எஸ்.எல்.ஷக்தர் pt web
சிறப்புக் களம்

வாக்குச்சீட்டு மீது இப்படியெல்லாமா குற்றச்சாட்டு எழுந்தது? - இந்தியாவில் EVM இயந்திரம் உதயமான கதை!

தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், அப்போது வாக்குச்சீட்டுகள் ஹேக் செய்யப்பட்டதாகவும் அப்போதைய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

Angeshwar G

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு எதிர்க்கட்சியினர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டு இருக்கின்றன. அரசியல் தலைவர்கள் பலரும் பாஜக அரசு மீது குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறார்கள். இத்தகைய சூழலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட சுவாரஸ்ய பின்னணி குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

முதன்முறையாக தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்துவதற்கான யோசனையை முன்மொழிந்தவர் 1977 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையராக பதவியேற்ற எஸ்.எல்.ஷக்தர்.

வாக்குச்சீட்டு முறைகளால் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக ஏகப்பட்ட பிரச்சனை. வாக்குச்சீட்டுகளுக்கான சிறப்புத்தாள், அதிகமான வாக்குப்பதிவு நேரம், சரியான இடத்தில் முத்திரை இல்லாததால் நிராகரிக்கப்படும் வாக்குகள், அதிகளவில் இருக்கும் வாக்குச்சாவடி பணியாளர்கள் என பல்வேறு சிக்கல்கள் இருந்தது. இவையனைத்தையும் கருத்தில் கொண்டு வாக்களிக்கும் முறையை மின்னணு பயன்பாட்டிற்கு மாற்ற முனைந்தார் தேர்தல் ஆணையர் ஷக்தர்.

தற்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துவரும் நிலையில், அப்போது வாக்குச்சீட்டுகள் ஹேக் செய்யப்பட்டதாகவும் அப்போதைய எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

1971 - 72ல் நடந்த தேசத்தின் ஐந்தாவது தேர்தலின்போதே, இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்தன. குற்றச்சாட்டுகளின்படி, மொத்தமிருந்த 518 நாடாளுமன்ற தொகுதிகளில் 200 முதல் 250 வரையிலான தொகுதிகளில், வாக்குச்சீட்டுகள் வேதியியல் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இந்திராகாந்தி கட்சியின் சின்னத்தில் கண்ணுக்குத் தெரியாத மை கொண்டு முத்திரையிடப்பட்டிருக்கும். இது 72 மணி நேரத்திற்கு பிறகு, அதாவது வாக்காளர்கள் வாக்களித்திருந்தாலும் அதுமறைந்து இந்திரா காந்தியின் சின்னத்தில் தெரியும் என்பதே குற்றச்சாட்டு. மேலும், இத்தகைய வாக்குச்சீட்டுகள் சோவியத் யூனியனில் அச்சிடப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

தெற்கு டெல்லி மக்களவைத் தொகுதியில் இந்திரா காங்கிரஸ் வேட்பாளர் சசிபூஷன் வெற்றி பெற்ற நிலையில், தோல்வி அடைந்த பாரதிய ஜனசங்கத்தைச் சேர்ந்த பால்ராஜ் மதோக் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். வாக்குசீட்டுகளில் முறைக்கேடு செய்யப்பட்டதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.

அந்த மனுவில் அவர் தெரிவித்திருந்ததாவது, “பெரும்பான்மையான வாக்குச்சீட்டுகள் மற்ற வாக்குச் சீட்டுகளின் நிறத்தில் இருந்து வேறுபட்டு இருந்தது. வாக்களித்ததை காட்டும் முத்திரை, ஒவ்வொன்றிலும் ஒரே மாதிரியாக, ஒரே இடத்தில், ஒரே அடர்த்தியில் பிரகாசமாக இருந்தன. தோல்வியுற்ற வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குச்சீட்டுகளுடன் ஒப்பிடும் போது, அது முற்றிலும் வேறுபட்டு இருந்தது. குற்றச்சாட்டுகளுக்கு நேரடி ஆதாரம் இல்லை என்றாலும் எண்ணும் நேரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டது” என தெரிவித்திருந்தார்.

