சிறப்புக் களம்

முகக்கவசம் அணிவதால் உடலில் ஆக்சிஜன் கிடைக்கும் அளவு குறையுமா? - மருத்துவர் விளக்கம்

முகக்கவசம் அணிவதால் உடலில் ஆக்சிஜன் கிடைக்கும் அளவு குறையுமா? - மருத்துவர் விளக்கம்

webteam

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் மிகமுக்கிய கவசமாக இருப்பது முகக்கவசம். நாட்டில் கிட்டத்தட்ட 90 சதவீத மக்களுக்கு, முகக்கவசம் அணிந்து வெளியே வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பது ஆறுதல் தரும் விஷயமாக இருந்தாலும்கூட, முகக்கவசம் அணிவது தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் என்னவோ இன்னும் தீர்ந்தபாடில்லை.

அண்மை காலமாக சமூகவலைத்தளங்களில் உலாவும் சில வீடியோக்களில், முகக்கவசம் அணிவதால் உடலுக்கு கிடைக்கும் ஆக்சிஜன் அளவு குறைவதாகவும், இவை கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்திலும் பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் கருத்துகள் மீண்டும் மக்கள் மனதில் முகக்கவசம் அணிவது குறித்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் இது தொடர்பான சந்தேகத்தை, மருத்துவர் பழனியப்பன் மாணிக்கத்திடம் முன்வைத்தோம். இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், “ஆம் நானும் நீங்கள் குறிப்பிட்டது போன்ற வீடியோக்களை சமூகவலைதளங்களில் பார்த்தேன். அவையெல்லாம் வெறும் புரளிகள். ஒருவர் பேசும் போதோ, தும்மும் போதோ வெளிப்படுகிற நுண் திரவ திவலைகளின் வாயிலாக இன்னொருவருக்கு கொரோனா வைரஸ் பரவுகிறது. இப்படி பரவும் நீர் திவலைகள் 6 அடி முதல் 12 அடி வரை காற்றில் பரவும். அப்படி பரவும் நீர் திவலைகளின் சிறு நுண் துளி கூட நமது உடலில் கொரோனா வைரஸை பரவச் செய்திடும்.

அதை தடுப்பதற்காகத்தான் முகக்கவசம் அணிவதை இவ்வளவு வற்புறுத்தி கூறுகிறார்கள். இதில் N-95 முகக்கவசத்தை அதிகபட்சமாக பரிந்துரைப்பதற்கான காரணம் என்னவென்றால், இந்த வகையான முகக்கவசங்கள் 95 சதவீதம் கிருமிகளிடம் இருந்து நமக்கு பாதுகாப்பை தரவல்லது.

முகக்கவசம் அணிவதால் உடலுக்கு கிடைக்கிற ஆக்சிஜன் அளவிலோ, வெளியேறுகிற கார்பன் - டை ஆக்சிஜன் அளவிலோ எந்த மாற்றமும் இருக்காது. ஆகையால் முகக்கவசத்தை எந்தவித சந்தேகம் இல்லாமல் அணியலாம்.முகக்கவசம் அணிவதில் இருக்கிற ஒரு முக்கியமான விஷயம், முகக்கவசம் ஈரமானால் அந்த முகக்கவசத்தை மாற்றிவிட வேண்டும். ஏன் என்றால் முகக்கவசத்தில் உள்ள ஈரப்பதத்தின் காரணமாக கொரோனா வைரஸ் பரவும்” என்றார்.

முன்னதாக மருத்துவர் பழனியப்பன் மாணிக்க புதியதலைமுறைக்கு பிரேத்யமாக கொடுத்த நேர்காணல்>> 

- கல்யாணி பாண்டியன்