சிறப்புக் களம்

World Beard Day: தாடி ஈஸியாக சூப்பராக வளர வேண்டுமா? - பசங்களே இது உங்களுக்குத்தான்!

World Beard Day: தாடி ஈஸியாக சூப்பராக வளர வேண்டுமா? - பசங்களே இது உங்களுக்குத்தான்!

Sinekadhara

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை உலக தாடி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாடி இல்லாதவர்களை விட இருப்பவர்களைத்தான் அதிகம் பிடிப்பதாக கூறுகின்றனர் பெரும்பாலான பெண்கள். அதனாலேயே ஸ்டைலாக அழகாக தாடி வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர் இளைஞர்கள். ஆனால் ஆசைப்படும் அனைவருக்கும் அவர்கள் விருப்பப்படியே தாடி வளர்கிறதா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மரபு வழி, உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை போன்றவை தாடி மற்றும் முடி வளர்தலுக்கு காரணமாக இருக்கிறது. இது உலகளவில் ஆண்களுக்கு உள்ள பிரச்னைகளில் பெரும்பான்மையான ஒன்றாக இருக்கிறது.

சில எளிய டிப்ஸ்கள் தாடி வளர உதவும்

சருமத்தை சுத்தம் செய்தல் மற்றும் மாய்ஸரைசர் பயன்படுத்துங்கள்

தினசரி முகத்தை கழுவி சுத்தமாக வைத்திருப்பதுடன், மாய்ஸரைசர்களை பயன்படுத்தி சுத்தமாக வைத்திருப்பது முடி வளர்வதை தூண்டும். இறந்த தோல், சேதமடைந்த மயிர்க்கால்கள், எண்ணெய் சருமம் மற்றும் அழுக்கு ஆகியவற்றால் முடிவளர்ச்சி தடைபடலாம். எனவே முகத்தை சுத்தமாக கழுவிவிட்டு இரவு தூங்கப்போகும்போது எண்ணெய் தடவி காலையில் அதனை சுத்தமாக கழுவிடவேண்டும். இதனைத் தொடர்ந்து செய்துவர முகத்தில் நல்ல முடிவளர்ச்சியை காணமுடியும்.

தாடியை வளர விடுங்கள்

அடிக்கடி தாடியை வெட்டுவதோ அல்லது ஷேப் செய்வதோ கூடாது. 4-6 வாரங்கள் தாடியை வளர விடவேண்டும். தாடி அடர்த்தியாக வளர்ந்தபிறகே அதனை ட்ரிம் செய்து முறையாக பராமரிக்க வேண்டும். அடிக்கடி ட்ரிம் செய்வதால் அதனுடைய முழுமையான மற்றும் அடத்தியான வளர்ச்சியை பார்க்கமுடியாது.

மன அழுத்தத்தை தவிருங்கள்

போதுமான தூக்கமின்மை மற்றும் அதீத மன அழுத்தம் போன்றவை முகத்தில் முடி வளர்ச்சியில் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். மன அழுத்தம் உடல் செல்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் அது சருமம் மற்றும் முடிகளின் செல்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்கள், பெண்கள் என யாராக இருந்தாலும் முடிகொட்டுதலுக்கு முக்கிய காரணம் அழுத்தம்தான் என்கையில், தாடி மட்டும் அதற்கு விதி விலக்கல்ல.

முறையான டயட்டை பின்பற்றுகள்

முடி வளர்ச்சிக்கு அனைத்துவிதமான வைட்டமின்களும் உணவில் இருப்பது மிகமிக அவசியம். வைட்டமின் ஏ, பி, சி, டி மற்றும் இ, இதனுடன் ஜிங்க், கார்போஹைட்டுகள், புரதச்சத்துகள் மற்றும் நல்ல கொழுப்புகளும் டயட்டில் இருக்கவேண்டும். மீன், சிக்கன், முட்டை, பச்சை காய்கறிகள், பால் மற்றும் முழு தானிய உணவுகள் நல்ல முடி வளர்ச்சிக்கு டயட்டில் சேர்க்கப்படவேண்டியவை.

தொடர் உடற்பயிற்சி அவசியம்

உடற்பயிற்சி உடலை கட்டுக்குள் வைக்க உதவுவது மட்டுமல்லாமல் முடி வளர்ச்சியை தூண்டும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பையும் தூண்டுகிறது. இது ஆரோக்கியமான செல்களை உற்பத்தி செய்து ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி முடிவளர்ச்சியை ஊக்குவிக்கும்.

உலகளவில் அழகான மற்றும் நீளமாக தாடி வளர்க்க பெரும்பாலானோர் க்ரீம்கள் மற்றும் விதவிதமான எண்ணெய்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும் அவர்கள் நினைத்ததை அடைய முடியாமல் துவண்டுபோகின்றனர். அவர்கள் செயற்கையாக எதை முயற்சித்தாலும் இயற்கையான முறைகளில் கவனம் செலுத்தினால் முகத்தில் நீண்ட, கருமையான தாடியை பெறலாம்.