கட்சி போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் பேனர்கள் இல்லாமல் நடைபெறும் தேர்தல் பரப்புரை - டிஜிட்டல் யுகத்தில் மக்களையும் வேட்பாளர்களையும் மொபைல் மூலம் இணைக்கும் விளம்பர நிறுவனங்களில் டப்பிங் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களில் சிலரை சந்திப்போம்.
கடந்த காலங்களில் தேர்தல் பரப்புரையின்போது தெருக்களில் சுவரொட்டிகள், சுவர்களில் வரையப்படும் விளம்பரங்கள், பிளக்ஸ் போர்டுகள் எதுவும் தற்போதைய தேர்தல் பரப்புரையின்போது அதிக அளவில் பார்க்க முடியவில்லை. மாறாக, களத்தில் நிற்கும் வேட்பாளர்களின் அன்றாட பரப்புரைகள், வாக்கு சேகரிப்பு, விளம்பரங்கள் அனைத்தும் நேரடியாக ஆண்ட்ராய்டு மொபைல் போன் மூலம் வாக்காளர்களின் கையில் சென்று சேருகிறது.
பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்படாத சாலைகள், விளம்பரங்கள் இல்லாத சுவர்கள் என தேர்தல் கால அடையாளச் சுவடுகள் எதுவும் கண்பார்வைக்கு பெரிதாக தட்டுப்படாத நிலையில், பரப்புரைகள் அனைத்தும் மக்கள் கைகளில் சென்றடையும் வகையில் டப்பிங் கலைஞர்கள் மூலம் விளம்பர ஆடியோ மற்றும் வீடியோ தயாரித்து வெளியிடுகின்றன இதற்கான தனியார் நிறுவனங்கள்.
குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில்கள் நலிவுற்று விளம்பரங்கள் தேவைப்படாத சூழல் உருவானது. இதனால் விளம்பரங்களை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திவந்த டப்பிங் கலைஞர்களுக்கும், விளம்பர நிறுவனங்களுக்கும் பொருளாதார ரீதியான பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில்தான் நடைபெறக் கூடிய சட்டப்பேரவைத் தேர்தல், டப்பிங் கலைஞர்கள் மற்றும் விளம்பர தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலைவாய்ப்பை உருவாக்கி, வருமானத்திற்கும் வழி சேர்த்துள்ளது.
இந்த டப்பிங் கலைஞர்கள் மூலம் தொகுதி மக்களின் உள்ளூர் பேச்சு வழக்கில் விளம்பரங்கள் தயாரிப்பது, வேட்பாளரின் சாதனைகளை சொல்லி விளம்பரங்கள் பேசி ஆடியோ மற்றும் வீடியோ வடிவில் தேர்தல் பரப்புரைகளை சிறிய விளம்பரமாக மாற்றி மக்களிடம் வாக்குக்கேட்டு ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களுக்கு செல்போனில் அனுப்பப்படுகிறது. இதனை உருவாக்குவதற்கு விளம்பர நிறுவனங்கள் ரூ.5000-ல் தொடங்கி வேட்பாளர்கள் கேட்கும் விளம்பர எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர். இதனால் டப்பிங் கொடுக்கும் கலைஞர்களும் இந்த தேர்தல் காலத்தில் வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். "தேர்தல் திருவிழா காரணமாக இந்த நாள்கள், எங்கள் விளம்பர நிறுவனங்களுக்கு லாபகரமான நாட்களாக மாறி இருக்கிறது" என்கின்றனர்.
"டிஜிட்டல் யுகத்தின் வேகம், அரசியல் மாற்றத்திற்கான வாய்ப்புகளை மக்களின் கைகளுக்குள் உருவாக்கித் தந்திருக்கிறது. இந்த முறை மக்களையும் மிகவும் ஈர்த்து இருக்கிறது. நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 4 மணிநேரம் வரை மக்கள் ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்துகிறார்கள் என ஆய்வுகள் சொல்கிறது. இதனை ஆதாரமாகக் கொண்டு நாங்கள் தேர்தல் விளம்பரங்களை வாட்ஸ்அப் வீடியோக்கள் மற்றும் குறும்படங்களை உருவாக்கி சோஷியல் மீடியா வழியாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்" என்கின்றனர் இதற்கான பணிகளை மேற்கொண்டுவரும் தொழில்நுட்ப வல்லுநர்கள்.
டிஜிட்டல் மீடியா வளர்ந்து நிற்கும் இந்த நேரத்தில் நடைபெறும் தேர்தல் மக்களுக்கும், அரசியல் கட்சி வேட்பாளர்களுக்கும் இடையேயான தூரத்தை மிகப்பெரிய அளவில் குறைந்து இருக்கிறது.
- நெல்லை நாகராஜன்
வீடியோ வடிவில்...