சிறப்புக் களம்

மாஸ்க் அணிவதை மக்கள் அலட்சியப்படுத்துகிறார்களா? மாஸ்க் ஏன் கட்டாயம்?

webteam

மாஸ்க் அணிய வில்லை என்றால் அபராதம் விதிக்கும் அவசர சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 அதன்படி முகக் கவசம் அணியத் தவறினால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம். பொது இடங்களில் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் 500 ரூபாய் அபராதம். தனிமைப்படுத்துதல் விதிகளை மீறும் நபர்களுக்கு 500 ரூபாய் அபராதம். 

சலூன்கள், ஜிம் கள், வணிக அமைப்புகள் உள்ளிட்டவற்றின் நடைமுறைகளை மீறினால் 5,000 ரூபாய் அபராதம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற தவறும் தனிநபர்களுக்கு 500 ரூபாய் அபராதம். கட்டுப்படுத்தப்பட்ட பகுதி வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் வரும் வாகனங்கள், வணிக வளாகங்களுக்கு 5,000 ரூபாய் அபராதம் என சிறப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. 

கடந்த இரண்டு நாட்களில் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து இருந்து 2 கோடி ரூபாய் சென்னையில் மட்டும் வசூல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களிடம் அச்சமின்மையா அல்லது அறியாமையா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுகுறித்து மருத்துவர் ஜெபசிங் கூறுகையில் "மக்களிடம் கண்டிப்பாக அச்சம் என்பது உள்ளது. நமக்கெல்லாம் வராது என்ற அறியாமையும் உள்ளது. கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் சனிடைசர் கையில் வைத்திருப்பது நல்லது. சிலருக்கு மூச்சு திணறல் பிரச்சனை இருக்கிறது. முதலில் அந்த பிரச்சனை எங்களுக்குமே இருந்தது. ஆனால் தொடர்ந்து பயன்படுத்தினால் அது பழகிவிடும். மாஸ்க்கை கழட்டும் போது முடிந்த அளவு மூச்சை வெளியே விட்டுக் கழட்டவும். மாஸ்க்கை கழட்டும் போது மூச்சை உள்ளே இழுத்தால் அதிலிருக்கும் கிருமிகள் மூச்சுக்குழல் வழியாக உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. பயன்படுத்திய மாசுகளை முடிந்த அளவு வீட்டிலேயே டிஸ்போஸ் செய்வது அவசியம். மாஸ்க் போடும் இடங்களில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது" எனக்கு தெரிவித்தார்.

இது குறித்து மக்கள் கூறுகையில் "முகக் கவசங்களை வாங்க கூடுதலாக செலவாகிறது. அரசு இலவசமாக வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் மக்கள் தாராளமாக முகக் கவசங்கள் அணிந்து வெளியே வருவார்கள். கொரோனா பரவாமலிருக்க கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்" எனத் தெரிவித்தனர்.

 இது குறித்து எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குனர் விஜயா கூறுகையில் "மக்களுக்கு பாதுகாப்பு என்றால் என்.95 மாஸ்க் தான் பயன்படுத்த வேண்டும். இதனால் சிலர் அதிக விலைக்கு மாஸ்க்குகளை விற்று வருகின்றனர். அதை அரசு கவனிக்க வேண்டும். ஒரு மாஸ்க்கை 8 மணி நேரம் பயன்படுத்தலாம்." என தெரிவித்தார்.