எலட்ரிகல் வங்கி PT
சிறப்புக் களம்

சார்ஜ் போட்டுக் கொண்டே போன் பேசாதீங்க..ஷாக் அடிக்கும் மின்சாரத்தோடு நாம் செய்யக்கூடாத 10 தவறுகள்!

மின்சாரம் தாக்கி சமீபத்தில் பெண் ஒருவரும், குழந்தை ஒன்றும் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.

Jayashree A

மின்சாரம் தொடர்பான அசம்பாவிதங்களை தடுக்க நாம் எவ்வித முன்னேற்பாட்டை கையாளவேண்டும் என்பதை பார்க்கலாம்.

இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் அத்தனைப் பொருட்களுக்கும் சார்ஜ் ஏற்றும் ஒரு தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. நாம் அணியும் வாட்ச், மொபைல் போன், ஹெட்ஃபோன், லேப்டாப், வாகனங்கள், சிகை அலங்கார பொருட்கள் என்று சமையல் செய்யும் உபகரணங்கள் வரை சார்ஜ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். மின்சார தேவை என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றுதான் என்றாலும், இதன் உபயோகத்தில் நாம் கையாளும் விதத்தில் இருக்கும் ஒரு அஜாக்கிரதையால் தான் இத்தகைய விபத்துக்கள் ஏற்படுகிறது.

சிலர், செல்போனில் சார்ஜ் ஏற்றிக்கொண்டே ஃபோன் பேசிக்கொண்டிருப்பார்கள். இவர்களைப் பொறுத்தவரை, விளக்கு எரிக்கும் யூனிட்டை விட ஜார்ஜ் ஏற்றும் யூனிட் அளவானது மிகக்குறைவு, ஆகையால் இந்த மின்சாரம் நம்மை ஒன்றும் செய்யாது என்று தவறான ஒரு எண்ணத்தைக் கொண்டிருப்பர்.

அதே போல் சார்ஜ் ஏற்றி முடித்ததும் சுவிட்சை ஆப் செய்யாமல், ஃபோனை எடுத்து சென்றுவிடுவர். இன்னும் சிலர், வாஷிங்மிஷினை ஆன் செய்துவிட்டு, வெளியில் சென்றுவிடுவர். கேட்டால் அதுவே ஆஃப் ஆகிக்கொள்ளும் எனக்கூறுவர். இதே போல் தான் ஒவ்வொரு செயலிலும் நாம் அஜாக்கிரதையை கையாளுகிறோம். இதனால் ஆங்காங்கே உயிர் பலி ஏற்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாம் மேற்கொள்ளும் சிலவகை நடவடிக்கைகளால் இத்தகைய விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும்.

1. குடும்பத்துடன் வெளியூர் செல்கையில் உங்கள் வீட்டில் இருக்கும் ஃபிரிஜ், ஏசி சுவிட்களை மறக்காமல் அணைத்து விட்டு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

2. எந்த ஒரு மின்சார் உபகரணத்தை பயன்படுத்திய முடித்ததும், அதன் சுவிட்சை ஆப் செய்து, கையோடு ப்ளக்கை கழற்றி விடவும்,

3. தூங்கும் முன் டீவி, லேப்டாப் போன்றவற்றை அணைத்து விட்டு கையோடு ப்ளக் பாயிண்டையும் ஆப் செய்துவிட்டு தூங்கவும்.

4. இரவில் எந்த ஒரு உபகரணத்தையும் சார்ஜில் போட்டுவிட்டு தூங்க செல்லவேண்டாம். ஏனெனில் இரவில் தான் அதிக அளவு மின்சாரம் பயன்படுத்தப்படும். அச்சமயம் சார்ஜில் போடப்பட்டிருக்கும் உபகரணங்கள் வெடிக்கும் வாய்ப்பு அதிகமுள்ளது.

5. பெட்ரோல் பங்க், மற்றும், கிட்சனில் மொபைல் போன் பயன்படுத்தாதீர்கள். மின்காந்த அலைகள் , வெடிக்கும் தனிமங்களுடன் இணைந்து விபத்து ஏற்பட அதிகளவு வாய்ப்பு உள்ளது. ஆகவே.. எங்கெங்கு, இதுகுறித்து எச்சரிக்கை பலகை காணப்படுகிறதோ அங்கெல்லாம் செல்போனை தவிர்ப்பது நலம்.

6. வீடுகளில் உபயோகமற்ற செல்போனை குழந்தைகளிடம் தரும்பொழுது அதில் இருக்கும் பேட்டரியை எடுத்துவிட்டு தருவது நல்லது.

7. எந்த ஒரு எலட்ரிக் சாதனம் உபயோகப்படுத்தும் பொழுது அல்லது வாங்கும் பொழுது, அதனுள் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரியின் தரத்தை தெரிந்துக்கொள்ளுதல் அவசியம், அதே போல் நாம் உபயோகப்படுத்தும் பேட்டரியில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக அதை மாற்றுதல் மிக அவசியம்.

8. குழந்தைகள் இருக்கும் வீடுகளில் கீழ் பகுதியில் சுவிட்ச்போர்டு உபயோகிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் நாம் செய்வதை பார்த்துக்கொண்டு திருப்பி செய்யும் குணத்தை குழந்தைகள் பெற்றிருக்கும். ஆகையால், நாம் கவனிக்காத சமயங்களில் குழந்தைகள் தன் கைகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு சுவிட்ச்போர்டில் விளையாடும், ஆகவே.. இத்தகைய சுவிட்ச்போர்டின் கனெக்‌ஷனை துண்டித்தல் நலம்.

9. மழைநேரத்தில் மின் சாதனங்களை உபயோகப்படுத்தாமல் இருப்பது நலம்.

10. வீட்டில் மற்றும் வீதியில், அல்லது அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் மின்கம்பத்தில் மின்கசிவு ஏதேனும் தெரிந்தால் உடனடியாக எலக்டீஷியனை கூட்டி வந்து அதை சரி செய்வதுடன் இருந்துவிடாமல், மின்கசிவுக்கு காரணம் என்ன என்பதை தெரிந்துக்கொண்டு அதை சரி செய்யவேண்டும்.

இத்தனை செய்திகளும் படித்து கடந்து விடுவதற்காக அல்ல... நம் வீட்டின் அருகிலோ அல்லது நமக்கு தெரிந்த அல்லது தெரியாத ஒருவர் இத்தகைய விபத்துக்களால் இறந்து வருவது நமக்கு வருத்தத்தை அளிக்கிறது. இனிமேல் இது போல் ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கத்தான் இந்த விழிப்புணர்சி. ஆகவே, நாம் மட்டுமல்லாது வளரும் சந்ததியினருக்கும் மின்சாரத்தை பற்றிய புரிதலை ஏற்படுத்துவது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.