சிறப்புக் களம்

இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா?

இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா?

Sinekadhara

இரவு நேரங்களில் அதிகமாக சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்குமா? என்பது பற்றி நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறிப்பிட்ட நேரங்களில் சாப்பிடும் உணவு உடல் எடையை அதிகரிக்க காரணமாக அமைந்துவிடும் என்று பலரும் சொல்லி கேட்டிருக்கிறோம். குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் முடித்துவிட வேண்டும்; இல்லாவிட்டால உடல் எடை கூடிவிடும் என்று சொல்வதுண்டு. உண்மையிலேயே இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடல் எடை கூடிவிடுமா என்பது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

இது பலருக்கும் இருக்கும் சந்தேகம்தான் என்கின்றனர் நிபுணர்கள். அடிப்படையில் இது ஒரு தவறான புரிதல். நாம் கண் விழித்திருக்கும் நேரங்களில் மட்டுமல்ல; எல்லா நேரங்களிலுமே நம் உடலுக்கு ஆற்றல் தேவைப்படுகிறது. நாம் தூங்கும்போதுகூட உடலில் ரத்த ஓட்டம், நுரையீரல் செயல்பாடு மற்றும் மூளை செயல்பாட்டிற்காக நமது உடலில் கலோரிகள் எரிக்கப்படுகிறது. இது உடல் எடையை கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்யாது. ஆனால் நாள் முழுவதும் எவ்வளவு சாப்பிடுகிறோம் அதை எவ்வாறு செலவிடுகிறோம் என்பதுதான் உடல் எடையை தீர்மானிக்கிறது.

இரவு நேரங்களில் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

உடலில் மெட்டபாலிசம் என்பது ஒரு சிக்கலான செயல்முறை. நாள் முடியும்போது உடலின் மெட்டபாலிசம் குறைந்துவிடும்; அதனால் கலோரிகள் எரிக்கப்படாது என்று பலர் நினைக்கின்றனர். ஆனால் மெட்டபாலிசம் குறைந்தாலும், அதன் இயக்கம் முற்றிலுமாக தடைபட்டுவிடாது என்கின்றனர் நிபுணர்கள். அதேசமயம் இரவில் உட்கொள்ளும் கலோரிகள் மெட்டபாலிசத்தை மாற்றப்போவதில்லை அல்லது பகல்நேரத்தில் உட்கொண்ட கலோரிகளின் அளவை குறைப்பதுமில்லை என்கின்றனர்.

மேலும் இரவுநேரத்தில் சாப்பிடுவது மட்டும் உடல் எடை கூடுவதற்கு காரணமில்லை என ஆய்வுகள் கூறுகிறது. தினசரி உடலுக்குத் தேவையான கலோரிகளை மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும். நிறையப்பேர் இரவு நேரத்தில் தூக்கம் வராமல் சலிப்பாக இருக்கிறதே என்று, சாப்பிடுவார்கள். மேலும் பெரும்பாலும் இரவு நேரத்தில் பீட்சா, பர்கர், சிப்ஸ் மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளான கலோரிகள் அதிகமான உணவுகளையே சாப்பிடத் தோன்றும். மேலும் மன பதட்டம் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும்.

உணவு சாப்பிடுவது என்பது வங்கிக் கணக்குப் போன்றதுதான். ஒரு நாளில் எவ்வளவு சாப்பிடுகிறோமோ அவ்வளவு கலோரிகள் உடலில் சேர்ந்திருக்கும். அதை அந்த நாளிலேயே செலவிட்டுவிட்டால் அது எடையாக மாறாது. அதாவது இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிட்டால் அதை பகல்நேர உணவில் சரிசெய்ய வேண்டும். அதாவது கலோரிகளை எரிக்கும் அளவிற்கு உடலுழைப்பு அவசியம். உடற்பயிற்சி செய்தோ அல்லது பகல்நேர உணவைக் கட்டுப்படுத்தியோ அந்த கலோரிகளை சமன்செய்துகொள்ளலாம் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

உணவு எடுத்துக்கொள்வது உடல் எடையைக் கூட்டுகிறது என்பதைவிட, உட்கொண்ட கலோரிகள் எரிக்கப்படுகிறதா என்பதுதான் உடல் எடையை தீர்மானிக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.