தமிழகத்தில் முதன் முதலில் துவக்கப்பட்ட கார் உற்பத்தி கம்பெனி என்ற பெருமை அமெரிக்காவின் ஃபோர்டு நிறுவனத்திற்கே உண்டு. இப்படியொரு பெருமை கொண்ட ஃபோர்டு நிறுவனம் தற்போது தமிழகம் மற்றும் குஜராத்திலுள்ள தங்களது இரண்டு தொழிற்சாலைகளையும் நஷ்டத்தைக் காரணம் காட்டி மூடுவதாக அறிவித்துள்ளது.
’ஃபோர்டு நிறுவனத்தினர் கார் உற்பத்தி தொழிற்சாலையை மூடக்கூடாது. இதனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் 40 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்” என்று அதிர்ச்சியுடன் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள் தொழில்துறையினர். இந்த நிலையில், கடந்த அதிமுக அரசின் தொழில்துறை அமைச்சராக இருந்த எம்.சி சம்பத்திடம் சில கேள்விகளை முன்வைத்தோம்,
ஃபோர்டு நிறுவனம் மூடுவதாக அறிவித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?
“ஜெயலலிதா மிகவும் விருப்பப்பட்டு ஃபோர்டு கம்பெனியை தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இந்தியாவில் தங்கள் உற்பத்தியை எங்கு துவங்கலாம் என்று ஃபோர்டு கம்பெனி பல மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்தபோது, ‘அனைத்து வசதிகளையும் நாங்கள் செய்து கொடுக்கிறோம்’ என்றுக்கூறி முழு முயற்சியில் ஃபோர்டு கார் உற்பத்தியை துவங்க வைத்தார் ஜெயலலிதா. இதற்காக, வழிகாட்டல் குழுவினரின் ஆலோசனையை எல்லாம் கேட்டறிந்தார். கடந்த 1992 ஆம் ஆண்டிலிருந்து போர்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தார். அவரின் முயற்சியாலேயே 1995 ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டன.
கார் உற்பத்தியாகட்டும் கார் உதிரி பாகங்களின் உற்பத்தியாகட்டும் உலகளவில் தமிழகம் டாப் 10 இடத்திற்குள் இருக்கக் காரணம் ஃபோர்டு கம்பெனியின் அடித்தளம்தான். ஃபோர்டு வந்தபிறகே, ஹூண்டாய், நிசான், பி.எம்.டபிள்யூ என எல்லா கார் கம்பெனிகளும் வந்தது. தமிழகத்திற்கே பெருமை சேர்த்த ஃபோர்டு தற்போது மூடப்போவதாக அறிவித்துள்ளது பேரதிர்ச்சியையும் அச்சத்தையும் எனக்கு மட்டுமல்ல, எதிர்கட்சித் தலைவருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஃபோர்டு நிறுவனத்தினர் சேல்ஸ் குறைந்து இழப்பு அதிகமாக இருப்பதாக என்னிடம் குறைகளைச் சொன்னவுடன் உடனடியாக முதல்வர் கவனத்திற்கு எடுத்துச்சென்று ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்தேன். முதல்வரும் அவர்களை ஊக்கப்படுத்தி தேவையானவற்றை செய்துகொடுத்தார். ஆனால், தற்போது அமைந்துள்ள திமுக அரசு ஃபோர்டு கம்பெனியை கைவிடுகிறார்கள். அவர்களைச் செல்ல விடக்கூடாது. எப்படியாவது மத்திய அரசிடமும் பேசி தடுத்து நிறுத்தவேண்டும். ஃபோர்டு தமிழகத்தை விட்டு செல்வது என்பது தமிழகத்திற்கே மிகப்பெரிய இழப்பு. திமுக அரசு அமைந்தபிறகு கட்டாயம் ஃபோர்டு நிறுவனத்தினர் தங்கள் குறைகளை அரசிடம் சொல்லியிருப்பார்கள். மானியம் உள்ளிட்டவற்றை அதிகப்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்வதுதான் ஒரு நல்ல அரசின் கடமை. அதனால், ஃபோர்டின் குறைகளை ஆராய்ந்து சாத்தியக்கூறானவற்றை செய்துகொடுப்பது திமுக அரசின் கடமை. ஆட்டோ மொபைல்துறை அப்போதுதான் ஆரோக்கியமாக இருக்கும். ஃபோர்டு இருப்பதால் மாநிலத்தின் ஜிடிபி உயருவதோடு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயமும் தவிர்க்கப்படும். இதனையெல்லாம், திமுக அரசு கருத்தில்கொண்டு தமிழகத்தில் முதன்முதலில் கால் பதித்த ஃபோர்டு கம்பெனியை கைவிடக்டாது”.
