பட்ஜெட் அறிக்கைக் குறித்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்துறையினரின் கருத்துகளைப் பார்க்கலாம்.
மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றபின் இன்று முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன் தமிழகத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் காகிதமில்லா பட்ஜெட்டும் இதுவாகும்.
இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. இந்நிலையில் காலை 10 மணி அளவில் சட்டப்பேரவைக்கு வந்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காகிதமில்லா இ-பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் கல்வித்துறை, சுகாதாரத்துறை, நீர்வளத்துறை மற்றும் தொழில்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார். குறிப்பாக ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முன்னேற்றத்தைக் கருத்தில்கொண்டு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டங்கள் சிறு, குறு தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியதா என்பது குறித்த கருத்துக்களை முன்வைக்கின்றனர் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள்.
திருவண்ணாமலை, நெல்லை, விருதுநகர், நாமக்கல், தேனி, சிவகங்கை, விழுப்புரம், நாகை ஆகிய 8 மாவட்டங்களில் புதிதாக சிப்காட் நிறுவனங்கள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நிறைந்த அம்பத்தூர் பகுதியில் தொழிற்துறையினரின் கருத்துக்கள்: ’’கடந்த வாரம் நிதியமைச்சர் பல்வேறு தொழில் அமைப்புகளை அழைத்து ஆலோசனை கேட்டார். அதில் பல கோரிக்கைகளை வைத்திருந்தோம். அதில் சிலவற்றை இன்று நிறைவேற்றி இருக்கின்றனர். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் மின் வாகன உற்பத்தி தொழில்சாலை, காஞ்சிபுரத்தில் மருத்துவ சாதன தொழிற்சாலை, தூத்துக்குடியில் 4000 கோடி செலவில் டைடல் பூங்கா மற்றும் பல மாவட்டங்களில் சிப்காட் நிறுவனங்கள் உருவாக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர்.
அதேபோல், எம்.எஸ்.எம்.இ நிறுவனங்களுக்கு அதிகளவில் வங்கிகள் மூலம் லோன்பெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. TREDS என்று சொல்லக்கூடிய திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்துவதாகக் கூறியிருக்கின்றனர். இதன்மூலம் எங்களைப்போன்ற நிறுவனங்கள் அரசுக்கு செய்யும் சேவைகளுக்கு பில் கொடுத்த சில நாட்களுக்குள்ளேயே அதற்கான தொகை எங்கள் கணக்குக்கு வந்துவிடும் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளனர். அதேபோல் சென்னை, கோவை போன்ற பெருநகங்களில் தொழிலாளர்கள் மலிவான வாடகையில் தங்க கட்டடங்கள் கட்டித் தரப்படும் என்று கூறியிருக்கின்றனர்.
சிறு நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருப்பது எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேசமயம் சிறு, குறு நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரியை வரும் 20ஆம் தேதிக்குள் கட்டி ஆக வேண்டும். ஆனால் எங்கள் வாடிக்கையாளர்கள் 45 - 60 நாட்கள் கழித்துத்தான் தருவார்கள். எனவே மற்ற திட்டங்களைப் போன்று 90 நாட்களுக்கு தவணை அட்டையை எங்களுக்குக் கொடுத்தால் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வந்தவுடன் அதை செலுத்திவிடுவோம். இதனால் தற்போது சிக்கல்களை சந்தித்துவரும் பல நிறுவனங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்’’ என்று கூறியுள்ளனர்.
சிறு குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கிட மின்னணு தரவுகள் அடிப்படையில் கடன் மதிப்பீட்டு முறை அமலாகும் என்றும், சிறு குறு நிறுவனங்களுக்கு கடன்தர தமிழ்நாடு தொழில்கூட்டுறவு வங்கியை மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
’’இன்று வெளிவந்துள்ள நிதிநிலை அறிக்கையைப் பொருத்தவரை எங்களுடைய எதிர்ப்பார்ப்புகள் பெரிதாக நிறைவேறவில்லை. வட்டி துணை ஓய்வூதியம் கிடைத்திருந்தால்கூட கொரோனா காலத்தில் உதவியாக இருந்திருக்கும். இருந்தாலும், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஆய்வறிக்கை மேற்கொள்ள இருப்பது ஒரு நல்ல முன்னெடுப்பு என்றுதான் கூறவேண்டும். இது எதிர்கால தொழில்வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். அதேபோல், பெருநகர வளர்ச்சி திட்டமும் நகர வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். பல்வேறு ஏற்றுமதிகளுக்கு விமான நிலைய விரிவாக்கம் பெரும் உதவியாக இருக்கும்’’
’’வேலைவாய்ப்பு திறன் மேம்பாட்டு பயிற்சி பள்ளிக்கு 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்கள் தாங்களாகவே சிறுதொழில் ஒன்றை உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதை வரவேற்கிறோம். அதேசமயம் பெரும் தொழிலகங்களுக்கான திட்டங்களை தென் மாவட்டங்களில் எதிர்பார்த்தோம். சிவகங்கை, விருதுநகர் மற்றும் நெல்லையில் தொழில்பேட்டைகள் தொடங்கும் திட்டம்பற்றி கூறியிருக்கின்றனர். அதில், பெரிய கம்பெனிகளை வைத்தால் வேலைவாய்ப்பு அதிகமாகும். சிறு நிறுவனங்களும் அங்கு தேவையான பாகங்களை வழங்கினால் தென் மாவட்டத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்’’ என்கின்றனர்.
மேலும், 1. மதுரை முதல் தூத்துக்குடி வரையிலான தொழில் பெறுவழி தடம் அமைக்க வேண்டும்
2. சர்வதேச அளவில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்
3. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மற்றும் துணைக்கோள் நகரம் திட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும்
4.பெரிய அளவிலான தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும்
5. சிறு குறு தொழில் நடத்துவோருக்கு 30 சதவீத மானியம் வழங்கிட வேண்டும்
6. மெட்ரோ ரயில் திட்டம் அமல்படுத்த வேண்டும்
7.விவசாய தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்த வேண்டும்
என்பது போன்ற பல்வேறு திட்டங்களை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்