சிறப்புக் களம்

ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறதா? - ஆய்வில் அதிர்ச்சி!

ஃபேர்னஸ் க்ரீம் பயன்படுத்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறதா? - ஆய்வில் அதிர்ச்சி!

Sinekadhara

அழகு என்பது நிறத்தில் இல்லை என்று அழுத்தமாக கூறினாலும், பலரின் மனநிலை மாறுவதில்லை என்பதே உண்மை. நிறத்தை கூட்டவேண்டும் என்பதற்காக மருத்துவரின் பரிந்துரையின்றி மெடிக்கல்களில் கிடைக்கும் பல்வேறு ஃபேர்னஸ் க்ரீம்களையும் வாங்கி அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி பல்வேறு சரும பிரச்னைகளுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. உடனடியாக ரிசல்ட் தெரியவேண்டும் என்பதற்காக இதுபோன்ற ஃபேர்னெஸ் க்ரீம்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மற்றும் அவற்றின் அளவை பற்றி யாரும் கவலைப்படுவதே இல்லை. இதனால் சருமம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளும் பாதிக்கப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா?

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தைச் சேர்ந்தவர் விபா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 20 வயதான விபா பயோடெக் மாணவி ஆவார். இவர் ஒரு பியூட்டிஷியனின் அறிவுறுத்தலின்பேரில் ஃபேர்னெஸ் க்ரீம் ஒன்றை வாங்கி பயன்படுத்தியுள்ளார். ஒருசில நாட்களிலேயே சருமம் பளபளப்பானதுடன், நிறமும் கூடியதாக உடனிருந்தவர்கள் கூறியதைக் கேட்டு பரவசமடைந்துள்ளார் விபா. இதனைப் பார்த்த விபாவின் அக்கா மற்றும் அம்மா இருவரும் அந்த க்ரீமை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நல்ல ரிசல்ட் கிடைக்கவே குடும்பமே மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

குளோமெருலோனெப்ரிடிஸ் 

ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு, 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விபாவிற்கு குளோமெருலோனெப்ரிடிஸ் என்ற சிறுநீரக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதாவது சிறுநீரகத்திலுள்ள நுண்ணிய வடிகட்டிகள் சேதமடைந்துள்ளது. விபாவிற்கு மட்டுமல்ல; அவரது தாய் மற்றும் சகோதரி இருவருக்கும் இதே பிரச்னை உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

பரேலிலுள்ள கெம் மருத்துவமனையின் மருத்துவர்கள் மூவருக்கும் ஒரே சமயத்தில் ஒரே பிரச்னை எதனால் ஏற்பட்டது என்பதை தெரிந்துகொள்ள பலமணி நேரம் விபா மற்றும் குடும்பத்தாரிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்ததுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டனர். அதில் ஒருவழியாக இந்த பெண்கள் பயன்படுத்திய மேக்-அப் க்ரீம் தான் சிறுநீரக பிரச்னைக்கு வழிவகுத்தது தெரியவந்தது.

அந்த க்ரீமை பரிசோதித்ததில் மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதற்கு காரணம், சரும க்ரீமில் இருக்கவேண்டிய அளவைவிட 1000 மடங்கு மெர்குரி இருந்ததுதான் என்கிறார் கெம் மருத்துவமனையின் மருத்துவர் ஜமாலே. பொதுவாக ஒரு நபரின் ரத்தத்தில் மெர்குரியின் அளவு 7க்கும் குறைவாக இருக்கவேண்டும். ஆனால் விபாவின் ரத்தத்தில் இருந்த மெர்குரியின் அளவு 46 என்கிறார்.

மெர்குரியும் சிறுநீரக பிரச்னையும்

மெர்குரி என்பது மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு உலோக நச்சுப்பொருள். இது கருமைக்கு காரணமான சரும மெலனோசைட்டுகளை கட்டுப்படுத்துவதால் சரும ப்ளீச்சிங் க்ரீம்களில் பயன்படுத்தப்படுகிறது. அளவுக்கு அதிகமான மெர்குரி நிறைந்த க்ரீமை பயன்படுத்தியதால் அது சிறுநீரகத்தை பாதித்திருக்கிறது என்று விளக்கியுள்ளார் ஜமாலே. விபாவின் தாய் மற்றும் சகோதரி ஒருவழியாக குளோமெருலோனெப்ரிடிஸ் பிரச்னையிலிருந்து குணமாகிவிட்டனர். ஆனால் விபா இன்னும் முற்றிலும் குணமடையவில்லை என்கிறார் அவர்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களில் கடுமையான உலோகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது நமக்கு தெரியாததல்ல. இருப்பினும் எந்த க்ரீம் அல்லது மேக்-அப் பொருட்களை வாங்கினாலும் அதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் கலவைகள் மற்றும் அவற்றின் அளவை தெரிந்து வாங்கி பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக சரும மருத்துவரின் ஆலோசனை பெற்றே இதுபோன்ற க்ரீம்களை பயன்படுத்தவேண்டும்.