இதேபோல் பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்கை முழுமையாக விசாரித்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, வாக்குச் சீட்டுகள் வேதியியல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறும் மனுதாரர், அதற்கான எந்த அடிப்படை ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

உச்சநீதிமன்றம்

தேர்தல் ஆணையம் மேற்கண்ட குற்றச்சாட்டை அபத்தமான மற்றும் அருமையான கதை என தெரிவித்தது. மேலும், குற்றச்சாட்டுகள் எல்லாம் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே கூறப்பட்டது என்றும் கண்ணுக்குத் தெரியாத மை அல்லது வேதியியல் முறைகளுக்கு உட்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் முடிவுகள் வருவதற்கு முன் இந்தியாவின் எந்த பகுதியிலும் வதந்தியாகக் கூட எழவில்லை என தேர்தல் ஆணையம் கூறியது. அதுமட்டுமில்லாமல், 200 முதல் 250 தொகுதிகளில் இத்தகைய செயல்முறைகள் நடந்தது என்றால் யார் ஒருவர் கூடவா பார்த்து புகாரளித்திருக்க மாட்டார்கள் என தெரிவித்திருந்தது.

இத்தகைய சூழல்களுக்கு மத்தியில்தான் தேர்தல் ஆணையராக எஸ்.எல்.ஷக்தர் பொறுப்பேற்றார். 1977 ஜூன் 18 ஆம் தேதி பொறுப்பேற்ற அவர் ஏற்கனவே 3ஆவது, 4ஆவது, 5ஆவது மக்களவைகளில் மக்களவைச் செயலாளராக பணியாற்றி இருந்தார். மக்களவைச் செயலாளராக நாடாளுமன்றத்தில் மின்னணு வாக்குப்பதிவு முறையை அறிமுகப்படுத்தி இருந்தார்.

இந்திய தேர்தல்களிலும் மின்னணு முறையில் வாக்குப்பதிவு செய்ய முயற்சிகளை மேற்கொண்டார். இதனை அடுத்து ஹைதராபாத்திலுள்ள இந்திய எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் தலைமையகத்திற்கு சென்று தேர்தலை நடத்துவதற்கான மின்னணு அமைப்புகளை வடிவமைக்கும் பணிகளில் ஈடுபடுமாறு கேட்டுக்கொண்டார். 1979 ஆம் ஆண்டு அதன் முதல் மாதிரி வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. பின் ஆகஸ்ட் 6 1980 ஆம் ஆண்டு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன் அது விளக்கப்பட்டது.

மின்னணு வாக்குப்பதிவு முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது என்ற செய்திகள் பரவிய உடன், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், தேர்தல் ஆணையத்திற்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்தான முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. ஒருகட்டத்தில் முன்மொழிவுகளின் எண்ணிக்கையும் அதற்கான கடிதங்களும் அதிகமான நிலையில், தேர்தல் ஆணையம் பதிலொன்றை வெளியிட்டது.

அதில், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் உற்பத்தி கடுமையான பாதுகாப்புகளின் கீழ் செய்யப்பட வேண்டிய ஒன்று. அரசாங்க நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மீது ஆணையம் முழூக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள முடியும். எனவே அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியைத் தவிர வேறு மூலங்களில் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளை அங்கீகரிக்க முடியாது என தெரிவித்தது.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன் நடத்தப்பட்ட விளக்கப்பொதுக்கூட்டத்தில், கட்சிகளின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். அவர்களது ஆலோசனைகளை ஏற்று மீண்டும் சிறு சிறு மாற்றங்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்ட்டது. இறுதியில் பிரதமர் இந்திராகாந்திக்கும் செயல்விளக்கம் தரப்பட்டது.

ஜனவரி 9 1981, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய அரசின் மற்றொரு பொதுத்துறை நிறுவனமான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்திடம் இருந்தும் மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்களைப் பெறுவதற்கான முடிவை ஆணையம் எடுத்தது. இதன்படி தேர்தல் ஆணையத்திடம் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கான ஆர்டர்கள் இரு நிறுவனத்திடம் இருந்தும் சரிசம அளவில் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்விளக் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பின்பே நாட்டிலேயே முதன்முறையாக கேரளாவில் 70 பரூர் சட்டபேரவை இடைத்தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டான.

ஆனால், அப்போதும் அதன்பின்பும் பல்வேறு வழக்குகள், விசாரணைகள், சட்டத்திருத்தம் இதையெல்லாம் கடந்துதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டது.