சிறப்புக் களம்

ஜெ. பாணியில் முதல்வர் பழனிசாமி - தொடர் சுற்றுப் பயணங்களின் திட்டம் என்ன?

ஜெ. பாணியில் முதல்வர் பழனிசாமி - தொடர் சுற்றுப் பயணங்களின் திட்டம் என்ன?

Veeramani

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்வதற்காக திருநெல்வேலி, கோயமுத்தூர், ஈரோடு,திண்டுக்கல், வேலூர் என பல மாவட்டங்களிலும் நேரடியாக சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்களின் அறிவிப்புகளையும் வெளீயிட்டு வருகிறார் முதல்வர் பழனிசாமி. இதன் மூலமாக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை முதல் ஆளாக முதல்வர் தொடங்கிவிட்டார் என்று சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

சில வாரங்களாகவே அதிமுகவில் யார் 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் முதல்வர் வேட்பாளர் என்ற சர்ச்சை நடந்து வந்தது. அதன்பிறகு ஒருவழியாக அந்த சர்ச்சையை வெளிப்படையாக முடிவுக்கு கொண்டுவந்தாலும், ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மத்தியில் உட்புறமாக இந்த சர்ச்சை ஓய்ந்தபாடில்லை.

சமூக வலைத்தளங்களில் மவுனமாக இருந்த ஓ.பி.எஸ் தற்போது மிக ஆக்டிவாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தனது ஆதரவாளர்களையும் தேர்தல் பணிகளுக்கு தயாராக இருக்கும்படி மறைமுகமாக உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த பணிகளை ஓ.பி.எஸ்ஸின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் ஒருங்கிணைப்பதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் கூறுகின்றன. மற்றொரு புறம் சசிகலா விடுதலை விரைவில் இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது, அவர் விடுதலையாகும் பட்சத்தில் அரசியல் சதுரங்கத்தின் காய்நகர்த்தல்கள் எப்படி இருக்கும் என்ற பேச்சும் அடிபட ஆரம்பித்துள்ளது. இந்த சூழலில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக கொரோனோ ஆய்வுப்பணிகள் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி என்ற பெயரில் விசிட் அடிக்க ஆரம்பித்துள்ளார்.

எப்போதுமே ஒவ்வொரு தேர்தலின் போதும் ஜெயலலிதா ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் பணிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடங்கிவிடுவார். அனைத்து கட்சிகளையும் முந்திக்கொண்டு முதல் ஆளாக வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதும் அவர்தான். அதே ஸ்டைலில் இப்போது முதல்வர் பழனிசாமி களமிறங்கியிருப்பதாகவே சொல்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சியின் செல்வாக்கு எப்படி உள்ளது, அந்தந்த மாவட்டத்தில் எதுபோன்ற வியூகங்கள் வகுத்தால் தேர்தல் வெற்றி சாத்தியமாகும், மக்களிடம் தனக்கான செல்வாக்கு எப்படி உள்ளது என்பது போன்ற எல்லா விஷயங்களையும் ஆழம் பார்க்கவே இந்த மாவட்ட சுற்றுபயணங்கள் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கு சென்று முதற்கட்ட தேர்தல் பணிகளை முடுக்கிவிடவும், அதிமுகவினரை உற்சாகப்படுத்தவும், தனக்கான அரசியல் இடத்தை உறுதிப்படுத்தவுமே இந்த சுற்றுப்பயணம் என்று அதிமுகவின் முக்கிய புள்ளிகளும் சொல்கின்றனர்.