
எப்போதெல்லாம் உடல் மற்றும் மனம், அழுத்தம் அல்லது பதற்றப்படுகிறதோ, உடலின் சமநிலையானது பாதிக்கப்படும். இதுவே நாள்படும்போது, நாள்பட்ட உடல் - மன நல பிரச்னைகளுக்கு அது வழிவகுக்கும். இப்படியான ஆபத்துகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மனித உடல் அழுத்தத்துக்கு உள்ளாகும். அதுவே அதிகமாகும்போது அல்லது நாள்பட்டு தொடரும்போது உடல் ஆரோக்கியத்திற்கு மோசமாக தீங்கு விளைவிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
இதுவொரு புறமிருக்க, மனிதர்கள் மத்தியில் நாள்பட்ட சிறுநீரக பிரச்னை, நெப்ரோடிக் சிண்ட்ரோம், இறுதி நிலை சிறுநீரக நோய் மற்றும் பிற சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் பின்னணியில் பணிநீக்கங்கள் மற்றும் வேலையிழப்பு போன்றவைதான் முக்கிய காரணமாக இருப்பதாக அவர்கள் விளக்கியுள்ளனர்.
இதுகுறித்து ரீகல் மல்டி - ஸ்பெஷாலிட்டு மருத்துவமனையின் சிறுநீரக அறுவைசிகிச்சை நிபுணரும், சீனியர் யூராலஜிஸ்ட்டுமான டாக்டர் சூரிராஜு கூறுகையில், “30 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேலையிழப்பால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே சிறுநீரக பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். சிறுநீரக பிரச்னைகளால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பணிநீக்கம் மற்றும் வேலையிழப்பால் ஏற்பட்ட மன அழுத்தமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது” என்றுள்ளார்.
மன அழுத்தம் எப்படி சிறுநீரகத்தை பாதிக்கிறது?
“ரத்தத்தை சுத்திகரிக்கும் உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகமானது உடலில் ரத்த ஓட்டம் மற்றும் ரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்புகளால் பாதிக்கப்படுகிறது. அதிக ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல் போன்றவை சிறுநீரகத்துக்கு சுமையாக மாறுகிறது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்னை ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது” என்கிறார் டாக்டர் சூரிராஜு. சிறுநீரக பிரச்னை உள்ளவர்களுக்கு இதயம் மற்றும் ரத்த நாளங்கள் தொடர்பான பிரச்னைகள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
“மன அழுத்தம் மற்றும் மன பதற்றம் போன்றவற்றிலிருந்து விடுபட நிறையப்பேர் மதுவை நாடுகின்றனர். இது சிறுநீரகத்தை மேலும் பழுதாக்குகிறது. சிறுநீரகத்தின் முக்கிய வேலையே ரத்தத்திலுள்ள நச்சுக்களை வடிகட்டுவதுதான். ஆல்கஹால் இந்த வேலையை மேலும் கடினமாக்குகிறது” என்கிறார் சூரிராஜு.
சிறுநீரக ஆரோக்கியத்தை பாதுகாப்பது எப்படி?
மன அழுத்தம் ஏற்படாமல் தடுப்பது என்பது இன்றைய பரபரப்பான வாழ்வியலில் நமக்கு சாத்தியமில்லை என்றாலும், அதனை குறைக்க சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். முடிந்தவரை மன அழுத்தத்திற்கு ஏற்ப உடலை வருத்தாமல் இருப்பது நல்லது. அதற்கு சில எளிய வழிகள் உங்களுக்கு உதவலாம். அப்படியான சிலவற்றை டாக்டர் சூரிராஜு பரிந்துரைத்துள்ளார். அவற்றை இங்கே பார்ப்போம்:
“ஆரோக்கிய உணவு பழக்கம்
இதயம் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய உணவுகளை அதிகம் தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். அதிக சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்துக்கொள்ள வேண்டாம். தினசரி உணவில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இடம்பெற்றிருப்பது அவசியம். இதனுடன், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றின் அளவையும் தினசரி டயட்டில் குறைப்பதும் அவசியம். தினசரி உணவில் 2,300மி.கிராமுக்கும் குறைவான சோடியத்தை சேர்ப்பதும், தினசரி உணவில் சர்க்கரையால் சேரும் கலோரிகளில் 10 சதவீதத்தை குறைக்க முயற்சிப்பதும் நல்லது.
உடற்பயிற்சி
ஒருநாளில் குறைந்தது 30 - 45 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். இது உடலை கட்டுக்கோப்புடன் வைப்பது மட்டுமல்லாமல் ரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
எடை பரிசோதனை
தினசரி உடலில் சேரும் கலோரிகளின் அளவு மற்றும் உடல் இயக்கம் ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இது ஆரோக்கியமான உடல் எடையை அடைய உதவுகிறது. ஏனெனில் உடற்பருமன் மற்றும் அதீத உடல் எடை போன்றவைதான் உடல் மற்றும் மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
தூக்கம்
தினசரி எந்தவித இடையூறும் இல்லாத 7 - 8 மணிநேர தூக்கம் அவசியம். தூக்கத்தின் இடையே இடையூறு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய தியானம், மருந்து, உடற்பயிற்சி, முறையான உணவு போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் அலாரத்தை Snooze செய்யும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
புகைபிடித்தல்
புகைபிடித்தல் பல்வேறு உடல்நல பிரச்னைகளுக்கு காரணமாக இருக்கிறது என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. மன அழுத்தத்தில் உள்ள ஒரு நபர் புகைபிடிக்கும்போது அது மேலும் டென்ஷனை அதிகரிக்கிறது. எனவே புகைபிடித்தல் பழக்கத்தை கைவிடுவது நல்லது”