ஆனால், பாஜக அரசின் செல்லாக்காசு நடவடிக்கை... ஜி.எஸ்.டி போன்றவற்றால்தான் ஃபோர்டு நிறுவனம் இழப்பை சந்தித்ததாகக் கூறப்படுகிறதே?
”மாநில அரசு தொடர்ந்து மானியம் கொடுப்பதால் ஜி.எஸ்.டியால் ஃபோர்டு நிறுவனத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அதோடு, குறைந்த வட்டியில் சாஃப்ட் லோன் எல்லாம் நாங்கள் கொடுத்திருக்கிறோம். பாஜகவுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமுமில்லை”
தொழில்துறையில் புதிதாக அமைந்துள்ள திமுக அரசின் செயல்பாடுகள் எப்படி இருப்பதாக பார்க்கிறீர்கள்?
”தொழில்துறையில் திமுக அரசு சாதிக்க எங்கள் அரசு நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறது. தமிழகத்தில் புதிய நிறுவனங்கள் துவங்குவதற்காகவே 15 துறைகளை இணைத்து பல்வேறு முன்னேற்பாடுகளை செய்துள்ளோம். அதேசமயம், தமிழக அரசு 2.o கொண்டுவந்துள்ளது வரவேற்கத்தக்கது. அது இன்னும் வலிமையாய் செல்லவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆட்டோ மொபைல் துறைக்கு தனி பாலிசி, தொழில்துறை பாலிசி, ஐ.டி பாலிசி, தொழில்துறை மற்றும் ஆட்டோ மொபைல் ரிவைஸ்டு பாலிசி, பயோடெக் பாலிசி, ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் பாலிசி போன்ற ஏகப்பட்ட புதிய தொழில் கொள்கைகளை அதிமுக அரசு உருவாக்கியுள்ளது. இதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் புதிய கொள்கைகளையும் கருத்துக்களையும் சேர்த்து தமிழகத்திற்கு எத்தனை கம்பெனிகள் வரவேண்டும்? எந்தெந்த நாடுகளில் இருந்து வரவேண்டும்? என்னென்ன வசதிகள் செய்து தரவேண்டும்? என்பதையெல்லாம் ஆராய்ந்து செய்துகொடுத்தால் சந்தோஷப்படுவோம். தற்போது, தமிழகத்திற்கு 17 ஆயிரம் கோடி முதலீடு வந்துள்ளது. அதில், 70 சதவீதம் நாங்கள் இருக்கும்போது வந்ததுதான்”.
ஆனால், அதிமுக ஆட்சியில் உலக தொழில் முதலீட்டார்கள் மாநாடு நடத்தி எந்த நிறுவனமும் தமிழகத்திற்கு வரவில்லை என்று திமுக விமர்சனம் செய்துள்ளதே?
”ஜெயலலிதாதான் தமிழகத்தில் முதன்முதலில் 2015 ஆம் ஆண்டு உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தினார். மற்ற மாநிலங்களில் முன்னரே செய்திருந்தாலும், தமிழகத்தில் அவர்தான் முதன் முதலில் இந்த முயற்சியை ஏற்படுத்தினார். 2015 ஆம் ஆண்டு 72 நிறுவனங்களும், 2019 ஆம் ஆண்டு நடந்த உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு மூலம் சிறப்பாகவே 81 நிறுவனங்களும் வந்தார்கள். அவர்கள், தங்கள் உற்பத்தியை துவங்கியதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பையும் கொடுத்திருக்கிறோம். திமுகவின் எங்கள் மீதான விமர்சனம் பொய்யானது. நன்கு ஆராய்ந்து பார்க்கவேண்டும்”.